Monday 2 September 2024

மகிழ்ச்சி, உற்சாகத்துடன் காத்திருக்கும் பாப்புவா நியுகினியா

 

மகிழ்ச்சி, உற்சாகத்துடன் காத்திருக்கும் பாப்புவா நியுகினியா

வரலாறாக மாற இருக்கும் இத்திருத்தூதுப் பயணத்தின் வரலாற்று நிகழ்விற்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் - அருள்பணியாளார் மிகுவேல்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாப்புவா நியு கினியா மக்கள் திருத்தந்தையின் வருகைக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார்கள் என்றும், இசை வழியாக நற்செய்தியை அறிவித்து கடவுளின் தூய அழகு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் மிகுவேல் தெலா காலே.

செப்டம்பர் 2 திங்கள்கிழமை திருத்தந்தையின் 45 ஆவது திருத்த்தூதுப் பயணத்தை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு கூறியுள்ளார் பாப்புவா நியுனினியாவில் உள்ள வார்த்தை மனுவுருவானார் துறவு சபையின் அருள்பணியாளர் Miguel de la Calle.

வார்த்தை மனுவுருவானவர் மறைப்பணியாளர்களின் நற்செய்திப்பணி, திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கும் மக்களின் உணர்வு, செப்டம்பர் 8 அன்னை மரியின் பிறப்பு பெருவிழா, பாரடைஸ் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி போன்றவற்றைப் பற்றி எடுத்துரைத்த அருள்பணியாளர் மிகுவேல் அவர்கள், வரலாறாக மாற இருக்கும் இத்திருத்தூதுப் பயணத்தின் வரலாற்று நிகழ்விற்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

செப்டம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை ஏறக்குறைய 3 மணி நேரம் திருத்தந்தை தங்களுடன் இருப்பதாக எடுத்துரைத்த அருள்பணியாளர் மிகுவேல் அவர்கள், அதற்கான தயாரிப்பான மைதானத்தை சுத்தம் செய்தல், பூக்களால் அலங்கரித்தல் போன்ற செயல்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்கின்றார்கள் என்றும், மாலையில் ஒப்புரவு மற்ரும் செப வழிபாடுகளில் பங்கேற்று தங்களையேத் தயாரித்து வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு முதல் அதாவது ஏறக்குறைய 27 ஆண்டுகளாக பாப்புவா நியூ கினியாவில் வார்த்தை மனுவுருவானவர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள மிகுவேல் அவர்கள், மறைப்பணியாளர்களின் கடுமையான உழைப்பினால் தமத்திரித்துவ மனிதநேயப்பள்ளியானது செயல்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.      

தென்மேற்கு பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கில் அமைந்துள்ள பாப்புவா நியூ கினியா, உலகின் மிகக் குறைந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட நாடுகளில் ஒன்று என்றும், 70 இலட்சத்திற்கும் அதிகமான வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட பேச்சுவழக்குகள் இம்மக்கள் மத்தியில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.

No comments:

Post a Comment