மன்னரின் மருத்துவர், மறைசாட்சியாக...
"இத்திருத்தலத்தின் புனிதர், இங்கு வரும் திருப்பயணிகளின் வாழ்வுப் பயணத்தில் உடன் நடந்து, அவர்கள் மனங்களில் இடம் பிடித்தவர்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு புனிதரைப் பற்றி அண்மையில் (ஜூலை 24) குறிப்பிட்டுள்ளார். அர்ஜென்டீனாவின் Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் ஒரு பங்காக விளங்கும் இத்திருத்தலம், ஜூலை 27, வருகிற ஞாயிறன்று, தன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் தருணத்தில், இத்திருத்தலத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் பேராயராக தான் பணியாற்றியபோது, இத்திருத்தலத்தில் ஒப்புரவு அருள்சாதனம் வழங்கச்சென்ற தருணங்களை தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, இத்திருத்தலத்திலிருந்து தான் திரும்பியபோதெல்லாம் ஆன்மீகப் புத்துணர்வும், விசுவாசத்தில் உறுதியும் பெற்றுத் திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளார். திருத்தந்தையின் வாழ்த்துக்களைப் பெற்று, பொன்விழா காணும் இத்திருத்தலத்தின் நாயகர், புனித Pantaleon.
Nicomediaவில் 4ம் நூற்றாண்டு வாழ்ந்த திறமைமிக்க மருத்துவர் Pantaleon. இவரது மருத்துவத் திறமையை அறிந்த பேரரசர் Galerius Maximian, இவரை, தன் அரண்மனை மருத்துவராக நியமித்தார். கிறிஸ்தவரான Pantaleon, அரண்மனையில் வாழ்ந்த பிற மதத்தவரோடு சேர்ந்து, சிறிது, சிறிதாக தன் கிறிஸ்தவ விசுவாசத்தை மறந்தார். Pantaleonஇடம் ஏற்பட்ட மாற்றத்தைப்பற்றி கேள்விப்பட்ட ஓர் உன்னத அருள் பணியாளர் Hermolaos என்பவர், Pantaleonஐச் சந்தித்து, அறிவுரை கூறினார். அருள் பணியாளரின் அறிவுரை, மருத்துவர் Pantaleonஐ மீண்டும் மனம் மாறச் செய்தது.
தான் கிறிஸ்துவை விட்டு விலகிச் சென்றதற்குப் பரிகாரமாக, மருத்துவர் Pantaleon, கிறிஸ்துவுக்காகத் துன்புற்று, இறக்க விரும்பினார். கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒரு முயற்சியாக, அவர் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவப் பணிகள் புரிந்தார்.
அவ்வேளையில், பேரரசர் Diocletian கிறிஸ்தவர்களை வேட்டையாட ஆரம்பித்தார். மன்னர் வழியே தன் மரணம் உறுதி என்பதை உணர்ந்த மருத்துவர் Pantaleon, தனது சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்கு வழங்கினார். இதனால் அவரது புகழ் மேலும் பரவியது. இதனால் பொறாமை கொண்ட ஏனைய மருத்துவர்கள், அவரை கிறிஸ்தவர் என்று காட்டிக்கொடுத்ததால், அவர் மறைசாட்சியாக மரணம் அடைந்தார். புனித Pantaleon அவர்களின் திருநாள் ஜூலை 27ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment