Wednesday, 28 October 2015

செய்திகள் - 27.10.15

செய்திகள் - 27.10.15
------------------------------------------------------------------------------------------------------

1. Pastor Bonus விதிமுறைகள் திருப்பீடத் தலைமையகத்தில் அமலில் இருக்கும்

2. பிள்ளைகளுடன் நேரத்தை வீணாக்குவது பெற்றோருக்கு மிக முக்கியம்

3. முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம்

4. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செபம்

5. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் காரித்தாஸ் உதவி

6. காலநிலையில் உண்மையான மாற்றம் கொணர ஆயர்கள் வேண்டுகோள்

7. செபுவில் 51வது உலக திருநற்கருணை மாநாடு

8. உலக ஆயர்கள் மாமன்றம் இந்தியத் திருஅவைக்குப் புத்துயிர் அளிக்கும்

9. மன்னிக்கிறோம், மன்னிப்புக் கேட்கிறோம் என்ற கடிதத்தின் 50ம் ஆண்டு நிறைவு

10. 2015ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான வெப்பம்

------------------------------------------------------------------------------------------------------

1. Pastor Bonus விதிமுறைகள் திருப்பீடத் தலைமையகத்தில் அமலில் இருக்கும்

அக்.27,2015. திருப்பீடத் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சீர்திருத்த நடைமுறைகள் முழுமையடையும்வரை, திருப்பீடத் தலைமையகத்திற்காக வெளியிடப்பட்டுள்ள Pastor Bonus அப்போஸ்தலிக்க வழிமுறை ஏட்டின் விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
Pastor Bonus அப்போஸ்தலிக்க ஏட்டின் விதிமுறைகளை நினைவுபடுத்தி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு திருத்தந்தை எழுதியுள்ள கடிதம் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
சீர்திருத்தத்தை நோக்கிய தற்போதைய காலத்தில், திருப்பீடத் தலைமையகத்தில் இடங்கள் சட்ட முறைப்படி காலியாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை
திருப்பீடத் தலைமையகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அது குறித்து எழுந்துள்ள சில பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அவைகளுக்குத் தாமதமின்றி தீர்வு காண திருத்தந்தை விரும்புவதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பீடத் தலைமையகத்திலும், பிற வத்திக்கான் மற்றும் திருப்பீட நிறுவனங்களிலும் பணியாளர்களை நியமிப்பது அல்லது மாற்றுவது, தற்போதைய பணியாளர் அளவிலிருந்து மாற்றம் செய்யாமல் இடம்பெறவேண்டும், அதேநேரம், பணியாளர்களை நியமிப்பது அல்லது மாற்றுவது திருப்பீடச் செயலகத்தின் அனுமதியோடும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வத்திக்கானின் ஊதிய நிர்ணயப்படியும்  நடைபெறவேண்டும் என்றும் அக்கடிதம் கூறுகிறது.
இவ்விவகாரத்தை வத்திக்கானின் அனைத்துத் துறைகளின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறும், Pastor Bonus அப்போஸ்தலிக்க வழிமுறை ஏட்டின் விதிமுறைகள் முழுமையாய் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கர்தினால் பரோலின் அவர்களைக் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பிள்ளைகளுடன் நேரத்தை வீணாக்குவது பெற்றோருக்கு மிக முக்கியம்

