Sunday, 17 November 2024

உலகை அழகுபடுத்துவது என்பது, அமைதியைக் கட்டியெழுப்புவதாகும்

 

உலகை அழகுபடுத்துவது என்பது, அமைதியைக் கட்டியெழுப்புவதாகும்



கைவினைத் திறமை என்பது படைப்பாற்றலுக்கு ஒரு புகழாரம். கடவுளின் படைப்புத் தொழிலில் இது ஒத்துழைப்பை தருவதுடன், பொதுநலனுக்கான அர்ப்பணத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இறைவனின் படைப்புத் தொழிலில் தங்கள் தொழில் வழியாக ஒத்துழைப்பை வழங்குவதால் கைவினைஞர்கள் எப்போதும் தன் இதயத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கைவினைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புக்களின் இத்தாலிய தேசிய கூட்டமைப்பின் அங்கத்தினர்களை வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதத் தொழிலின் மதிப்பை மிக அழகான விதத்தில் வெளிப்படுத்துபவர்கள் கைவினைஞர்கள் என்பதால் தனக்கு அவர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றார்.

கைவினைத் திறமை என்பது படைப்பாற்றலுக்கு ஒரு புகழாரம் என்ற திருத்தந்தை, கடவுளின் படைப்புத் தொழிலில் இது ஒத்துழைப்பை தருவதுடன், பொதுநலனுக்கான அர்ப்பணத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என மேலும் கூறினார்.                                                       

நாம் எவ்வளவு வழங்குகிறோம் என்பதை விட எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பது முக்கியத்துவம் நிறைந்தது எனவும் இக்கூட்டமைப்பின் அங்கத்தினர்களுக்குத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பொறுப்புணர்வின் மீது இறைவன் நம்பிக்கைக் கொண்டிருப்பதால், நாம் அச்சத்தை வெற்றிகண்டு நம்பிக்கையைக் கைக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

படைப்பாற்றலை அழிவுக்குள்ளாக்கும் அல்லது முடக்கிப் போடும் அச்சத்தை அனைத்து கைவினைஞர்களும் தூர ஒதுக்கவேண்டும் என அவர்களைக் கேட்டுக்கொண்டதுடன், நம் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் நம் திறமைகள் மட்டுமல்ல, இறைவனின் கரமும் நம்மை வழி நடத்துவதை நாம் உணரவேண்டும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகை மேலும் அழகாக்குவதில் கைவினைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர  தொழில் அமைப்புக்களின் பங்களிப்பைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கைவினைஞர்களின் பணி நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்குகிறது என மேலும் கூறினார்.

உலகை அழகுபடுத்துவது என்பது, அமைதியைக் கட்டியெழுப்புவதாகும் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, உலகின் மக்கள் அனைவரும் கைவினைஞர்கள் போல் உலகை அழகுப்படுத்துவதில் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...