Tuesday, 11 January 2022

திருப்பீடத்திற்கான அரசியல் தூதர்களுக்கு திருத்தந்தை உரை

 


குடிபெயர்தல், காலநிலை மாற்றம், பெருந்தொற்று, ஆயுத பயன்பாடு, கல்வியின் முக்கியத்துவம், மாண்புடன் கூடிய வேலைவாய்ப்பு ஆகியவைக் குறித்து திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மனிதகுலம் இணைந்து வாழ முயல்கையில் உருவாகும் பிரச்சைனைகளுக்குத் தீர்வு கண்டு இணக்க வாழ்வை ஊக்குவிப்பது, அரசியல் இராஜதந்திர செயலாண்மைத் திறனின் நோக்கமாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் வழக்கப்படி, ஜனவரி 10ம் தேதி, திங்களன்று, திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து நிலைகளிலும் ஆழமான ஒன்றிப்பை ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கொரோனா பெருந்தொற்றால் சமூகத் தனிமைப்படுத்தல்களும், இறப்புகளும் அதிகரித்துள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில், தனிமனிதர்களின், அரசுகளின் அனைத்துலக அமைப்புகளின் அர்ப்பணம் இன்றியமையாததாக இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

லெபனான் நாட்டிலும், ஈராக் நாட்டிலும் அமைதி நிலவ உழைக்க வேண்டியதன் அவசியத்தையும், சிரியாவின் வருங்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை, அனைத்துலகச் சமுதாயத்தில் பாராமுகத்துடன் நடத்தப்படும் ஏமன் நாட்டுப் பிரச்சனை, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேல் நாட்டிற்கிடையேயான அமைதி பேச்சு வார்த்தைகளின் மந்தநிலை, லிபியா, சூடான், தென்சூடான், எத்தியோப்பியா ஆகியவைகளில் காணப்படும் பதட்ட நிலைகள், மியான்மாரின் அரசியல் நெருக்கடி ஆகியவைகளையும் எடுத்துரைத்து, தீர்வுகளுக்கு உதவ அழைப்பு விடுத்தார்.

உலகில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அவைகளுக்கு உதவி வரும் அமைப்புகளுக்குப் பாராட்டுகளை வழங்கிய அதேவேளை, புலம்பெயரும் மக்கள், குற்றக்கும்பல்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாவதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடிபெயர்தல், பெருந்தொற்று, காலநிலை மாற்றம் போன்றவை அனைத்து நாடுகளையும் உள்ளடக்கித் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சனைகளாக இருக்கும் வேளையில், சில குறிப்பிட்ட நாடுகள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள், ஏனைய நாடுகளில் திணிக்கப்படும் அச்சத்தையும், வரலாறு திரித்து எழுதப்படும் ஆபத்தையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியத்தையும், அதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையேயுள்ள தொடர்பையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பெரும்புயல் அழிவுகளை எடுத்துரைத்து, அடுத்த நவம்பரில் எகிப்தில் நடைபெறயுள்ள COP 27 கூட்டத்திற்குச் சிறப்பான தயாரிப்புகள் இடம்பெறட்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.

இன்றைய உலகின் பிரச்சனைகளுக்கு காலநிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கும்போது, ஆயுதப் பயன்பாடுகள் அதிகரிப்பும் பிறிதொரு காரணமாக இருக்கின்றது என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகம் தயாரித்துள்ள ஆயுதங்களுள், அணு ஆயுதமே மிகுந்த கவலை தருவதாக உள்ளது என்ற திருத்தந்தை, அணுஆயுதமற்ற ஓர் உலகு என்பது இயலக்கூடியது, மற்றும் அத்தியாவசியமானது என்பதையும் எடுத்துரைத்து, ஈரானுடன் அணுஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்த முயற்சிகள் வியன்னாவில் மீண்டும் துவக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இன்றைய உலகில் கலந்துரையாடல், மற்றும் உடன்பிறந்த நிலையின் கலாச்சாரத்தை ஊக்குவிக்க கல்வியின் முக்கியத்துவம், மற்றும் மாண்புடன் கூடிய வேலைவாய்ப்பு ஆகியவைகளையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அமைதியை உருவாக்கும் பணிகளில் அனைத்து அரசியல் தூதர்களும் அச்சமின்றி செயல்பட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன், திருப்பீடத்திற்கான நாடுகளின் அரசியல் தூதர்களுக்குரிய உரையை நிறைவுச் செய்தார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...