உருமாறிய கோவிட் பெருந்தொற்று கிருமிகளின் அச்சுறுத்தல் மீண்டும் துவங்கியுள்ளதால், கனடா நாட்டு ஆயர்களும், பழங்குடியனத்தவரும் திருத்தந்தையைச் சந்திக்கும் நிகழ்வு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கனடா நாட்டின் பழங்குடியினப் பிரதிநிதிகள், இம்மாதம் 17 முதல் 20ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், திருப்பீடத்தில் மேற்கொள்ளவிருந்த சந்திப்பு, தற்போதய கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக, வேறு ஒரு தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளதாக கனடா ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
கனடா திருஅவையால் நடத்தப்பட்ட மாணவர் தங்கும் விடுதிகளில் இடம்பெற்ற சோக நிகழ்வுகள் குறித்து விவாதிக்கும் நோக்கத்தில், டிசம்பர் மாதம் 17ம் தேதி முதல் 20ம் தேதி முடிய பழங்குடியினப் பிரதிநிதிகளும், ஆயர்களும், வத்திக்கானுக்கு வருகை தருவது, திட்டமிடப்பட்டிருந்தது.
கனடா நாட்டின் பழங்குடியின மக்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரித்து, அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் நோக்கத்துடன், தங்கும் விடுதிகளில் கட்டாயமாக தங்கவைக்கப்பட்டு, கல்வி வழங்கப்பட்டபோது இடம்பெற்ற அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பாக, இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1880ம் ஆண்டுகளிலிருந்து 20ம் நூற்றாண்டின் இறுதி 10 ஆண்டுகள் வரை கனடா திருஅவையின் கண்காணிப்பில், அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த மாணவர் காப்பகங்கள் தொடர்புடையச் சந்திப்பும், திருஅவை தலைமைப்பீடத்துடன் கலந்துரையாட இப்பிரதிநிதிகளின் வத்திக்கான் பயணமும் 2022ம் ஆண்டில் நிலைமைகள் சீரானவுடன் இடம்பெறும் என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
உருமாறிய கோவிட் பெருந்தொற்று கிருமிகளின் அச்சுறுத்தல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள், நல அதிகாரிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுடன் கலந்தாலோசித்தபின் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கனடா ஆயர்கள் தெரிவித்தனர்.
குணப்படுத்தல், மற்றும் ஒப்புரவை நோக்கியப் பாதையில் ஏற்பாடு செய்யயப்பட்ட இச்சந்திப்பு, பிரதிநிதிகளின் நலன்கருதி தள்ளிப்போடப்பட்டுள்ளதேயன்றி, நீக்கப்படவில்லை என்பதையும் கனடா ஆயர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment