Friday 1 July 2022

செம்மண்

 

செம்மண்


செம்மண் வகைகள், அமிலத்தன்மையுடைய கருங்கல், நீஸ் போன்ற பாறைகள், பழங்காலப் படிகப் பாறைகள், உருமாறியப் பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானதாகும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

நாம் வாழும் பூமியின் மண்ணை, பொதுவாக செம்மண், செம்புறை மண், கரிசல் மண், வண்டல் மண் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றில் செம்மண் என்ற மண் வகைகள், அமிலத்தன்மையுடைய கருங்கல், நீஸ் போன்ற பாறைகள், பழங்காலப் படிகப் பாறைகள், உருமாறியப் பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானதாகும். மலைச்சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டுவரப்பட்டு, மலை அடிவாரங்களில் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால், இவை சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றன. இப்பூமியின் மண்ணில் ஏறத்தாழ 13 விழுக்காடு செம்மண் ஆகும். இத்தகைய மண், சீனா, இந்தியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. சீனாவில் இம்மண் 10,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், இந்தியாவில் 3,50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த 130 இலட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பளவில், 78 இலட்சம் ஹெக்டேர் நிலம், செம்மண் நிலமாகும். செம்மண் நிலத்தை, செவல் மண் அல்லது செவ்வல் மண் என்றும் அழைப்பர். இம்மண் செவ்வாய் கோளிலும் இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

செம்மண்ணின் குணங்கள்

செம்மண்ணில் பொதுவாக 20 விழுக்காடு களிமண்ணும், 10 விழுக்காடு வண்டல் மண்ணும், 70 விழுக்காடு மணலும் கலந்து காணப்படுகின்றன. செவ்வல் மண்ணில் களியின் அளவு, கரிசல் மண்ணைக்காட்டிலும் 50 விழுக்காடு குறைவாக உள்ளது. குறைவான களி அளவும் அதிகமான மணலும் உள்ளதால் இவற்றின் மண் துவாரப் பாதையும் அதன் காரணமாக நீர் பிடிப்புத்தன்மையும் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் இவை கயோலினைட் என்ற களித்தாது அதிக அளவில் உள்ளதால், இம்மண்ணிற்கு நீரைத்தேக்கி வைக்கும் தன்மை குறைவு.

வேதியியல் குணங்கள்

இம்மண்களில் கார அமில நிலை 6.7 லிருந்து 7.0 வரை இருக்கும். இவைகளில் கரையும் உப்புகளின் அளவு மிகக் குறைவாக உள்ளதால், மின் கடத்தும் திறன் 0.1 என்ற அளவிற்குக் குறைவாகவே உள்ளது. இரும்பு ஆக்சைடின் அளவு 6 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. இது மணிச்சத்து உரத்தை மண்ணில் நிலை நிறுத்தும் தன்மை உடையது. கரிமப்பொருட்களின் அளவு 0.5 விழுக்காடு என்ற அளவிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்தி கரிமப் பொருட்களின் அளவை உயர்த்துவது அவசியமாகும். இம்மண்ணில், தழைச்சத்து சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 150 கிலோ உள்ளது. இது பயிர்களின் தேவைக்கு குறைவான அளவாகும். மணிச்சத்து, ஒரு ஹெக்டேருக்கு 15 கிலோ உள்ளது. சாம்பல்சத்து, ஒரு எக்டேருக்கு 250 கிலோ உள்ளது மணிச்சத்தும், சாம்பல்சத்தும் பயிர்களுக்கு தேவையான அளவு உள்ளது. (நன்றி: விக்கிப்பீடியா)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...