Thursday, 24 July 2014

செய்திகள் - 24.07.14

செய்திகள் - 24.07.14
------------------------------------------------------------------------------------------------------

1. தைவான் நாட்டு விமான விபத்தில் பலியானோர்க்கு திருத்தந்தை செபம்

2. புனித Pantaleon திருத்தலப் பொன்விழாவுக்கு திருத்தந்தை வாழ்த்துச் செய்தி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : பணம், புகழ், பதவி ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு வாழ்பவர்கள் உண்மையிலேயே மகிழ்வுடன் இருப்பது இயலாது

4. காசாப் பகுதியில் அறிவு சார்ந்த குரல்கள் ஒடுக்கப்பட்டு, ஆயுதங்களின் சப்தமே கேட்கின்றது, பேராயர் தொமாசி

5. ஆப்ரிக்கக் கண்டத்தில் தொடர்ந்து மறைப்பணியாற்ற நாம் அழைக்கப்படுகிறோம், கர்தினால் Filoni

6. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா. மௌனம் காக்கக் கூடாது, முதுபெரும் தந்தை சாக்கோ

7. இந்தியச் சிறைச்சாலைகளின் அடிப்படை வசதிகளற்ற நிலைக்கு எதிர்ப்பு, கத்தோலிக்க சிறைக்கைதிகள் பணிக்குழு

8. சிட்டம்பட்டி : பள்ளி ஆசிரியரின் சொந்த முயற்சியால் இயற்கை ஆர்வலர்களாக மாறியிருக்கும் குழந்தைகள்

------------------------------------------------------------------------------------------------------

1. தைவான் நாட்டு விமான விபத்தில் பலியானோர்க்கு திருத்தந்தை செபம்

ஜூலை,24,2014. ஜூலை 23, இப்புதனன்று தைவான் நாட்டு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
Taipei பேராயர் John Hung Shan-chuan அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ள இத்தந்தியில், விபத்தில் உயிரிழந்தோருக்கு தன் செபங்களையும், விபத்தில் காயமுற்றோர், மற்றும் தன் உறவுகளை இழந்தோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
54 பயணிகளையும், 4 விமானப் பணியாளர்களையும் சுமந்து சென்ற TransAsia விமானம், Matmo என்ற புயலின் காரணமாக அவசரமாகத் தரையிறங்க முயற்சித்தபோது, இவ்விபத்து நிகழ்ந்தது என்றும், விமானத்தில் இருந்த 47 பேர் உயிரிழந்தனர் என்றும், 11 பேர் காயமுற்றனர் என்றும் கூறப்படுகிறது.
விபத்திற்கான சரியான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை என்றும், விமானம் தரையிறங்கிய வேளையில் அங்கிருந்த வீடுகளில் மோதியதில் மேலும் 5 பேர் காயமுற்றனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. புனித Pantaleon திருத்தலப் பொன்விழாவுக்குத் திருத்தந்தை வாழ்த்துச் செய்தி

ஜூலை,24,2014. புனித Pantaleon திருத்தலத்திலிருந்து திரும்பியபோதேல்லாம் ஆன்மீகப் புத்துணர்வும், விசுவாசத்தில் உறுதியும் பெற்றுத் திரும்பியுள்ளேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அர்ஜென்டீனாவின் Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் ஒரு பங்காக விளங்கும் புனித Pantaleon திருத்தலம்ஜூலை 27, வருகிற ஞாயிறன்று, தன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் தருணத்தில், இத்திருத்தலத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் பேராயராக தான் பணியாற்றியபோது, இத்திருத்தலத்தில் ஒப்புரவு அருள்சாதனம் வழங்கச் சென்ற தருணங்களை திருத்தந்தை தன் செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.
இத்திருத்தலம் ஒரு கோவிலாக ஓரிடத்தில் நிலைத்திருந்தாலும், இங்கு வரும் மக்களுடன் இறைவன் பயணம் செய்கிறார் என்பதை தான் உணர்ந்ததாக திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவரான புனித Pantaleon பரிந்துரையால் அனைவரும் நலவாழ்வு வாழ, தான் வேண்டுவதாகக் கூறியத் திருத்தந்தை, தனக்காகவும் மக்கள் அனைவரும் செபிக்கும்படி விண்ணப்பித்துள்ளார்.
புனித Pantaleon திருத்தலத்தில் ஜூலை 18, கடந்த வெள்ளியன்று துவங்கிய நவநாள் முயற்சிகள், ஜூலை 27 ஞாயிறன்று நிறைவுறும் என்றும், அன்று காலை 5 மணி முதல், நடு இரவு முடிய தொடர்ந்து பத்து திருப்பலிகள் நிறைவேறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : பணம், புகழ், பதவி ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு வாழ்பவர்கள் உண்மையிலேயே மகிழ்வுடன் இருப்பது இயலாது

