Wednesday, 28 October 2015

செய்திகள் - 28.10.15

செய்திகள் - 28.10.15
------------------------------------------------------------------------------------------------------

1. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு

2. புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் பல்சமயப் பிரதிநிதிகள்

3. கத்தோலிக்க கல்வி பேராயத்தில் புதிய அமைப்பு

4. மிலான் திருத்தூதுப் பயணம் 2016, மே 7

5. குடிபெயர்வோர், சனநாயகத்தின் தரத்திற்கு உயிருள்ள சான்றுகள்

6. மதிப்பீட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் புதிய கல்விக் கொள்கைகள்

7. வேளாங்கண்ணியை மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

8. சிங்கப்பூரில் பகிர்ந்து வாழும் கிராமம்

------------------------------------------------------------------------------------------------------

1. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு

அக்.28,2015. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும்  செபிப்போம் என்று, இப்புதன் பொது மறைக்கல்வி உரையில் பங்குபெற்ற ஆயிரக்கணக்கான பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விரு நாடுகளிலும் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் எண்ணற்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளதையும் இப்புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்னர் குறிப்பிட்ட திருத்தந்தை, தெளிவான செயல்கள் வழியாக, இம்மக்களுக்கு நம் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவோம் என்றும் கூறினார்.
மேலும், கடும் நிலநடுக்கத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து பாகிஸ்தான் திருப்பீடத் தூதர் பேராயர் Ghaleb Bader அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் இச்செவ்வாயன்று தந்திச் செய்தி ஒன்றை அனுப்பினார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் தனது செபத்தைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலையில் இச்செவ்வாய் பிற்பகல் 2.20 மணிக்கு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள பதாக்ஷன் மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டது. இச்சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் பாதிப்பு உண்டாகியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் பல்சமயப் பிரதிநிதிகள்

அக்.28,2015. கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு பற்றிய விதித்தொகுப்பான Nostra Aetate என்ற ஏடு வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தையின் இப்புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர் திருப்பீட உயர் அதிகாரிகள்.
இந்த ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்சமயப் பிரதிநிதிகளுடன், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் பங்கேற்ற  பல்சமய உரையாடல் அவைத் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran, மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch ஆகிய இருவரும் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர்.
உலகில் அநீதிகளையும் சமத்துவமின்மைகளையும் களைந்து, அமைதிக்காக உழைக்கவும், நம் பொதுவான இல்லத்தைப் பராமரிக்கவும் திருத்தந்தை தொடர்ந்து விடுத்துவரும் அழைப்புக்கும், ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்த கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், அமைதிக்காகச் செபிப்போம் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
மேலும், இப்புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் நன்றி தெரிவித்த கர்தினால் Kurt Koch அவர்கள், இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ள யூத சமூகப் பிரதிநிதிகளின் சார்பில் தான் பேசுவதாகத் தெரிவித்தார்.
மீட்பு வரலாற்றில் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் ஒன்றிப்பின் ஒளியில், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கம்,  கிறிஸ்தவ விசுவாசத்தின் யூத மூலங்களை வலியுறுத்துகிறது, இன்னும், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும், இடையே நிலவும் பொதுவான மாபெரும் ஆன்மீக மரபையும் ஏற்கிறது என்று கூறினார், கர்தினால் Koch.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கத்தோலிக்க கல்வி பேராயத்தில் புதிய அமைப்பு

அக்.28,2015. உலகின் கத்தோலிக்க கல்வியில் அறிவியல் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக, திருப்பீடத்தின் கத்தோலிக்க கல்வி பேராயத்தில் ஒரு புதிய அமைப்பை இப்புதனன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Gravissimum educationis என்ற கிறிஸ்தவக் கல்வி குறித்த அறிக்கை அறிவிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு இப்புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்துள்ளார் திருத்தந்தை.
1965ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தால் Gravissimum educationis என்ற கிறிஸ்தவக் கல்வி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டதை மகிழ்வோடு நினைவுகூரும் இவ்வேளையில், இப்புதிய அமைப்பை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கல்விக்கு மனிதருடைய வாழ்வில் இருக்கும் மாபெரும் முக்கியத்துவத்தையும், இன்றைய சமூக முன்னேற்றத்தில் பெருகிக் கொண்டே வரும் அதன் செல்வாக்கையும் திருஅவை அறிந்துள்ளது, நிறைவாழ்வின் இறைத்திட்டத்தை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவும், அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் ஒன்று சேர்க்கவும், தன்னை நிறுவிய கடவுளிடமிருந்து திருஅவை கட்டளை பெற்றுள்ளது என்பதும் திருத்தந்தையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்துவின் படைகள் Legionaries of Christ துறவு சபை தொடங்கப்பட்டதன் 75ம் ஜூபிலி ஆண்டை முன்னிட்டு, பரிபூரண பலன் சலுகையை, அப்போஸ்தலிக்க பாவமன்னிப்பு சலுகை நிறுவனத்தின் வழியாக இப்புதனன்று வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துவின் படைகள் சபை மற்றும் Regnum Christi என்ற அனைத்துலக கத்தோலிக்க இயக்கம் நிறுவப்பட்டதன் 75ம் ஆண்டு கொண்டாட்டங்கள் 2016ம் ஆண்டு இயேசுவின் திரு இதய விழாவன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மிலான் திருத்தூதுப் பயணம் 2016, மே 7

