Monday 2 September 2024

திருத்தந்தையின் திருப்பயணம் மதநல்லிணக்கத்தைப் பேணும்!

 


திருத்தந்தையின் திருப்பயணம் மதநல்லிணக்கத்தைப் பேணும்!

பாப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூரை உள்ளடக்கிய திருத்தந்தையின் நான்கு நாடுகளுக்கான திருப்பயணத்தின் முதல் சந்திப்பு இந்தோனேசியாவில் அமைகிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

இந்தோனேசியாவிற்கான தனது திருப்பயணத்தின்போது இஸ்திக்லால் மசூதிக்கு வருகை தரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை, மதநல்லிணக்கத்தைப் பேணுவதற்கான முயற்சிகளுக்கு ஓர் அங்கீகாரத்தையும் மற்றும் ஊக்கத்தையும் தருகிறது என்று ஜகார்த்தாவின் பேராயர் கர்தினால் இக்னேஷியஸ் சுஹாரியோ ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள் கூறியதாக, யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மசூதியின் மதநல்லிணக்க வரலாற்றைப் புரிந்து கொண்ட பின்னரே, இத்தகையதொரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று கர்தினால் ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள் இணையதள செய்தியில் தெரிவித்திருப்பதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தோனேசியாவில் மதங்களுக்கிடையேயான மத நல்லிணக்கத்தைத் திருப்பீடம் உண்மையிலேயே பாராட்டுகிறது என்றும், மேலும் இங்குள்ள இஸ்லாமியத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அந்நாட்டின் ஆயர் பேரவையின்போது கர்தினால் ஹார்ட்ஜோட்மோட்ஜோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இந்தோனேசியாவின் முதல் அரசுத் தலைவர் சுகர்னோ அவர்கள், அதன் முதல் பிரதமர் முகமது ஹட்டா பரிந்துரைத்த மற்றொரு இடத்திற்குப் பதிலாக ஜகார்த்தா பேராலயத்திற்கு அருகில் உள்ள இஸ்திக்லால் மசூதியைக் கட்டத் தேர்வு செய்தது ஒரு தற்செயலான நிகழ்வல்ல, இது ஒரு இணக்கமான வாழ்வை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பெருமிதம் அடைந்துள்ளார் ஹார்ட்ஜோட்மோட்ஜோ.

மேலும் நாட்டில் தற்போதுள்ள மத நல்லிணக்கணம் மற்றும் ஒன்றிப்புக் காரணமாக, இந்தோனேசியாவின் இஸ்லாமியத் தலைவர்கள் வத்திக்கானுக்கு அடிக்கடி அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பேராயர் ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள், அந்நாட்டின் அமைதியான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாம் பற்றி பேசவே அவர்கள் அழைக்கப்படுவதாகவும், இது பாகிஸ்தான் அல்லது மத்திய கிழக்கு போன்ற பிற நாடுகளிலிருந்து வேறுபட்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்தோனேசியாவில் நிறுவப்பட்டுள்ள மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் நல்லுறவுகள் தொடர்ந்து பேணப்பட்டு பலப்படுத்தப்படும் என்று எதிபார்க்கப்படுவதாகவும், உடன்பிறந்த உறவையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதியேற்றுயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் ஹார்ட்ஜோட்மோட்ஜோ.

தூய விண்ணேற்பு அன்னை பேராலயத்திலிருந்து 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது திருப்பயணத்தின்போது செப்டம்பர் 5-ஆம் தேதி, வியாழனன்று, வருகைதருகிறார்.


No comments:

Post a Comment

Pope to religious: 'Take decisive steps to follow Christ'

  Pope to religious: 'Take decisive steps to follow Christ' Pope Francis encourages religious gathered in Rome for their General Cha...