Sunday, 27 July 2014

செய்திகள் - 26.07.14

செய்திகள் - 26.07.14
------------------------------------------------------------------------------------------------------

1. மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் அந்தோணி பாப்புசாமி

2. ஈராக் முதுபெரும் தந்தையுடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்

3. மோசுல் நகரில் இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு பிரித்தானிய ஆயர்கள் கண்டனம் 

4. வத்திக்கான் தொழிலாளர்களுடன் திருத்தந்தை மதிய உணவு

5. மூதாதையர் வழிபாடும், வயதானவர்களை மதிப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் சிறப்பான பண்புகள், யாங்கூன் பேராயர்

6. இந்தோனேசியாவின் புதிய அரசுத்தலைவரை நம்பிக்கையோடு வரவேற்கின்றது தலத்திருஅவை

7. மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவுக்கு 135வது இடம்

8. ஒரு வாரத்தில் மட்டும் நடந்துள்ள மூன்று பயணியர் விமான விபத்துக்கள்

9. பிறப்பிலேயே காது கேளாத சிறுவனுக்கு மீண்டும் கேட்கும் திறன்

------------------------------------------------------------------------------------------------------

1. மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் அந்தோணி பாப்புசாமி

ஜூலை,26,2014. இந்தியாவின் மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த பேராயர் பீட்டர் ஃபெர்னான்டோ அவர்களின் பணி ஓய்வை, திருஅவைச் சட்டம் 401, பிரிவு 1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்களை, மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமித்துள்ளார்.
1949ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று மாரம்பாடியில் பிறந்த புதிய பேராயர் பாப்புசாமி அவர்கள், 1976ம் ஆண்டு குருவாகவும், 1998ம் ஆண்டு மதுரை உயர்மறைமாவட்டத் துணை ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 2003ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதியன்று திண்டுக்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, தமிழக ஆயர் பேரவையின் குருக்கள் மற்றும் துறவியர் பணிக்குழுவின் தலைவராக இருக்கிறார் மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஈராக் முதுபெரும் தந்தையுடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்

ஜூலை,26,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அநீதியான முறையில் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈராக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளால் தொடர்ந்து நடத்தப்படும் அட்டூழியங்களை, ஐ.நா. பாதுகாப்பு அவை சாதாரணப் பார்வையாளர்போல் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்று அண்மை நாள்களாக முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எச்சரித்து வருகிறார்.
அத்துடன், ISIS முஸ்லிம் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ள இஸ்லாம் நாடு பற்றியும், மோசுல் நகரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பங்கள் வெளியேறி இருப்பதையும், அப்பகுதியின் நிலைமை பற்றியும் ஐ.நா.வுக்கு விளக்கியுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
இதற்கிடையே, மோசுல் நகரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இஸ்லாமிய விதிமுறைப்படி சிறுமிகளும் பெண்களும், தங்களின் பிறப்புறுப்பைச் சிதைக்க வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது
பெண்களின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் வழக்கம் ஈராக்கிய சமூகத்தில் பரவலாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உறுப்பின் முக்கிய பாகங்களைச் சிதைக்கும் வழக்கத்தை உலகெங்கிலுமிருந்தும் ஒழிக்க வேண்டும் என இலண்டனில் இவ்வாரத்தில் நடந்த மாநாடு ஒன்றில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மோசுல் நகரில் இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு பிரித்தானிய ஆயர்கள் கண்டனம் 

ஜூலை,26,2014. மோசுல் நகரில் புனித இடங்களை அவமானப்படுத்தி, அப்பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டுமென இறுதி நிபந்தனைகளை அறிவித்துவரும் ISIS முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான தங்களின் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் பிரித்தானிய ஆயர்கள்.
பிரித்தானிய அரசுக்கும், சமய மற்றும் சமயச்சார்பற்ற நிறுவனங்களுக்கும் அந்நாட்டு ஆயர்கள் சார்பில் வேண்டுகோளை முன்வைத்துள்ள, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் அனைத்துலகப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Declan Lang அவர்கள், ஈராக்கில் நீண்ட காலமாகத் துன்புறும் மக்களின் துயர்துடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
ஈராக்கிய குடிமக்களுக்கு முன்வைக்கப்படும் இந்த அச்சுறுத்தல், இறைவனுக்கு எதிரான பாவம் என்றும், வாழ்வதற்கான உரிமையை மீறுவதாக உள்ளது என்றும் கூறியுள்ள ஆயர் Lang அவர்கள், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக ஈராக்கில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களையும், அவர்களின் சாட்சிய வாழ்வையும் மறக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு தனிமனிதரும் தங்களின் விருப்பம்போல் மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமைவழங்கும் அனைத்துலக மனித உரிமைகள் அறிவிப்பின் எண் 18ஐயும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்
உலகின் எண்ணற்ற கிறிஸ்தவ நிறுவனங்களும், இதே மாதிரியான வேண்டுகோள்களை அனைத்துலக சமுதாயத்துக்கு முன்வைத்துள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வத்திக்கான் தொழிலாளர்களுடன் திருத்தந்தை மதிய உணவு

ஜூலை,26,2014. வத்திக்கான் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மதிய உணவருந்தும் உணவகத்துக்குத் திடீரென்று சென்று அவர்களுடன் உணவு மேஜையில் அமர்ந்து உணவருந்தி பணியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  
எந்த முன்அறிவிப்பும் இன்றி, இவ்வெள்ளி பகல் ஒரு மணிக்கு வத்திக்கான் உணவகம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்கள் போன்று, சாப்பாட்டுத் தட்டுகள் வைக்கப்படும் ட்ரேயுடன் வரிசையில் நின்று தனக்கு வேண்டிய உணவைப் பெற்று அப்பணியாளர்கள் பத்துப் பேருடன் அமர்ந்து உணவருந்தியுள்ளார்.
ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் அங்குச் செலவிட்டு அப்பணியாளர்களுடன் பல விடயங்கள் பற்றிப் பேசி, அனைவரையும் ஆசீர்வதித்து, அனைவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டு வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பியுள்ளார் திருத்தந்தை.
மேலும், இச்சனிக்கிழமை பிற்பகலில் இத்தாலியின் கசெர்த்தாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு இரவு 8 மணிக்கு மேல் வத்திக்கான் திரும்புவதற்குத் திட்டமிட்டுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ். மீண்டும் வருகிற திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது நண்பர் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை பாஸ்டர் Giovanni Traettino அவர்களுடன் கசெர்த்தா செல்வார். இப்பயணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட பயணமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மூதாதையர் வழிபாடும், வயதானவர்களை மதிப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் சிறப்பான பண்புகள், யாங்கூன் பேராயர்

ஜூலை,26,2014. மூதாதையர் வழிபாடும், வயதானவர்களை மதிப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தில் சிறப்பான பண்புகளாய் இருப்பதால், மியான்மார் சமுதாயத்தில் அனைத்துக் குழுவினரும் ஒரே குடும்பமாய் ஒன்றிணைக்கப்பட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது என்று யாங்கூன் பேராயர் சார்லஸ் போ கூறினார்.
இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட தூய மரியாளின் பெற்றோராகிய புனிதர்கள் சுவக்கீம், அன்னா விழாவுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பேராயர் சார்லஸ் போ அவர்கள், நம் அன்னைமரியிடமிருந்து நாம் பெற்றுள்ள பரம்பரை புண்ணியத்தின் எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.
மியான்மார் சமுதாயம், ஏழு பெரிய இனக் குழுக்களிடமிருந்து பிறந்துள்ள ஏழு குழந்தைகள் போன்ற ஒரு வண்ணக் குடும்பம், இந்தப் பெரிய நாட்டின் பிள்ளைகளாகிய நம்மை இறைவன் ஏராளமான கொடைகளால் ஆசீர்வதித்துள்ளார் என்றும் பேராயரின் செய்தி கூறுகிறது.
மியான்மாரின் வரலாற்றைப் பார்க்கும்போது, இந்நாட்டின் அழகு, வியத்தகு இயற்கை வளங்கள், திறமையுள்ள மக்கள் என, நாடு பலவகைகளாலும் சிறந்துள்ளது என்றும், எனினும் நாடு தொடர் வெறுப்புணர்வுகளால் குத்தப்பட்டு வருகின்றது என்றும் யாங்கூன் பேராயரின் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews                               

6. இந்தோனேசியாவின் புதிய அரசுத்தலைவரை நம்பிக்கையோடு வரவேற்கின்றது தலத்திருஅவை

ஜூலை,26,2014. இந்தோனேசியாவில் Joko Widodo அவர்கள் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையோடு வரவேற்பதாக, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரும் ஜகார்த்தா பேராயருமான Ignatius Suharyo அவர்கள் அறிவித்துள்ளார்.
புதிய அரசுத்தலைவர் Joko Widodo அவர்கள் சாதாரண மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்பவர், மேலும், அவரது எளிய வழிகளும், காரியங்களைச் செய்வதில் அவரது அணுகுமுறைகளும் நாட்டின் அரசியல் அமைப்பின் விழுமியங்களோடும், கத்தோலிக்க சமூகப் போதனைகளோடும் ஒத்திணங்கிச் செல்லுகின்றன என்று  பேராயர் Suharyo கூறியுள்ளார்.
Widodo அவர்கள் மாற மாட்டார் எனத் தான் நம்புவதாகவும், அவர் நாட்டை மாற்றுவதற்கு அவர் சரியான மனிதர் என்றும் தெரிவித்த பேராயர், புதிய அரசுத்தலைவர் அனைவருக்கும் தெரிந்தவர் என்றும் கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் Joko Widodo அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆதாரம் : AsiaNews

7. மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவுக்கு 135வது இடம்

ஜூலை,26,2014. UNDP என்ற ஐ.நா. வளர்ச்சித்திட்ட நிறுவனம் 187 நாடுகளில் மனித வளர்ச்சி குறித்து எடுத்த ஆய்வில் இந்தியா 135வது இடத்தைப் பெற்றுள்ளது.
மக்களின் சராசரி ஆயுள்காலம், கல்வி, வருவாய் ஆகியவற்றை வைத்து ஒரு நாட்டு மக்களின் வளர்ச்சி கணிக்கப்படுகிறது.
இதன்படி, மனித வளர்ச்சி குறித்து UNDP நிறுவனம் இவ்வாண்டில் வெளியிட்ட புதிய அறிக்கையில், பாலியல் சமத்துவ நிலையில் 152 நாடுகளில் 127வது இடத்தையும், பாலின முறையிலான வளர்ச்சியில் 148 நாடுகளில் 132வது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.
மேலும், எழுத்தறிவின்மை, நலவாழ்வு வசதிக்குறைவு போன்றவை உட்பட அதிகமான ஏழைகளைக் கொண்டுள்ள பகுதியாக தெற்கு ஆசியா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிலையில் 80 கோடிப்பேர் வாழ்வதாகவும் அவ்வறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : IANS                        

8. ஒரு வாரத்தில் மட்டும் நடந்துள்ள மூன்று பயணியர் விமான விபத்துக்கள்

ஜூலை,26,2014. இந்த 2014ம் ஆண்டில் ஒரு வாரத்தில் மட்டும் நடந்துள்ள மூன்று பயணியர் விமான விபத்துக்கள் ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்துக்கள் என்று சொல்லப்படுகின்றது.
மோசமான வானிலையால் சகாரா பாலைவனத்தில் இவ்வியாழனன்று நடந்த அல்ஜிரீய நாட்டு பயணியர் விமான விபத்து, இப்புதனன்று தாய்வானில் நடந்த பயணியர் விமான விபத்து, கடந்த வாரத்தில் உக்ரேய்ன் வான் பகுதியில் நடந்த மலேசிய பயணியர் விமான விபத்து ஆகியவற்றில் 680 பேர் இறந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை கடந்த மூன்றாண்டுகளில் நடந்ததைவிட அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. 
2005ம் ஆண்டில் நடந்த விமான பயணியர் விபத்துக்களில் 916 பேர் உயிரிழந்தனர். 

ஆதாரம் : AsiaNews                 

9. பிறப்பிலேயே காது கேளாத சிறுவனுக்கு மீண்டும் கேட்கும் திறன்

ஜூலை,26,2014. கானடாவில் பிறப்பிலேயே காது கேளாத சிறுவன் ஒருவனை அறுவை சிகிச்சை மூலம் கேட்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கானடாவின் மொன்ட்ரியல் மாநிலத்தைச் சேர்ந்த Auguste Majkowski என்ற 3 வயது சிறுவன் பிறப்பில் இருந்தே காது கேளமால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இச்சிறுவனுக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில், அவனது மூளைத்தண்டில் கேட்கும் சாதனம் ஒன்றை பொருத்தியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர் Laurie Eisenberg கூறுகையில், இவ்வாறு ஒரு சிறுவன் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது என்றும், தனது பணிக்காலத்தில் இதுவரை நான் யாரையும் பார்த்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : தமிழ்வின்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...