அக்.27,2015. “பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை வீணாக்குவது எப்படி என அறிந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்றுஎன்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சுலோவாக்கிய கர்தினால் Ján Chryzostom Korec அவர்கள் உயிரிழந்ததை முன்னிட்டு, அந்நாட்டின் Bratislava பேராயர் Stanislav Zvolenský அவர்களுக்கு தனது இரங்கல் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆர்வமுள்ள மற்றும் மனத்தாராளம் நிறைந்த மேய்ப்பரான கர்தினால் Korec அவர்கள், திருஅவைக்கு ஆற்றியுள்ள நீண்டகால மேய்ப்புப் பணியில் நற்செய்திக்கு அச்சமின்றி சான்று பகர்ந்தவர் என்றும், மனித உரிமைகளையும், கிறிஸ்தவ விசுவாசத்தையும் பாதுகாப்பதில் துணிச்சலுடன் செயல்பட்டவர் என்றும் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சுலோவாக்கிய குடியரசு, முன்னாள் செக்கோஸ்லாவாக்கியாவின் ஓர் அங்கமாக  இருந்த சமயம், சோவியத் கம்யூனிச ஆட்சியில் கர்தினால் Korec அவர்கள் சிறையில் இருந்தவர் என்றும், இவர் பல ஆண்டுகள் தனது ஆயர் பணியை ஆற்ற இயலாமல் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும், இறைபராமரிப்புக்கும், திருத்தந்தைக்கும் விசுவாசமாக இருந்ததில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தார் என்றும் திருத்தந்தையின் தந்திச் செய்தி கூறுகிறது.
சுலோவாக்கிய நாட்டின் Nitraவில் இம்மாதம் 24ம் தேதி மாலை இறந்த, 91 வயது நிரம்பிய இயேசு சபை கர்தினால் Korec அவர்கள், Nitra மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயராவார். இவர், முன்னாள் சோவியத் கம்யூனிச ஆட்சியின்போது, மறைவாக, ஏறக்குறைய 120 அருள்பணியாளர்களுக்கு அருள்பொழிவு செய்துள்ளார். இவரின் அடக்கச்சடங்கு அக்டோபர் 31, வருகிற சனிக்கிழமையன்று நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம்

அக்.27,2015. இத்தாலியின் சோஃபியா பல்கலைக்கழகத்தில் ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக, கவுரவ முனைவர் பட்டம் பெற்றுள்ள கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கு நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சோஃபியா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பிளாரன்ஸ் கர்தினால் ஜூசப்பே பெத்தோரி அவர்களுக்கு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என் அன்புக்குரிய சகோதரர் பர்த்தலோமேயோ அவர்களுக்கு இந்தக் கவரவப் பட்டம் வழங்குவதில் தான் மிகவும் மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக வழங்கப்படும் கவுரவ முனைவர் பட்டம், சரியான ஒரு நபருக்கே வழங்கப்பட்டுள்ளது என்றும், நம் கிறிஸ்தவ சபைகள் ஒன்றிப்பை நோக்கி பொதுவான பயணம் மேற்கொள்வதற்கு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள், மிகுந்த அர்ப்பணம் மற்றும் விடா உறுதியுடன் முயற்சித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஃபோக்கோலாரே பக்த இயக்கத்தை ஆரம்பித்த கியாரா லூபிச் அவர்களின் தூண்டுதலால் இத்தாலியின் சோஃபியா பல்கலைக்கழக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.  இந்நிறுவனத்தில் ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக வழங்கப்படும் முதல் கவுரவ முனைவர் பட்டம் இதுவேயாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செபம்

அக்.27,2015. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மக்களுக்குத் தனது செபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து பாகிஸ்தான் திருப்பீடத் தூதர் பேராயர் Ghaleb Bader அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் தந்திச் செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் தனது செபத்தைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இத்திங்களன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் வட கிழக்கில் உள்ள படாக்ஷான் மாநிலம், ஜுர்ம் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பூமிக்குக் கீழே 213.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் காரித்தாஸ் உதவி

அக்.27,2015. பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது கவலைகொண்டுள்ள அதேவேளை, இக்குடும்பங்களுக்கு அத்தியாவசியமான உடனடி உதவிகளைச் செய்வதற்கு தலத்திருஅவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக, கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் அறிவித்தார்.
பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தானில் குறைந்தது 230 பேரும், ஆப்கானிஸ்தானில் 300க்கும் மேற்பட்டவர்களும்  இறந்துள்ளனர் மற்றும் 1,500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும்வேளை, இவ்வெண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பிலிருந்து இரு அவசரகாலப் பணிக் குழுக்கள்  பேஷ்வார், இஸ்லாமாபாத் உட்பட நிலநடுக்கப் பாதிப்புப் பகுதிகளுக்குச் ஏற்கனவே சென்றுள்ளதாகவும் கூறினார் காரித்தாஸ் இயக்குனர் Amjad Gulzar.
வட இந்தியாவின் சில பகுதிகளிலும் மக்கள் நிலநடுக்க அதிர்வை உணர்ந்தனர் என்றும், இந்தியா காரித்தாஸ் நிறுவனம், இவ்வாரத்தில் பேரிடர் கால விழிப்புணர்வு மற்றும் பேரிடர் கால முன்தயாரிப்புப் பயிற்சிகளை வழங்கியது என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

