Friday 30 October 2015

செய்திகள் - 30.10.15

செய்திகள் - 30.10.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: மனித துயரங்களில் இறைவன் தன்னையே இணைத்துக் கொள்கிறார்

2. திருத்தந்தை: மறைசாட்சிகள், வெறும் நினைவுச் சின்னங்கள் அல்ல

3. எல் சால்வதோர் பிரதிநிதிகள் குழு திருத்தந்தையுடன் சந்திப்பு

4. சாந்தா மார்த்தா அமைப்பை பாராட்டிய திருத்தந்தை

5. அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாள் - திருத்தந்தையின் திருப்பலி

6. அமைதியின்றி, யாருக்கும் நம்பிக்கை இல்லை - கர்தினால் பிலோனி

7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கத்தோலிக்கத் தலைவர்களின் விண்ணப்பம்

8. மரியாதையே தொடர்புகளை வளர்க்கும் வழி - வசாயி பேராயர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: மனித துயரங்களில் இறைவன் தன்னையே இணைத்துக் கொள்கிறார்

அக்.30,2015. கடவுளின் இரக்கமும், கருணையும் பிறரைக் கண்டு பரிதாபப்படுவதோடு நின்றுவிடும் தன்மை கொண்டதல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்றைய மறையுரையில் குறிப்பிட்டார்.
இறந்துகொண்டிருக்கும் ஒரு நாயின் மீது நாம் காட்டும் இரக்கத்திற்கும், இறைவன் நம்மீது கொள்ளும் இரக்கத்திற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன என்று இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, மனிதர்கள் படும் துயரங்களில் இறைவன் தன்னையே இணைத்துக் கொள்ள விழைந்ததால், அவர் இவ்வுலகிற்கு தன் மகனை அனுப்பினார் என்று, இறை இரக்கத்தை விளக்கிக் கூறினார்.
இறை தந்தையால் அனுப்பப்பட்ட இயேசுவும், மக்களின் துயரங்களில் தன்னையே இணைத்துக் கொண்டதால் அவர்களது நோய்களை குணமாக்கினார் என்று கூறியத் திருத்தந்தை, அருள்பணியாளர்களும், இயேசுவைப் போல, மக்கள் வாழ்வில் தங்களையே இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இவ்வெள்ளி காலை திருப்பலியில் கலந்துகொண்ட, கர்தினால் ஹாவியேர் லொசானோ பர்ரகன் (Javier Lozano Barragan) அவர்கள் தன் குருத்துவப் பணியில் 60 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, திருப்பீடத்தின் நலப்பணி அவையின் பணிகள் வழியே, இறைவனின் இரக்கத்தை கடந்த 60 ஆண்டுகளாகப் பறைசாற்றிவந்துள்ள கர்தினால் பர்ரகன் அவர்களைப்  பாராட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை: மறைசாட்சிகள், வெறும் நினைவுச் சின்னங்கள் அல்ல

அக்.30,2015. இயேசுவின் உன்னத தியாகத்தின் அடையாளமான திருப்பலியை ஆற்றிய வேளையில், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் உயிர் துறந்தது, அவரது தியாக வாழ்வுக்கு ஒரு சிறந்த அடையாளம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
எல் சால்வதோர் நாட்டிலிருந்து உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 500க்கும் அதிகமான பிரதிநிதிகளை இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, சான் சால்வதோர் பேராயராக பணியாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அருளாளராக உயர்த்தப்பட்டது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டார்.
மறைசாட்சிகளின்  இரத்தம், கிறிஸ்தவத்தின் விதை என்று தெர்த்துல்லியன் கூறியதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மறைசாட்சிகள், நினைவுச் சின்னங்களாக விளங்குவதைக் காட்டிலும், நம் வாழ்வுக்கு வழிகாட்டிகளாக இருப்பதே பொருளுள்ளது என்று எடுத்துரைத்தார்.
அருளாளர் ரொமேரோவும், அவருக்கு உற்ற துணையாக இருந்த அருள்பணி ருத்திலியோ கிராந்தே அவர்களும் எல் சால்வதோர் நாட்டு மக்களை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பல இன்னல்களையும், சவால்களையும் சந்தித்துவரும் எல் சால்வதோர் மக்களுக்கு, நெருங்கிவரும் இரக்கத்தின் சிறப்பு ஜுபிலி ஆண்டு, அருள் வழங்கும் ஆண்டாக அமையவேண்டும் என்ற ஆவலை, திருத்தந்தை தன் உரையில் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. எல் சால்வதோர் பிரதிநிதிகள் குழு திருத்தந்தையுடன் சந்திப்பு

அக்.30,2015. அண்மையில் அருளாளராக உயர்த்தப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களை, புனிதராக உயர்த்துமாறு கோரும் விண்ணப்பத்துடன், எல் சால்வதோர் நாட்டின் தலத்திருஅவை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுநிலையினர் அடங்கிய 500 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வெள்ளி காலை திருத்தந்தையைச் சந்தித்தது.
இவ்வாண்டு மே மாதம் 23ம் தேதி அருளாளராக உயர்த்தப்பட்ட ரொமேரோ அவர்களை புனிதராக உயர்த்தும் வழிமுறைகள் வத்திக்கானில் துவங்கியுள்ளன என்றும், ரொமேரோ அவர்களின் புனிதர் பட்ட நிகழ்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துவது, எல் சால்வதோர் மக்களின் கனவு என்றும், சான் சால்வதோர் பேராயர் José Luis Escobar Alas அவர்கள் கூறினார்.
மேலும், அருளாளர் ரொமேரோ அவர்களின் நெருங்கிய நண்பரும், எல் சால்வதோர் நாட்டின் அடக்குமுறை அரசால் கொல்லப்பட்டவருமான இயேசு சபை அருள் பணியாளர் ருத்திலியோ கிராந்தே அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகளையும் சான் சால்வதோர் உயர் மறைமாவட்டம் மேற்கொண்டுள்ளது என்று பேராயர் Escobar Alas அவர்கள் தெரிவித்தார்.
திருத்தந்தையைச் சந்தித்த பிரதிநிதிகள் குழுவில், எல் சால்வதோர் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுகோ மார்த்தினெஸ் அவர்களும், ஏனைய அரசுத் தலைவர்களும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சாந்தா மார்த்தா அமைப்பை பாராட்டிய திருத்தந்தை

அக்.30,2015. இன்றைய காலத்தின் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் சாந்தா மார்த்தா அமைப்பை பாராட்டுகிறேன் என்ற வார்த்தைகள் அடங்கிய ஒரு வாழ்த்துச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.
சாந்தா மார்த்தா என்ற அமைப்பினர், ஸ்பெயின் நாட்டில் புனித இலாரன்ஸ் துறவற மடத்தில் மேற்கொண்டுள்ள ஒரு கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், வெகு குறைந்த காலத்தில் இவ்வமைப்பினர் ஆற்றியுள்ள அர்த்தமுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளார்.
குழந்தைகள், சிறார் படைவீரர்களாகவும், போர்க்களங்களில் வேறு பல பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதை, 2025ம் ஆண்டுக்குள், அனைத்துலகிலும் ஒழிப்பதற்கு அரசுகள் முடிவெடுத் துள்ளதை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இம்முயற்சியில் மனித சமுதாயம் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகின் 193 நாட்டு அரசுகள் நவீன அடிமைத்தனத்தை ஒழிக்க சட்டங்களை வகுத்துள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அரசுகளின் முயற்சிகளுக்கு சாந்தா மார்த்தா அமைப்பைப் போன்று பல அமைப்புக்கள் உறுதுணையாகச் செயலாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் கூறியுள்ளார்.
சாந்தா மார்த்தா அமைப்பு என்பது, பன்னாட்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயர்கள் ஆகியோரைக் கொண்ட ஓர் அமைப்பு. இதன் தலைவராக, வெஸ்ட்மின்ஸ்டெர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2014ம் ஆண்டு வத்திக்கானில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த 24 நாடுகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்கியிருந்ததால், அவ்வில்லத்தின் பெயரையே தங்கள் அமைப்பிற்கு பெயராக தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாள் - திருத்தந்தையின் திருப்பலி

அக்.30,2015. வருகிற நவம்பர் 2ம் தேதி, அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாள் கொண்டாடப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் முதல் தேதி மாலை 4 மணிக்கு உரோம் நகரில் அமைந்துள்ள வெரானோ (Verano) கல்லறை தோட்டத்தில் திருப்பலியாற்றி, அங்குள்ள கல்லறைகளை அர்ச்சிப்பார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
மேலும், வருகிற நவம்பர் 10ம் தேதி, இத்தாலியின் தொஸ்கானா மாநிலத்தின் தலைநகர் பிளாரன்ஸ் மற்றும் பிராத்தோ ஆகிய இடங்களில் திருத்தந்தை மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இவ்வியாழனன்று அறிவித்தது.
நவம்பர் 10ம் தேதி காலை 7 மணிக்கு வத்திக்கானிலிருந்து புறப்படும் திருத்தந்தை, பிராத்தோ எனுமிடத்தில் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.
பின்னர், பிளாரன்ஸ் நகரில் அமைந்துள்ள நகரச் சதுக்கத்தில் இத்தாலியத் தலத்திருஅவை மாநாட்டில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, அருகிலுள்ள அன்னை மரியா பசிலிக்காவில் நோயுற்றோரைச் சந்தித்தபின், வறியோர் சிலருடன் மதிய உணவருந்துகிறார்.
மாலை மூன்று மணியளவில் பிளாரன்ஸ் நகரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் திருப்பலியாற்றும் திருத்தந்தை, மாலை 6 மணியளவில் உரோம் நகர் வந்தடைகிறார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

