Tuesday, 26 September 2023

கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்புக்களான சிறார்

 

கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்புக்களான சிறார்



நம்மீது கொண்ட அன்பிற்காக தன் உயிரையே கையளித்த இயேசுவின் அன்பை விடப் பெரிய அன்பு எதுவுமில்லை என்பதை பாடுபட்ட இயேசுவின் திருமுகம் உணர்த்துகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

நாம் சந்திக்கும் ஒவ்வொரு சிறாரும் கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்பு என்று நம்பிக்கை கொண்டால் உலகம் மாறும் என்றும், துன்புறும் சிறார் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் துன்பத்திலும், வெரோனிகா கிறிஸ்துவின் முகத்தைத் துடைத்த துணியில் பதிந்த அவரின் முகத்தைக் காண்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 25 திங்கள் கிழமை வத்திக்கானில் இலத்தீன் அமெரிக்க சங்கத்தின் சிறார் பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை மற்றும் உலகில் நடைபெறும் சிறாருக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பணியாற்றி வரும் அப்பிரதிநிதிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறாருக்கு எதிரான வன்முறைகள் சோகத்தின் பிரதிபலிப்பு என்றும், மனிதகுலம் மேல் தேவையான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் ஒரு துயரமான நிகழ்வு என்றும் கூறினார்.

திருஅவை சிறார் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணியில் போதுமான முன்னேற்றம் அடைந்துள்ளது அதில் தொடர்ந்து முன்னேறும் என்று தான் உறுதியாகக் கூற முடியும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அத்தகைய பணிகள் சமுதாயத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பணியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்வழியில் திருஅவையின் வளர்ச்சிகள் மற்றும் சாதனைகள் மற்ற நிறுவனங்களுக்கு கவனிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரிலும் கிறிஸ்துவைக் கண்டறிந்து, செபத்தில் அவர்களை இயேசுவிடம் அர்ப்பணித்து செபிக்கவும் அழைப்பு விடுத்தார்.

உண்மையான தாழ்ச்சி மனப்பான்மைக் கொண்டு நம்மில் இருக்கும் சிறார் மத்தியில் நம்மை நாம் அடையாளம் காணவும், பாடுகள்பட்ட இயேசுவின் முகத்தில் நமது துன்பங்களை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை நாடி வருபவர்களை வரவேற்பவர்களாக அவர்களது அருகில் உடன் இருப்பவர்களாக வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நம்மை மன்னிக்கின்ற குணப்படுத்துகின்ற, மீட்கின்ற இயேசுவோடு உரையாடி அவரது வார்த்தைகளைக் கேட்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மீது கொண்ட அன்பிற்காக தன் உயிரையே கையளித்த இயேசுவின் அன்பைவிடப் பெரிய அன்பு எதுவுமில்லை என்பதை பாடுபட்ட இயேசுவின் திருமுகம் உணர்த்துகின்றது என்றும் கூறினார்.

ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள், உன்னை அன்பு செய்வது போல உன் அயலாரையும் அன்பு செய் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க, நமது காயங்கள், தாழ்ச்சி, மன்னிப்பு, ஆறுதல் ஆகியவற்றின் தேவையை அறிந்து கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 1ஆம் நாள் திருஅவை சிறப்பிக்க இருக்கும் சிருமலர் குழந்தை இயேசுவின் புனித தெரசா நமக்கு வலியுறுத்துவது போல மகிழ்ச்சியற்ற மற்றும் அவநம்பிக்கையான பாவிகளின் மனமாற்றத்திற்காக செபிக்கவும், அதன்வழியாக அத்தகையவர்கள், "நீங்கள் ஏன் என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?" என்று பிறர் வழியாக இயேசு கேட்கும் கேள்விகளை உணர்ந்து வாழ வழிவகுக்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...