6. காலநிலையில் உண்மையான மாற்றம் கொணர ஆயர்கள் வேண்டுகோள்

அக்.27,2015. இவ்வாண்டில் பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில், நியாயமான, சட்டமுறைப்படி இயங்கவைக்கும் மற்றும் உண்மையான மாற்றம் ஏற்படும் ஒப்பந்தங்கள் கொண்டுவரப்படுமாறு, கர்தினால்கள், முதுபெரும் தந்தையர் மற்றும் ஆயர்கள் இணைந்து உலக அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா, அமெரிக்கா என அனைத்துக் கண்டங்களின் ஆயர் பேரவைகளின் தலைவர்கள் இணைந்து உலக அரசுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இத்திங்களன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டு இதனை வெளியிட்டார்.
இந்த அறிக்கை குறித்து பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சுற்றுச்சூழல் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடலுக்குப் பதில் அளிப்பதாகவும், உலகின் அனைத்து மக்கள் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் இந்த அறிக்கை உள்ளது என்று கூறினார்.
நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை கவனத்துடனும், விவேகத்துடனும் நாம் பராமரிக்காவிட்டால், நாம் எல்லாரும் ஒரு பேரிடரை நோக்கிச் செல்ல நேரிடும்  என்றும் எச்சரித்தார் கர்தினால் கிரேசியஸ்.    
மேலும், இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, ஓசியானிய ஆயர் பேரவை  கூட்டமைப்பின் தலைவரான பாப்புவா நியு கினி பேராயர் John Ribat அவர்கள், தீவுகளில் வாழும் மக்களின் வாழ்வு அச்சுறுத்தலில் உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. செபுவில் 51வது உலக திருநற்கருணை மாநாடு

அக்.27,2015. பிலிப்பைன்ஸ் நாட்டின் செபுவில், வருகிற சனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 51வது உலக திருநற்கருணை மாநாடு குறித்து, இச்செவ்வாயன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர் திருஅவைத் தலைவர்கள்.
செபு பேராயர் ஹோசோ பால்மா, உலக திருநற்கருணை மாநாடுகள் பணிக்குழுத் தலைவர் பேராயர் பியெரோ மரினி, இப்பணிக்குழுவின் செயலர் அருள்பணி வித்தோரே பொக்கார்தி ஆகிய மூவரும் 51வது உலக திருநற்கருணை மாநாடு பற்றி விளக்கினர்.
பிலிப்பைன்சில், குறிப்பாக, செபு உயர்மறைமாவட்டத்தில் ஒரு வாரம் கொண்டாடப்படும் திருக்குழந்தை விழாவின் முடிவிலும், பிலிப்பைன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவுக்குத் தயாரிப்பாகவும் திருநற்கருணை மாநாடு நடைபெறும் என்றும் அறிவித்தார் செபு பேராயர் பால்மா.
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஆசியக் கண்டம் அண்மை ஆண்டுகளில் உலகின் பெரிய கருவிகளில் ஒன்றாக இருந்து வருகிறது, அதேசமயம், அக்கண்டத்தில் இன்னும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது என்றும் தெரிவித்தார் பேராயர் பால்மா.
பிலிப்பைன்சில் இம்மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவம் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே, மகிமையின் நம்பிக்கை”(கொலோ.1:27) என்ற இம்மாநாட்டின் தலைப்பு பற்றியும் விளக்கினார் பேராயர் பால்மா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. உலக ஆயர்கள் மாமன்றம் இந்தியத் திருஅவைக்குப் புத்துயிர் அளிக்கும்

அக்.27,2015. கத்தோலிக்கத் திருஅவையில் அண்மையில் நடந்து முடிந்த குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றம், இந்தியத் திருஅவைக்குப் புத்துயிர் அளிக்கும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Baselios Cleemis அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
அக்டோபர் 25, இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் நிறைவடைந்த உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி கருத்து தெரிவித்த கர்தினால் Cleemis அவர்கள், மாமன்றத் தந்தையரால் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிவரவிருக்கும் அப்போஸ்தலிக்க அறிவுரையின்படி(Apostolic Exhortation) இந்தியத் திருஅவை குடும்பங்களை உறுதிப்படுத்தும் என்று கூறினார்.
14வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவடைந்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கர்தினால் Cleemis அவர்கள், ஏற்கனவே பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் குடும்பங்களை, கருணை மற்றும் பரிவன்புடன் அணுகுவதற்கு இம்மாமன்றத்தில் திறந்த மனது இருந்தது என்று கூறினார்.
இந்தியத் திருஅவையிலிருந்து மூன்று கர்தினால்கள், எட்டு ஆயர்கள் மற்றும் மூன்று பொதுநிலையினர்  14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொண்டனர். மேலும், இம்மாமன்றத்தில் 55 பொதுநிலையினரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : New Indian Express / வத்திக்கான் வானொலி

9. மன்னிக்கிறோம், மன்னிப்புக் கேட்கிறோம் என்ற கடிதத்தின் 50ம் ஆண்டு நிறைவு

அக்.27,2015. மன்னிக்கிறோம், மன்னிப்புக் கேட்கிறோம் என்ற தலைப்பில் போலந்து ஆயர்கள் ஜெர்மனி ஆயர்களுக்கு எழுதிய கடிதத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவை, போலந்து ஆயர் பேரவை இத்திங்களன்று உரோம் நகரில் சிறப்பித்தது.
2ம் வத்திக்கான் பொதுச் சங்கச் சூழலில், 1965ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி போலந்து ஆயர்கள் ஜெர்மனி ஆயர்களுக்கு எழுதிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தின் வரலாற்று மற்றும் இறையியல் கருத்துகள் குறித்த சிந்தனைகள், ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இந்நிகழ்வை முன்னிட்டு உரோம் நகரில் திருப்பலி நிறைவேற்றிய, போலந்து ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Stanisław Gądecki அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட போலந்து ஆயர்கள் பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவைகளுக்கு 56 கடிதங்கள் எழுதினர் என்று கூறினார்.
போலந்தில் கத்தோலிக்கம் வேரூன்றியதன் ஆயிரமாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை அக்கடிதங்களில் அறிவித்து, போலந்திற்காகச் செபிக்குமாறு ஆயர்கள் கேட்டிருந்தனர் என்றும் கூறினார் பேராயர் Gądecki.
போலந்தின் மில்லேன்யத்தைக் கருத்தில் கொண்டு, போலந்து மற்றும் ஜெர்மன் மக்களுக்கிடையே ஒப்புரவை உருவாக்கும் நோக்கத்தில் கர்தினால்கள் Stefan Wyszyński Boleslaw Kominek ஆகியோரின் முயற்சியால் இக்கடிதம் எழுதப்பட்டது என்றும் கூறினார் பேராயர் Gądecki.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10. 2015ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான வெப்பம்

அக்.27,2015. இப்பூமி, இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான வெப்பம் நிறைந்ததாய் பதிவு செய்யப்பட்டுள்ளதாக WMO என்ற ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளாவிய காலநிலை குறித்து இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட WMO வானிலை ஆய்வு நிறுவனம், கடந்த 136 ஆண்டுகளில், கடந்த செப்டம்பரில் காற்று மற்றும் கடலின் வெப்பம் மிக அதிகமாக இருந்தது என்று கூறியுள்ளது.
கடந்த செப்டம்பரில் காற்று மற்றும் கடலின் வெப்பம் 0.90 டிகிரி செல்சியுசாக இருந்தது என்றும், தென் அமெரிக்கா முழுவதிலும், இன்னும், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளின் சில இடங்களிலும் இந்தக் கடும் வெப்பம் உணரப்பட்டது என்றும் WMO நிறுவனம் கூறியுள்ளது.
பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த உச்ச மாநாட்டையொட்டி வருகிற நவம்பரில் உலகளாவிய காலநிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் WMO நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...