அக்.28,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு மே 7ம் தேதி, இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டத்திற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, மிலான் உயர்மறைமாவட்ட பேராயர், கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா அவர்கள் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்புரோசியானம் வழிபாட்டுமுறை திருஅவையுடன் கொண்டிருக்கும் பாசத்தின் ஓர் அடையாளமாகவும், லொம்பார்தியா மாநில மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்கு உதவுவதாகவும் இத்திருத்தூதுப் பயணம் அமையும் என்றும் கூறியுள்ளார், கர்தினால் ஸ்கோலா.
வருகிற டிசம்பர் 8ம் தேதி ஆரம்பிக்கும் இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு, உண்மை மற்றும் பிறரன்பில், எல்லா வயதினருக்கும், எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்கும், அனைத்துக் கலாச்சார மக்களுக்கும் திருஅவையின் அன்பை வெளிப்படுத்துவதாய் இருக்கும் என்றும், கர்தினால் ஸ்கோலா அவர்கள், மிலான் உயர்மறைமாவட்ட இணையதளத்தில் கூறியுள்ளார்.
திருஅவையில் சமூகத்தில் ஓரங்கட்டப்படவர்கள் மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதற்கேற்ப, மிலான் உயர்மறைமாவட்டம் செயல்பட்டு வருகிறது என்றும் அறிவித்தார் கர்தினால் ஸ்கோலா.
இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரமான மிலானில் அமைந்துள்ள உயர்மறைமாவட்டம், அம்புரோசியானம் வழிபாட்டுமுறையைப் பின்பற்றுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. குடிபெயர்வோர், சனநாயகத்தின் தரத்திற்கு உயிருள்ள சான்றுகள்

அக்.28,2015. இன்றைய சமுதாயத்தின் பன்மைக் கலாச்சாரப் பண்பு, மக்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கு அவசியமான விழுமியங்கள் ஆழப்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டியதை வலியுறுத்துகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற அனைத்துலக நிறுவனக் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளும் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், குடிபெயர்வோரும் நகரங்களும் என்ற தலைப்பில் அனைத்துலக குடிபெயர்வோர் நிறுவனம் (IOM) நடத்திய கருத்தரங்கில் இச்செவ்வாயன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
குடிபெயர்வோர், சனநாயகத்தின் தரத்திற்கு உயிருள்ள சான்றுகளாய் மாறியுள்ளார்கள் என்றும், குடிபெயர்வோருக்கு ஆதரவான கொள்கைகள், சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட விழுமியங்கள் குறித்து சிந்திப்பதற்கு சிறப்பாக அழைப்பு விடுக்கின்றன என்றும், பேராயர் தொமாசி அவர்கள் கூறினார்.
குடிபெயர்வோர், குடிபெயரும் நகரங்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு வழங்கிவரும் நன்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் தொமாசி அவர்கள், குடிபெயர்வோரை ஏற்கும் நாடுகள், அவர்களால் பெறுகின்ற நன்மைகளை, அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியதையும் நினைவுபடுத்தினார்.
2014ம் ஆண்டில் உலக மக்களில் 54 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் நகரங்களில் வாழ்ந்தனர், இம்மக்களின் எண்ணிக்கை 2050ம் ஆண்டில் இருமடங்காகி, 640 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறினார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மதிப்பீட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் புதிய கல்விக் கொள்கைகள்

