Sunday 22 September 2024

சமத்துவமின்மையே சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் – திருத்தந்தை

 

சமத்துவமின்மையே சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் – திருத்தந்தை


பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சரியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றால், அது இன்னும் பெரிய ஆபத்துகளை உருவாக்கும் என்பது வெளிப்படையான உண்மை – திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவை அனைவருக்குமானது, நற்செய்தியில் குறிப்பிடப்படும் ஏழைகள் வாழ்வின் மையத்தை எடுத்துரைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை, தூய நற்செய்தி என்றும், சமத்துவமின்மையே சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை வத்திக்கானின் தூய கலிஸ்துஸ் மாளிகையில் (Popular Movements) பொதுமக்கள் இயக்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் ஏறக்குறைய 150 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளைச் சார்ந்தே நாம் அனைவரும் இருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

“ஏழைகளின் பிரச்சினைகள் தீவிரமாக தீர்க்கப்படாத வரை, சந்தைகள் மற்றும் நிதி ஊகங்களின் முழுமையான சுயாட்சியை கைவிடாதவரை, சமத்துவமின்மைக்கான கட்டமைப்பு காரணங்களைத் தாக்கும் வரை, உலகின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்று எவாஞ்சலி கௌதியம் என்னும் திருத்தூது மடலில் கூறிய கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

சமத்துவமின்மையே சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் இது நமக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் அதுதான் உண்மை என்றும் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சரியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றால் அது இன்னும் பெரிய ஆபத்துகளை உருவாக்கும் என்பது வெளிப்படையான உண்மை என சிங்கப்பூர் திருத்தூதுப் பயணத்தின்போது தான் கூறியதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், அனைவருக்குமான நிலம், வீடு, பணி என்று சமூக நீதியை வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதிக பணம் வைத்திருப்பதற்கான போட்டி என்பது ஒரு படைப்பாற்றல் அல்ல, ஆரோக்கியமற்ற அணுகுமுறை, அழிவுக்கான பாதை என்றும், பொறுப்பற்ற, ஒழுக்கக்கேடான, பகுத்தறிவற்ற நடத்தையானது படைப்பை அழித்து, மக்களை பிளவுபடுத்துகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூக நீதி என்பது திருச்சபையால் உருவாக்கப்பட்ட ஒரு வெளிப்பாடு. அது இரக்கத்திலிருந்து பிரிக்க முடியாதது என்றும், கடவுளுடைய மூன்று பண்புநலன்களான உடனிருப்பு, இரக்கம், அன்பு ஆகியவற்றுடன் எப்போதும் இணைந்து செல்லவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

சமூக நீதி என்பது இரக்கத்திலிருந்து பிரிக்க முடியாதது. இரக்கம் என்பது மற்றவருடன் துன்புறுதல், அவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், தேவையிலிருக்கும் நம் உடன் சகோதர சகோதரிகளுக்கு உதவிகள் செய்வது, அவர்களை மேலிருந்து கண்ணோக்குவது, நெருக்கமாக இருப்பதே இரக்கம் என்றும் எடுத்துரைத்தார்.


No comments:

Post a Comment