Friday 19 January 2024

திருத்தந்தை ஆறாம் பவுல் என் மனம் கவர்ந்த மனிதர்!

 

திருத்தந்தை ஆறாம் பவுல் என் மனம் கவர்ந்த மனிதர்!



கிறிஸ்துவில உருமாற்றம் பெற்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் சிறந்த சிந்தனையாளர், படிப்பினையாளர், சான்றாளர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவையை அன்புகூர்வதற்கான அறிவுரை, திருத்தந்தை ஆறாம் பவுலின் ஆசிரியத்தில் அடிக்கடி மற்றும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது என்றும், கிறிஸ்துவை நாம் காணும் கண்ணாடியாகவும், கிறிஸ்துவைச் சந்திக்கும் இடமாகவும் அவர் திருஅவையைக் கருதினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 18, இவ்வியாழனன்று வெளியிடப்படவுள்ள ‘ஆறாம் பவுல், கிறிஸ்துவின் மறையுடலின் மறைவல்லுநர்’ "Paul VI, Doctor of the Mystery of Christ" என்ற புதிய நூலிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்துவிடம் திருத்தந்தை ஆறாம் பவுல் செய்த மிகவும் அவசியமான இறைவேண்டலை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம் என்றும், கிறிஸ்துவின் மீதான இந்தத் தனித்துவமான மற்றும் முழுமையான அன்பைத்தான் கர்தினால் செமராரோ இந்நூலில் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்துவில உருமாற்றம்  பெற்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் சிறந்த சிந்தனையாளர், படிப்பினையாளர், சான்றாளர் என்று புகழாரம் சூட்டியுள்ள திருத்தந்தை, இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று திருத்தூதர்களின் தோழராக அவர் நற்செய்திக்குச் சான்று பகர விரும்பினார் என்றும் உரைத்துள்ளார்.

மேலும் தான் இயேசுவுடன் உருமாற்ற மலையில் இருக்கவேண்டும் (cum ipso in monte) என்ற ஆறாம் பவுலின் உள்ளார்ந்த ஆசைதான் அவரைக் கிறிஸ்துவில் உருமாற்றம் பெற்ற மனிதராக மாற்றியது என்றும், தனது அணிந்துரையில் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை புனித ஆறாம் பவுலின் சிந்தனைகள் அடங்கிய இந்தப் புதிய நூல் வெளிவருவதில் தான் மிகவும் மகிழ்வதாகவும், அதற்குக் காரணம் அவரது பக்திநிறைந்த உருவம் எப்போதும் தனது மனம் கவர்ந்ததாக இருந்தது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை புனித ஆறாம் பவுலின் நினைவு தினத்தை முன்னிட்டு புனிதர்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள், 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 2014-ஆம் ஆண்டு வரை வழங்கிய மறையுரைச் சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...