Tuesday, 12 September 2023

புனிதர்களாக அறிவிக்கப்பட்ட உல்மா குடும்பம்

 

புனிதர்களாக அறிவிக்கப்பட்ட உல்மா குடும்பம்



துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 1944 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள் ஜெர்மன் படைவீரர்களால் உல்மா குடும்பத்தார் அழிக்கப்பட்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நன்மையின் உந்து சக்தியாகவும், தேவையிலிருப்பவர்களுக்கு பணியாற்றுவதில் முன்மாதிரிகையாகவும் போலந்தின் உல்மா குடும்பம் இருக்கின்றது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை போலந்து நாட்டு உல்மா குடும்பத்தாரான கணவன் ஜோசப், நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி விக்டோரியா, முழுவதும் பிறக்காத குழந்தை உட்பட அவர்களின் 7 குழந்தைகளும் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் வத்திக்கான் வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இதனை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மன் படையால் துன்புறுத்தப்பட்ட சில யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக போலந்து நாட்டின் மார்க்கோவாவில் உல்மா குடும்பம் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து போரின் இருளில் ஒளியின் கதிர்களாக அக்குடும்பம் திகழ்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 1944 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள் ஜெர்மன் படைவீரர்களால் அழிக்கப்பட்ட இந்த முழு குடும்பமும் நற்செய்தியை அறிவிக்கும் அன்புடன் வெறுப்பையும் வன்முறையையும் பெற்றுக்கொண்டனர் என்றும், புனிதராக அறிவிக்கப்பட்ட அத்தகைய குடும்பத்தாரை வாழ்த்தும் வண்ணம் கரவொலி எழுப்பவும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஏறக்குறைய 20000 திருப்பயணிகள் கூடியிருந்த வத்திக்கான் வளாகத்தில் உக்ரைன் நாட்டுக்கொடியினைப் பலர் ஏந்தி இருக்க அதனைச் சுட்டிக்காட்டி, போரினால் இன்று வரை துன்புற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஆயுத பலத்திற்கு எதிராக இரக்கச்செயல்களையும், வன்முறைக்கு எதிராக வலிமையான செபங்களையும் அளிக்க அழைப்புவிடுத்தார்.

செப்டம்பர் 12 செவ்வாய்க்கிழமை புத்தாண்டினைக் கொண்டாடும் எத்தியோப்பியா மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டில் நல்லிணக்கம் மற்றும் அமைதி நிலவ செபிக்கக் கேட்டுக்கொண்டு எத்தியோப்பிய மக்களுக்குத் தன் செபத்துடன் கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...