திருவள்ளுவர் காட்டும் கடவுள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. தை 2ஆம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்ற திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்று முடிவெடுத்து அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இப்போது நாம் 2055ஆம் திருவள்ளுவர் ஆண்டில் உள்ளோம். செந்நாப்போதர், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படும் திருவள்ளுவரை, அண்மைக்காலங்களில் சில குழுக்கள், தங்களுக்குரியவர் மட்டுமே என சொந்தம் கொண்டாட முயல்வதையும் கவலையுடன் காணகிறோம். ஒரு காலத்தில் இவரை கிறிஸ்தவர் என அடையாளம் காட்ட முயன்றனர் சிலர். இன்றோ, அவருக்கு காவி உடை அணிவித்தும், உத்ராட்சை மாலை போட்டும் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள். உலகப்பொதுமறையைத் தந்த இந்த சமூகப்புரட்சியாளரை ஒரு மதத்திற்கு மட்டும் உரியவர் என்றோ, ஓர் இனத்திற்கு மட்டுமே சொந்தமானவர் என்றோ கூறமுயல்வது, அறியாமையின் வெளிப்பாடு என்றுதான் சொல்லவேண்டும். சமணமும் பௌத்தமும் இருந்த காலத்தில் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகை, கடவுள் நம்பிக்கை உடையவராகத்தான் இருந்தார், ஏனெனில் அவர் கடவுள் வாழ்த்தை எழுதியுள்ளார். திருக்குறளில் கடவுள் பற்றிய கருத்துக்கள் இருந்தாலும், எந்த தனிப்பட்ட கடவுளைப் பற்றியும் அவர் பேசவில்லை. பல திருக்குறள்களில் பண்பு நலன்களை வைத்துத்தான் அவர் கருத்தை தெரிவிக்கிறாரே அன்றி எந்த தனிப்பட்ட கடவுளைப் பற்றியும் அவர் பேசவில்லை. அதில் அவரின் பொதுமை பண்பை நாம் காணலாம்.
ஆதிகாலத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதன் எப்போது இயற்கைக்கு பயந்தானோ அப்போது இருந்தே கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது என்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம். இறை நம்பிக்கை இருப்பதாக திருவள்ளுவர் நம்பினாரே அன்றி, அவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தை சார்ந்தவர் என்று எப்போதும் அவர் நினைக்கவில்லை. அவரின் குறள்கள் எல்லாம் சமுதாயப் புரட்சிக்குத்தான் வித்திட்டன என்பதை எவராலும் மறுக்கமுடியாது. கடவுளைவிட மனிதனுக்குத்தான் அவர் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை திருக்குறள் ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.
கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிறமொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார் என்றால், திருவள்ளுவர் அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார் என்றுதான் கூறவேண்டும்.
திருக்குறளில் இறை என்ற சொல் 10 குறள்பாக்களில் இடம் பெற்றுள்ளது. இறைவன் என்ற சொல் 3 குறள்பாக்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் குறள் 5 மற்றும் 10 ஆகிய இரண்டு குறள்பாக்களைத் தவி மற்றபிற குறள்களில் எல்லாம் இறை என்பது மன்னனைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்துள்ளது.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் குறள்பாக்களில், பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண் குணத்தான், என பண்புகளைக் குறிப்பிட்டு அப்பண்பிற்கு உரியவராகக் கடவுளை திருவள்ளுவர் வாழ்த்துவதைக் காண்கிறோம்.
இறைவன் என்ற சொல்லை, கடவுளையும், அரசனையும், தலைவனையும் குறிப்பிட வள்ளுவர் உபயோகப்படுத்தி இருக்கிறார். 7 குறள்பாக்களில் 3 குறட்பாக்களில் உள்ள இறைவன் என்ற சொல் கடவுளையும், அடுத்து 3 குறள்பாக்களில் உள்ள இறைவன் என்ற சொல் அரசனையும், ஒரு குறள்பாவின் இறைவன் என்ற சொல், தலைவனையும் குறிப்பிடுகின்றன.
