Monday 4 July 2022

இந்திய விவசாய உற்பத்தி

 இந்திய விவசாய உற்பத்தி


வாழைப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் நிற்கும் தமிழகம், கரும்பு உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் ஆறாவது இடத்திலும், பருத்தி உற்பத்தியில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்தியாவின் 58 விழுக்காட்டு மக்களுக்கு விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. இந்த வகையில் இந்தியாவின் 28 மாநிலங்களையும் 8 ஒன்றியப் பகுதிகளையும் எடுத்து நோக்கும்போது, விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் முதல் 10 நாடுகளில், தமிழ்நாடு இல்லை என்பது கவலைதரும் ஒன்றாக உள்ளது. தானியங்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தியில் முதலிடத்தில் நிற்கும் மேற்கு வங்காளம், நெல் உற்பத்தியிலும் முதலிடத்தில் நிற்கின்றது. நெல் உற்பத்தியில், அதற்குப்பின்தான் ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வருகின்றன. விவசாய உற்பத்தியில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள உத்திரப்பிரதேசம், கோதுமை உற்பத்தியில் முன்னணியில் நிற்கிறது. கரும்பும் இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த பூமியில் வளம் நிறைந்த மாநிலம் என்று குறிப்பிட வேண்டுமானால், பஞ்சாபைத்தான் குறிப்பிடவேண்டும். கோதுமை, கரும்பு, நெல், காய்கறிகள், பழம் என்று இங்கு அனைத்தும் உள்ளன. இதனால்தான் இதனை இந்தியாவின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கின்றனர். இன்று உணவு உற்பத்தியில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் வெகு வேகமாக வளர்ந்துவரும் மாநிலமாக குஜராத் இருந்துவருகிறது. இங்கு பருத்தி உற்பத்தி அதிகமாக இடம்பெறுகிறது. அடுத்து விவசாய உணவு உற்பத்தியில், ஹரியானா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், ஆந்திரா, கர்நாடகா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.

இந்தியாவின் விவசாய உற்பத்திப் பொருட்களாக, அரிசி, பால், கோதுமை, மாம்பழம், கொய்யா, கரும்பு, பருத்தி, வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வேர்க்கடலை ஆகியவைகளைக் குறிப்பிடலாம். இதில் வாழைப்பழ உற்பத்தியில் மட்டும்தான் முதலிடத்தில் நிற்கிறது தமிழ்நாடு. இதில் கரும்பு உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் ஆறாவது இடத்திலும், பருத்தி உற்பத்தியில் எட்டாவது இடத்திலும் உள்ளது தமிழகம். உலகில் அதிக அளவில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. உலகில் விவசாய உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, பழங்கள் உற்பத்தியிலும் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து விவசாயம் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களாக, அரிசி, காய்கறி, பழங்கள், நிலக்கடலை, பருப்பு வகைகள், இறைச்சி, கோதுமை, பால் பொருட்கள், மதுபானங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...