அக்.28,2015. இந்தியாவில், மதிப்பீட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் புதிய கல்விக் கொள்கைகள் அமைக்கப்படுமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
இந்தியாவில் தற்போதைய கல்வி அமைப்பில், அறநெறிக் கூறுகள் குறைபடுகின்றன என்றுரைக்கும் கத்தோலிக்கத் திருஅவை, கல்வித் துறையில் அமைக்கப்படும் புதியக் கொள்கைகள், நாட்டின் பன்மைத்தன்மை மற்றும் சமயச்சார்பற்ற பண்பை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்திய மத்திய அரசு, அடுத்த இரு மாதங்களில் புதிய கல்விக் கொள்கைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் சகிப்பற்றதன்மை அதிகரித்து வருவதால், நாட்டின் புதிய கல்வி அமைப்பு, மதிப்பீட்டுக் கல்வியில் கவனம் செலுத்துவதாயும், அரசியல் அமைப்பு விழுமியங்கள் காக்கப்படுவதற்கு உறுதி வழங்குவதாயும் இருக்கவேண்டும் என்று கேட்டுள்ளார் இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார பணிக்குழு செயலர் அருள்பணி Joseph Manipadam.
இந்திய கத்தோலிக்கத் திருஅவை, இந்தியாவில் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. வேளாங்கண்ணியை மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

அக்.28,2015. தமிழகத்தின் வேளாங்கண்ணி உட்பட, இந்தியா முழுதும், எட்டு பாரம்பரிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் செயல் திட்டத்துக்கு, மத்திய அரசு இச்செவ்வாயன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்காக, 'ஹிருதய்' (HRIDAY) எனப்படும், பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்ற, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த, எட்டு சுற்றுலா தலங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு 431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேளாங்கண்ணி; உத்தர பிரதேசத்தில் வாரணாசி, மதுரா; இராஜஸ்தானில் ஆஜ்மீர்; குஜராத்தில் துவாரகா; கர்நாடகாவில் பதாமி; தெலுங்கானாவில் வாரங்கல்; ஆந்திராவில் அமராவதி ஆகிய நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
இந்நகரங்களில், 'ஹிருதய்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மதுசூதன பிரசாத் தலைமையில், டில்லியில் இச்செவ்வாயன்று நடந்தது. இதில், சம்பந்தபட்ட மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த அறிக்கையையும், மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் அளித்தனர்.
இத்திட்டத்தின்கீழ், இயற்கை வளங்கள் பாதுகாத்து பராமரிக்கப்படும், போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும், திடக்கழிவு மேலாண்மை மூலம் சுகாதார வசதி ஏற்படுத்தப்படும்,  மொழிபெயர்ப்பு மையங்கள் அமைக்கப்படும், பாரம்பரிய சின்னங்கள், அதன் பழமை மாறாமல் சீரமைக்கப்படும், பசுமையான சூழலை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
'ஹிருதய்' திட்டத்தின் கீழ், வேளாங்கண்ணிக்கு மட்டும், 42.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எட்டு கோடி ரூபாய் செலவில், கலாச்சார பூங்கா அமைக்கப்படும். ஆறு கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், வேறு இடத்துக்கு மாற்றப்படும்.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி

8. சிங்கப்பூரில் பகிர்ந்து வாழும் கிராமம்

அக்.28,2015. ஏழைகள், நோயாளிகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவும் நோக்கத்தில் சிங்கப்பூரில் பகிர்ந்து வாழும் கிராமம் (Agape Village) ஒன்றை உருவாக்கியுள்ளது சிங்கப்பூர் காரித்தாஸ் நிறுவனம்.
இந்தப் பகிர்ந்து வாழும் கிராமம் வழியாக, சிங்கப்பூர் கத்தோலிக்கத் திருஅவையின் நலவாழ்வுப் பணிகளின் தரம் உயரும் என்று, சிங்கப்பூர் காரித்தாஸ் நிறுவனத்தின் தன்னார்வப் பணியாளர் திருமதி Winifred Loh அவர்கள் தெரிவித்தார்.
இப்புதிய கிராமம், வருகிற நவம்பர் 21ம் தேதி முழுமையாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம் குறைவாக உள்ள குடும்பங்கள், நெருக்கடியில்  வாழும் இளையோர், மன மற்றும் உடலளவில் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், முன்னாள் கைதிகள், வெளிநாட்டுப் பணியாளர்கள் போன்றோருக்கு இக்கிராமம் உதவி செய்யும்.
சிங்கப்பூரில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கத்தோலிக்கர். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 5 விழுக்காடாகும்.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...