திருக்குறளில் முதல் அதிகாரமான 'கடவுள் வாழ்த்து' என்பதில், கடவுள் என்ற சொல், தலைப்பில் மட்டுமே இருக்க, திருக்குறளில் வேறு எங்கும் கையாளப்படவில்லை என்பது பலருக்கு வியப்பான ஒன்றுதான். ஏனெனில், கடவுள் என்ற சொல் முழுமையான தமிழ்ச் சொல். அதுபோல், தமிழ் என்ற சொல்லும் திருக்குறளில் இல்லை.
'அ என்ற எழுத்துத் தான் முதல் எழுத்து. அது போல ஆதிபகவன் தான் உலகத்திற்கு முதல்வன்' என்று கடவுளைத் தொழுது, தன் திருக்குறளை ஆரம்பிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
திருக்குறள், மாந்தர்தம் அகவாழ்வில் சுமுகமாகக் கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்றால், நாலும் இரண்டும் சொல்லுக்குறதி என்று கூறி நாலடியாரையும், திருக்குறளின் அருமையையும் பறைசாற்றுவதை நாம் அறிவோம். இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் திருக்குறள் "உலகப் பொது மறை" என்று அழைக்கப்படுகிறது. உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள், அற நூலாக தோன்றினாலும் இதில் சமூக சிந்தனை, சமூக தேடல், விழிப்புணர்வு, வாழ்வியல் சிந்தனை என பல்வேறு நிலைகளை உடையது. அவ்வகையில் மனிதநேயக் கருத்துக்களும் நிறைந்து வழிகின்ற ஊற்றாகத் திகழ்கிறது.
சமுதாயம் விழிப்புப் பெறவும், மக்களிடையே மறுமலர்ச்சிக்கான விழிப்புணர்வை ஊட்டவும் கருத்தக்களை வழங்கிய சிந்தனைகளில் வள்ளுவர் முன்னணியில் நிற்கின்றார். வள்ளுவரின் பார்வை முழுமையான மானுட வாழ்வியல் பார்வையாகவே தடம் பதித்துள்ளது. மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்த போது அவர்களிடம் பரப்பப்பட்டு வந்த மதச் சடங்குகளும் மூடப்பழக்கங்களையும் சீர்திருத்த விழைந்தார் பெரியார். அதன் தொடர்ச்சியாக, மொழியிலும், இலக்கியங்களிலும் மறைந்தும், மறையாமலும் வழங்கிவந்த கருத்துகளையும் களைந்து புதிய புதிய சிந்தனைகளுக்கு வழிகோலிய பெரியார், உலக இலக்கியங்களில் நீதி வழங்கியதில் சிறந்த நூல் திருக்குறள் ஒன்றுதான் என்பதை தமது கருத்தாக வெளிப்படுத்தி இருக்கிறார். நம் மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான உயர்ந்த நெறிகளையும் மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ளும் முறையையும் வழி வகுக்கக் குறளுக்கு மேலான ஒரு நீதி நூல் வேறு கிடையாது என்பது பெரியாரின் கருத்து. தமிழ் சமுதாயத்தில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்றி சாதி, மதம் போன்ற கூறுகள் இல்லாத சமத்தவ சமுதாயத்தை உருவாக்க நினைத்த பெரியாருக்கு, அவருடைய கருத்துகளை அரண் செய்வது போலவும், அவரது கொள்கைகளுக்கு வலுவூட்டுவதாகவும் அமைந்துள்ள பல்வேறு கருத்துகளை தனக்கேவுரிய ஆய்வாகப் பெரியார் திருக்குறளை அணுகி இருக்கிறார் என்று கூறலாம்.
இதற்கு பலம் சேர்ப்பதாக, வள்ளுவரின்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும்
செய்தொழில் வேற்றுமையான், என்பதை ஓர் உதாரணமாகக் கூறலாம்.
இதேபோல், மனிதன் பிற மனிதனிடத்தில் பிற உயிர்களிடத்தும் காட்டும் நேயமே, மனிதநேயம் ஆகும். பழங்காலத்தில் மனிதநேயம் என்பது அருளுடைமை என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. பிறர் ஒருவருக்கு இடர் ஏற்பட்டிருந்தும், அது தமக்கு ஏற்பட்ட துன்பம் போல் கருதி பிறருக்கு உதவுமாறு செய்யும் ஈகைக் குணமே, அருளுடைமை. ஓர் உயிர் துன்பப்படும் போது, அவர் உயிர் பால் கசியும் ஈரமுடைமையை அருளுடைமை எனலாம். ஒரு மதம் கூறிய சில கருத்துக்களை பிற மதங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்களில் ஒன்றுதான் அருளுடைமை என்னும் மனிதநேயம். "உன் உயிரைப் போல் பிற உயிரையும் நேசி" என்ற மனிதநேயக் கருத்தை அனைத்து சமயங்களும் கூறுகின்றன. இதனையே வள்ளுவர்,
"நல்லா ட்டால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை" என உரைக்கிறார். நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும், என இதற்கு விளக்கமளிக்கிறார் மு. வரதராசனார்.
இதையே மீண்டும் வள்ளுவர்,
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர், என்கிறார்.
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார் என்பது இதன் பொருள்.
இதையும் கொஞ்சம் தாண்டிச் சென்று,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அதாவது, அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என எண்ணுவர், அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர் என்பதையும்,
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
அதாவது, அடுத்தவர் பொருளைத் திருடி எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளத்தில் எண்ணுவது கூடத் தீமையானது என்பதையும் வள்ளுவம் கூறியுள்ளதை நாம் அறிவோம்.
இதை தவறு என்று எந்த மதமாவது கூறுமா, அல்லது இதற்கு எதிரானக் கருத்துக்களை எந்த மதமாவது கூறியதுண்டா? ஆகவேதான் அழுத்திக் கூறுகிறோம், வள்ளுவர் கூறும் நெறிகள் அனைத்துச் சமயத்தவரும் ஏற்றுப் போற்றத் தக்கன. திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாய் நின்று நன்னெறி புகட்டும் அருமறையாக உள்ளது. “வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற வரிகளில், வள்ளுவனால் நாம் கண்ட பெருமையை உணர்கிறோம்.
உலகிற்கு இந்த தமிழர்தம் பெருமையை அறிமுகம் செய்தவர்கள் என்றுப் பார்த்தோமானால், திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு,போப், திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்த வீரமாமுனிவர், திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதிய மணக்குடவர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இறுதியாக ஒன்றைச் சொல்லி இன்றைய நிகழ்ச்சியை நிறைவுச் செய்கிறோம். திருவள்ளுவரை எந்த மதத்திற்குள்ளோ, இனத்திற்குள்ளோ இழுத்து முடக்கிவிடாதீர்கள். அவர் எந்த மதத்தையும் சார்ந்தவரல்ல. தனியொருவனுக்கு உணவில்லையெனில் இஜ்ஜகத்தினை அழித்திடுவோம் என்று கூறிய பாரதியைப்போல் அல்லாமல்,
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டி பரந்து
கெடுக உலக இயற்றியான்.
என்றவர் வள்ளுவர். அதாவது, ஒருவன் மற்றவனை இரந்து பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை வருமாயின் இந்த உலகம் மட்டுமல்ல அதற்கெல்லாம் அடிப்படையாகக் கருதப்படும் கடவுள்தான் முதலில் அழிக்கப்பட வேண்டியவனாவான் என்ற வள்ளுவரின் கூற்று சிந்திக்கத் தக்கது.
ஆகவே அன்புள்ளங்களே, திருவள்ளுவரை ஒரு மனித நேயச் சிந்தனையாளராக, சமுதாயப் புரட்சியாளராக வாழ்வில் எடுத்துக்கொண்டு அவர் வழி நடப்போம்.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு, என்பவரும் வள்ளுவரே.
No comments:
Post a Comment