ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு பள்ளியில், டிசம்பர் 6 இத்திங்களன்று, இந்து அடிப்படைவாதிகள் அத்துமீறி நுழைந்து, அப்பள்ளியை சேதமடையச் செய்துள்ளனர் என்று UCA செய்திக்குறிப்பு கூறுகிறது.
இப்பள்ளியில், மாணவர்கள், அரசுத்தேர்வுகளை எழுதிவந்த வேளையில் 500க்கும் அதிகமான இந்து அடிப்படைவாதிகள், “Jai Shree Ram” என்ற கூச்சலுடன், பள்ளிக்குள், இரும்பு கம்பிகளையும், கற்களையும் கொண்டுவந்து, பள்ளியின் மீது தொடர்ந்து கற்களை வீசினர் என்று கூறப்படுகிறது.
இந்தக் கலவரத்தால் திகிலடைந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பான அறைகளுக்கு மாற்றி, தங்கள் தேர்வினைத் தொடர்ந்து எழுத உதவி செய்தனர் என்று UCA செய்தி கூறுகிறது.
பள்ளியில், இந்து மாணவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர் என்ற பொய்யான ஒரு வதந்தியை, இந்து அடிப்படைவாதிகள் பரப்பிவந்தனர் என்பதை அறிந்த பள்ளி நிர்வாகம், தங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு தேவை என்று முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும், காவல் துறையினர் இந்த வனமுறை நிகழ்ந்த பின்னரே அங்கு வந்து சேர்ந்தனர் என்று, பள்ளி முதல்வர், அருள் சகோதரர் Antony Pynumkal அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
அக்டோபர் மாத இறுதியில், இந்த பள்ளிக்கு 3 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு பங்கு ஆலயத்தில், கத்தோலிக்க சிறுவர் சிறுமியரின் புதுநன்மை நிகழ்வு நடைபெற்றதையொட்டிய புகைப்படங்கள் வெளியானதை, மதமாற்றம் என்று தவறாக கற்பனை செய்து, இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த வன்முறை நிகழ்வைக் குறித்து கேள்விப்பட்ட இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலரான பேராயர் Felix Machado அவர்கள், நாம், 21ம் நூற்றாண்டில் வாழும் இந்திய குடிமக்கள் தாமா என்றும், இந்த நாட்டில் உயிர்களின் மதிப்பு ஏன் இவ்வளவு தூரம் தாழ்ந்துவிட்டது என்றும் புரியவில்லை என்று கூறியுள்ளார்.
புனித யோசேப்பு பள்ளியில் பயிலும் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களில், 1 விழுக்காடு மாணவர்களே கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இயங்கும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில், 2014ம் ஆண்டு முதல் ஆளப்படும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும், அதைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன. (UCAN)
No comments:
Post a Comment