செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நமது மனிதநேயம் அதன் தாங்குதிறன்களை இழக்காதபடி, எல்லாவற்றுக்கும் முன் இருந்த ஞானத்தைத் தேடுவோம் (காண்க சீராக் 1:4) என்றும், இஞ்ஞானமே செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை முழுமையாக மனித தகவல் தொடர்பு சேவையில் வைக்க உதவும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 24, இப்புதனன்று, 'செயற்கை நுண்ணறிவு மற்றும் இதயத்தின் ஞானம்: ஒரு முழு மனித தகவல் தொடர்பு நோக்கி' என்ற கருப்பொருளில் 58-வது உலக சமூகத் தொடர்பு நாளுக்காக வழங்கியுள்ள தனது செய்தியில் இவ்வாறு உரைந்துள்ள திருத்தந்தை, நாம் எப்படி முழு மனிதராக இருந்து, இந்தக் கலாச்சார மாற்றத்தை ஒரு நல்ல நோக்கத்திற்காக வழிநடத்த முடியும் என்பது குறித்து சிந்திக்கவும் அழைப்புவிடுத்துள்ளார்.
இதயத்திலிருந்து தொடங்குவோம்
இந்தச் செயல்முறைக்குள் நாம் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் நுழைய வேண்டும் என்றும், ஆனால் அதில் உள்ள அழிவுகரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள் அனைத்திற்கும் வெளிப்படைத்தன்மையுடனும் கூர்ந்தறியும் திறனுடனும் விழிப்பாய் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இவை யாவும் தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் அரசியல் சிக்கல்கள் என்றும், மனித இதயத்திலிருந்து பிறக்கும் ஞானமின்றி இவைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றும் உரைத்துள்ளார்.
எதார்த்தத்தைப் பார்க்கும் ஆன்மிக வழியைக் கடைப்பிடிப்பதன் வழியாகவும், இதயத்தின் ஞானத்தை மீட்டெடுப்பதன் வழியாகவும் மட்டுமே, நம் காலத்தின் நவீனத்தை நாம் எதிர்கொள்ளவும், விளக்கவும் முடியும் என்றும், முழுமையான மனித தொடர்புக்கான பாதையை நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
மேலும் இதயத்தின் ஞானம் என்பது, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது, ஆனால் அது நம் உணர்ச்சிகள், ஆசைகள், கனவுகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, அது கடவுளுடனான நமது சந்திப்பின் உள்ளார்ந்த இடமாக உள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அப்படியானால், இதயத்தின் ஞானம் என்பது முழு மற்றும் அதன் பகுதிகள், நமது முடிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகள், நமது பெருந்தன்மை மற்றும் பலவீனம், நமது கடந்த காலம் மற்றும் எதிர்காலம், நமது தனித்துவம் மற்றும் ஒரு பெரிய சமூகத்திற்குள் நமது உறுப்பினருரிமை ஆகியவற்றை ஒருங்கிணைக்க உதவும் நற்பண்பாக அமைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாய்ப்பு மற்றும் ஆபத்து
தரவுகளை சேமித்து தொடர்புபடுத்துவதற்கு மனிதர்களை விட இயந்திரங்கள் வரம்பற்ற அதிக திறனைக் கொண்டுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாலும், மனிதர்கள் மட்டுமே அந்தத் தரவுகளை உணர்ந்து புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
மனிதர்கள் எப்போதுமே தாங்கள் தன்னிறைவு பெற்றவர்கள் அல்ல என்பதை உணர்ந்து, சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்துவதன் வழியாகத் தங்கள் பலவீனத்தை வெற்றிகொள்ள முற்படுகிறார்கள் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, தொடக்க கால வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருள்கள், படைக்கலன்களின் நீட்டிப்புகளாகப் பயன்படுத்தப்பட்டன, பின்னர் ஊடகங்கள், பேசும் வார்த்தையின் நீட்டிப்பாகப் பயன்படுத்தப்பட்டன, இப்போது நம் சிந்தனைக்கு ஆதரவாக செயல்படும் அதிநவீன இயந்திரங்களை உருவாக்கும் திறன் பெற்றுள்ளோம் என்றும் விளக்கியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்தக் கருவிகள் ஒவ்வொன்றும், கடவுள் இல்லாமல் கடவுளைப் போல ஆகுவதற்கான தொடக்க கால சோதனையால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் (காண தொநூ 3), அதாவது, கடவுளிடமிருந்து இலவசமாகப் பெறப்பட வேண்டியதை, மற்றவர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதை நம் சொந்த முயற்சியால் புரிந்து கொள்ள விரும்புவது என்றும் விளக்கிக் கூறியுள்ளார் திருத்தந்தை.