6. அமைதியின்றி, யாருக்கும் நம்பிக்கை இல்லை - கர்தினால் பிலோனி

அக்.30,2015. அமைதியின்றி, யாருக்கும் நம்பிக்கை இல்லை என்று, திருப்பீட உயர் அதிகாரிகளில் ஒருவரான, கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் கூறினார்.
நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர், கர்தினால் பிலோனி அவர்கள், "ஈராக் திருஅவை: வரலாறு, முன்னேற்றம், திருப்பணி" என்ற தலைப்பில், எழுதியுள்ள நூலை இப்புதனன்று வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.
2001ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு முடிய, ஈராக் மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகளில், திருப்பீடத்தின் தூதராகப் பணியாற்றிய கர்தினால் பிலோனி அவர்கள், கடந்த 1000 ஆண்டுகளாக அந்நாடுகளில் தழைத்துவந்த கிறிஸ்தவத்தைக் குறித்து தன் நூலில் எழுதியுள்ளார் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்நூலின் அரேபிய மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள் அறிவித்துள்ளதாக Fides செய்தி மேலும் கூறியுள்ளது.
அண்மையில் வத்திக்கானில் நிறைவுற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கர்தினால்கள், ஆயர்கள் பலர் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கத்தோலிக்கத் தலைவர்களின் விண்ணப்பம்

அக்.30,2015. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, சமுதாய நீதி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தோடு தொடர்புடையது என்பதால், மனித முன்னேற்றம், வாழ்க்கை முறை ஆகிய எண்ணங்களை மறு பரிசீலனை செய்து, மாற்று இலக்கணம் வகுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை, ஐந்து கண்டங்களைச் சார்ந்த கர்தினால்கள், முதுபெரும் தந்தையர் மற்றும் ஆயர்கள் விடுத்துள்ளனர்.
பாரிஸ் மாநகரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 முடிய நடைபெறவிருக்கும் “COP21” எனப்படும் சுற்றுச்சூழல் உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்து அரசு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய கண்டங்களைச் சார்ந்த கத்தோலிக்கத் தலைவர்கள் இந்த விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.
சுற்றிச்சூழல் பாதுக்காப்பையும், வறியோரின் வாழ்வு மேம்பாட்டையும் இணைத்து, கர்தினால்களும், ஆயர்களும் விடுத்துள்ள இந்த விண்ணப்பத்தில் 10 கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தை தொழில்நுட்ப கண்ணோட்டத்துடன் மட்டும் காணாமல், அதை, ஒரு சமுதாய சவாலாகவும், நன்னெறி கண்ணோட்டத்துடனும் அணுகுமாறு, மதத்தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வறியோர், மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் கருத்துக்களுக்குச் செவிமடுத்து, உலக உச்சி மாநாட்டின் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று கர்தினால்களும், ஆயர்களும் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. மரியாதையே தொடர்புகளை வளர்க்கும் வழி - வசாயி பேராயர்

அக்.30,2015. அடுத்தவருக்கு உரிய மரியாதையை வழங்குவது ஒன்றே, ஆசிய நாடுகளில் தொடர்புகளை வளர்க்கும் வழி என்று, இந்தியாவின் வசாயி உயர் மறைமாவட்டத்தின் பேராயர், பீலிக்ஸ் அந்தொனி மச்சாடோ அவர்கள் கூறினார்.
"கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு" என்ற கருத்தை மையப்படுத்தி, Nostra Aetate என்ற பெயருடன், இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, பேராயர் மச்சாடோ அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.  
மனிதர்கள் மீதும், மனித உயிர்களின் புனிதத்துவம் மீதும் நம்பிக்கையில்லாமல், இயேசுவின் நற்செய்தியை இவ்வுலகில் பறைசாற்ற முடியாது என்று, ஆசிய ஆயர்கள் பேரவையின், பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர், பேராயர் மச்சாடோ அவர்கள் கூறினார்.
1965ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி Nostra Aetate சங்க ஏடு வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 28, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பொது மறைக்கல்வி உரையின்போது, பல்சமய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...