ஜூலை,24,2014. "பணம், புகழ், பதவி ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு வாழ்பவர்கள் உண்மையிலேயே மகிழ்வுடன் இருப்பது இயலாது" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter செய்தியாக இவ்வியாழன் காலை வெளியிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் சிகாகோ நகரில் அமைத்துள்ள திருத்தூதர் புனித தோமா சீரோ மலபார் மறைமாவட்டத்திற்கு, அருள் பணியாளர் Joy Alappat அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணை ஆயராக இவ்வியாழனன்று நியமனம் செய்துள்ளார்.
1956ம் ஆண்டு கேரளாவில் பிறந்த Joy Alappat அவர்கள், 1981ம் ஆண்டு அருள் பணியாளராக திருநிலை பெற்றபின், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தன் மேல்படிப்பை நிறைவு செய்தார்.
சில ஆண்டுகள் கேரளாவில் அருள் பணியாற்றியபின், Joy Alappat அவர்கள், 1993ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் Georgetown பல்கலைக் கழகத்திலும் வேறு இடங்களிலும் அருள் பணியாற்றி வந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. காசாப் பகுதியில் அறிவு சார்ந்த குரல்கள் ஒடுக்கப்பட்டு, ஆயுதங்களின் சப்தமே கேட்கின்றது, பேராயர் தொமாசி

ஜூலை,24,2014. காசாப் பகுதியில் நாளுக்கு நாள் பெருகி வரும் வன்முறைகளால், அறிவு சார்ந்த குரல்கள் ஒடுக்கப்பட்டு, ஆயுதங்களின் சப்தமே கேட்கின்றது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், அங்கு நடைபெறும் 21வது மனித உரிமை சிறப்புக் கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
தற்போது காசாப் பகுதியில் நடைபெற்றுவரும் வன்முறையால் வெற்றியடையப் போவது யாருமில்லை என்று கூறிய பேராயர் தொமாசி அவர்கள், துன்பமும், சாவும் மட்டுமே இங்கு வெற்றிபெற்று வருகின்றன என்று கூறினார்.
இஸ்ரேல் இராணுவம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், குடிமக்கள் வாழும் இடங்களை ஏவுகணை கொண்டு தாக்குவது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல் என்பதை பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
மனித உயிர்கள் துச்சமாக மதிக்கபடுவதும், வன்முறையை போற்றி வளர்ப்பதும் பெருகி வரும் இவ்வுலகில், வன்முறை எப்போதும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதில் திருப்பீடம் உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதையும் பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஆப்ரிக்கக் கண்டத்தில் தொடர்ந்து மறைப்பணியாற்ற நாம் அழைக்கப்படுகிறோம், கர்தினால் Filoni

ஜூலை,24,2014. இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, மறைப்பணியாளர்கள் ஆப்ரிக்கக் கண்டத்தில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், இப்பணியைத் தொடர இன்றும் நாம் அழைக்கப்படுகிறோம் என்பதை உணர வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கிழக்கு ஆப்ரிக்காவின் எட்டு நாடுகளின் ஆயர்கள் பேரவை ஒருங்கிணைந்து ஜூலை 16 முதல் 26 முடிய Malawiயில் மேற்கொண்டுள்ள கூட்டத்திற்கு, நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
நற்செய்தியின் மகிழ்வு என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள திருத்தூது அறிவுரையிலிருந்து மேற்கோள்களைக் கூறும் கர்தினால் Filoni அவர்களின் செய்தி, வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்தும் எடுத்துரைக்கிறது.
AMECEA என்று அழைக்கப்படும் இந்த ஆயர்கள் பேரவை கூட்டம், "உண்மையான மனமாற்றம் மற்றும், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு சான்று பகர்வதன் மூலமாக, புதிய வழியில் நற்செய்தியின் அறிவிப்பு" என்ற மையக் கருத்துடன் கூடியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா. மௌனம் காக்கக் கூடாது, முதுபெரும் தந்தை சாக்கோ

ஜூலை,24,2014. ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள வரைமுறையற்ற வன்முறையை, அகில உலக அமைப்புக்கள் கைகட்டிக் கொண்டு காண்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு நிலை என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த விண்ணப்பத்தில், வன்முறையாளர்கள் கிறிஸ்தவர்களுக்கு உரிய பழமை வாய்ந்த இடங்களை தீயிட்டுக் கொளுத்துவது குறித்தும் எழுதியுள்ளார்.
ISIS அமைப்புக்கு எதிராக ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கைக்கு நன்றி கூறும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், உலக நாடுகளும், ஐ.நா. அமைப்பும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பல வழிகளில் காட்டி, மதியற்ற இந்த வன்முறையை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பழமை வாய்ந்த கோவில்களையும், துறவு மடங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவது முற்றிலும் இயலாத காரியம் என்பதால், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தும் வன்முறையாளர்களைத் தடுத்து நிறுத்துவது, கலாச்சாரத்திற்கு நாம் ஆற்றும் கடமை என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, கல்தேய வழிபாட்டு முறை, சிரிய ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை, மற்றும் ஆர்மீனிய வழிபாட்டு முறையைச் சார்ந்த ஆயர்கள், Ankawa என்ற நகரில் ஜூலை 22 இச்செவ்வாயன்று நடத்திய ஒரு கூட்டத்தின் இறுதியில், ஈராக் அரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு அவசர விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / Fides

7. இந்தியச் சிறைச்சாலைகளின் அடிப்படை வசதிகளற்ற நிலைக்கு எதிர்ப்பு, கத்தோலிக்க சிறைக்கைதிகள் பணிக்குழு

ஜூலை,24,2014. இந்தியாவில் உள்ள சிறைச் சாலைகளில் அடிப்படை வசதிகள் இன்றி அதிக அளவில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, இந்திய சிறைக் கைதிகள் பணிக்குழு குரல் எழுப்பியுள்ளது.
28 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் கேரளாவில் சிறைக் கைதிகள் மத்தியில் பணியைத் துவக்கிய கத்தோலிக்கப் பணிக்குழு தற்போது, இந்திய ஆயர் பேரவையின் நீதி அமைதி, முன்னேற்றப் பணிக்குழுவின் ஓர் அங்கமாகச் செயலாற்றி வருகிறது.
நாத்சி வதை முகாமில் கொல்லப்பட்ட புனித மாக்சிமில்லியன் கோல்பே, இந்திய சிறைக் கைதிகள் பணிக்குழுவின் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள சிறைகளில் 3,40,000 கைதிகள் தங்கும் வசதிகள் உள்ள நிலையில், அவ்வாண்டு, 3,85,000 கைதிகள் இருந்தனர் என்றும், ஒரு சில சிறைகளில் கட்டுப்பாடு ஏதுமின்றி கைதிகள் பெருமளவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இப்பணிக்குழு அரசிடம் முறையிட்டுள்ளது.
இந்திய சிறைக் கைதிகள் பணிக்குழு தற்போது, இந்தியாவில் 850 இடங்களில் பணியாற்றுகின்றனர் என்றும், இப்பணிக் குழுவில் 6000 சுயவிருப்பப் பணியாளர்கள் இணைந்துள்ளனர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. சிட்டம்பட்டி : பள்ளி ஆசிரியரின் சொந்த முயற்சியால் இயற்கை ஆர்வலர்களாக மாறியிருக்கும் குழந்தைகள்

ஜூலை,24,2014. மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன் அவர்கள், தனது சொந்த முயற்சியால், ப்பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார்.
சிட்டம்பட்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 36 வகையான மரங்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இங்குள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை 169. அத்தனையும் சிவராமன் வழிகாட்டுதலில் இந்தப் பள்ளி மாணவர்கள் கவனமுடன் நட்டு வளர்த்தவை.
சிட்டம்பட்டிக்கு 7 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மருதூர் கிராமத்திலிருந்து 60 குழந்தைகள் சிட்டம்பட்டிக்கு படிக்க வருகிறார்கள். பேருந்து வசதி அதிகம் இல்லாத காரணத்தால், காலையிலும் மாலையிலும் இந்தக் குழந்தைகள் நடந்துதான் செல்லவேண்டும்.
ஊர் செல்லும் வரை சாலையில் இரண்டு பக்கமும் நிழலுக்கு ஒதுங்கக்கூட மரம் இல்லாத நிலை முதலில் இருந்தது. ஆனால், ஆசிரியர் சிவராமன் அவர்களின் தூண்டுதலால் உருவான ஒரு மாணவன், ஒரு பாட்டில், ஒரு செடிஎன்ற திட்டத்தினால், இப்போது அச்சாலையில் ஐம்பது மரக்கன்றுகள் இடுப்பளவுக்கு வளர்ந்து நிற்கின்றன.
ஒவ்வொரு மாணவனும் வீட்டிலிருந்து வரும்போது ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வந்து, தாங்கள் நட்டு வைத்த மரக்கன்றுக்கு ஊற்ற வேண்டும். அதேபோல் மாலையில் வீடு திரும்பும்போதும் பள்ளியிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டுபோய் ஊற்ற வேண்டும். மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிந்ததும் அவர்கள் பராமரித்து வந்த கன்றுகளை அடுத்து வரும் மாணவர்கள் பராமரிக்க வேண்டும்.
பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்கள், இனிப்புக்குப் பதில் மரக் கன்றுகளை மற்றவருக்குத் தருதல், ஊரிலுள்ள கருவேலம் செடிகளை வேரோடு அழித்தல், ஊரின் தெப்பக்குளத்தைச் சுத்தம் செய்து, சுற்றிலும் பனைமரங்களை நடுதல் ஆகியத் திட்டங்களையும் ஆசிரியர் சிவராமன் அவர்கள் மாணவர்களின் துணைகொண்டு நடத்தப்போவதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : தி இந்து

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...