இதயத்தின் விருப்பத்தைப் பொறுத்து, நாம் அடையக்கூடிய அனைத்தும் ஒரு வாய்ப்பாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ மாறும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, தகவல்தொடர்பு மற்றும் ஒன்றிப்புக்காக உருவாக்கப்பட்ட நமது உடல்கள் ஆக்கிரமிப்புக்கான வழிமுறையாக மாறும் என்றும், அதேபோல், நமது மனிதகுலத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப விரிவாக்கமும் அன்பான சேவை அல்லது விரோத ஆதிக்கத்திற்கான வழிமுறையாக இருக்கலாம் என்றும் உரைத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அறியாமையை போக்க உதவுவதோடு வெவ்வேறு மக்கள் மற்றும் தலைமுறையினரிடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க முடியும் என்றும், ஆனால் அதேவேளையில், இது மற்றவர்களுடனும் எதார்த்தத்துடனும் நமது உறவை சிதைக்கும்போது விபரீதமாகிறது என்றும் எச்சரித்துள்ளார்.
மனிதகுலத்தில் வளர்ச்சி
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மனித நேயத்தில் வளர அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், சிக்கலான, பல இன, பன்மைத்துவ, பல மத மற்றும் பன்முகக் கலாச்சார சமூகமாக மாறுவதற்கு ஒரு தரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது நமக்கு முன் சவாலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்தப் புதிய தகவல்தொடர்பு மற்றும் அறிவின் கோட்பாட்டு வளர்ச்சி மற்றும் நடைமுறை பயன்பாடு குறித்து மிகவும் கவனமாக சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் விவரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தகவல் தொடர்புத் துறையில் நேர்மறையான பங்களிப்பைச் செய்ய முடியும் என்றும், அது ஊடகங்களின் பங்களிப்பை அகற்றாது, ஆனால் அதனை ஆதரிக்க உதவுகிறது என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இது தகவல்தொடர்பு நிபுணத்துவத்தை மதிக்கிறது, ஒவ்வொரு தகவல் தொடர்பாளரும் தனது பொறுப்புகளைப் பற்றி மேலும் அறிந்திருக்க உதவகிறது, மேலும் அனைத்து மக்களும் தகவல்தொடர்பு பணியில் விவேகமான பங்கேற்பாளர்களாக இருக்க அழைப்பு விடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இன்றைய மற்றும் எதிர்காலத்திற்கான கேள்விகள்
இது சம்பந்தமாக, பல கேள்விகள் இயற்கையாகவே எழுகின்றன என்று கூறியுள்ள திருத்தந்தை, உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுடன் இணைந்து தகவல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் உள்ள தொழிலாளர்களின் தொழில்முறை மற்றும் மனித மாண்பை எவ்வாறு பாதுகாப்பது? இயங்குதளங்களின் இயங்குநிலையை எவ்வாறு உறுதி செய்வது? டிஜிட்டல் பணித்தளங்களை உருவாக்கும் வணிகங்கள், பாரம்பரிய தகவல் தொடர்பு ஊடகத்தின் ஆசிரியர்களைப் போலவே உள்ளடக்கம் மற்றும் விளம்பரம் தொடர்பான தங்கள் பொறுப்புகளை ஏற்க எப்படிச் செயல்படுத்துவது? என்பதுபோன்ற பல கேள்விகளையும் எழுப்பியுள்ள வேளை, இந்த மற்றும் பிற கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் அணுகல் அடிப்படையில் புதிய மாற்றங்களை உருவாக்கி, புதிய சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு வழிவகுக்குமா என்பதைத் தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
மேலும் இந்தக் கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில் முன்னரே தீர்மானிக்கப்பட்டதல்ல; அது நம்மைச் சார்ந்தது என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, நிரல் நெறிமுறைகளுக்குத் தீவனமாக மாறுவதா அல்லது அந்தச் சுதந்திரத்தால் நம் இதயங்களை வளர்த்துக்கொள்வதா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அது இல்லாமல் நாம் ஞானத்தில் வளர முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
காலத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் வழியாகவும், நமது பலவீனங்களை நாம் ஏற்றுக்கொள்வதன் வழியாகவும் அத்தகைய ஞானம் முதிர்ச்சியடைகிறது என்றும், இது தலைமுறைகளுக்கு இடையேயான உடன்படிக்கையில், கடந்த காலத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கும், எதிர்காலத்தை எதிர்நோக்கும் நபர்களுக்கும் இடையில் வளர்கிறது என்றும் தனது செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
No comments:
Post a Comment