Friday, 1 July 2022

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றம்

 

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றம்


இந்தியாவில் கிறிஸ்தவர்கள்மீதான வன்முறைகளைத் தடுக்கக்கோரி பெங்களூர் கிறிஸ்தவத் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவை, வருகிற ஜூலை 11ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை தடுக்கக்கோரி பெங்களூர் கிறிஸ்தவத் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவை, இந்திய உச்ச நீதிமன்றம் வருகிற ஜூலை 11ம் தேதி விசாரிக்கவிருக்கிறது என்று ஊடகச் செய்திகள் அறிவித்துள்ளன,

இந்தியாவில் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எதிராக, வெறுக்கத்தக்க பேச்சுகள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி, பெங்களூர் உயர்மறைமாவட்ட கத்தோலிக்கப் பேராயர் பீட்டர் மச்சாடோ, இந்திய இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு ஆகியோர் இணைந்து தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்த மனுமீதான விசாரணை, நீதிபதிகள் சூர்ய காந்த் (Surya Kant), ஜே.பி.பார்திவாலா (JB Pardiwala) ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்காடிய மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் (Colin Gonsalves) அவர்கள், கடந்த மே மாதத்தில், வலதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்களால் இந்திய நாட்டின் கிறிஸ்தவ சமுதாயத்துக்கு எதிரான வன்முறையின் மோசமான நிகழ்வுகள் மற்றும் இலக்குவைத்து வீசப்படும் வெறுப்புப் பேச்சுகள் என, 57 வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருகின்றன. எதிர்வரும் காலங்களில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று எடுத்துரைத்தார்.

மேலும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எதிராக பரவலான வன்முறை மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை நிகழ்த்தும் குழுக்களையும், வழிபாட்டுத் தலங்கள், பிற கிறிஸ்தவ நிறுவனங்களின்மீதான தாக்குதல்கள் உட்பட அனைத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்த மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகள் தவறிவிட்டன. எனவே, இதைத் தடுக்க இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என்றும், வழக்கறிஞர் கோன்சால்வ்ஸ் அவர்கள் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் சொல்வது சரியாக இருந்தால் அது கவலைக்குரியது. ஆனால் மனுவின் தகுதியைப் பற்றி எங்களால் மேலும் கூற முடியாது. ஜூலை 11 அன்று இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுகிறோம் எனக் கூறியுள்ளனர். (Vikatan/NDTV)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...