Friday, 18 March 2016

செய்திகள்-18.03.16

செய்திகள்-18.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. எளியவர்களைத் தேடிச்செல்ல விண்ணப்பித்த திருத்தந்தை

2. Instagram செயலியில் தன் பகிர்வுகளைத் துவங்கும் திருத்தந்தை

3. ஏமனில் கடத்தப்பட்ட இந்திய அருள்பணியாளர் நிலை என்ன?

4. அயர்லாந்து மக்களுக்கு புனித பேட்ரிக் திருவிழாச் செய்தி

5. இலங்கை சிறுபான்மையினருக்கு சம உரிமைகள் வேண்டி, கிறிஸ்தவ அமைப்பு

6. முதுபெரும் தந்தை பர்த்தலோமேயுவின் தவக்காலச் செய்தி

7. இந்தியாவில் சூரத் இரயில் நிலையம் மிகவும் சுத்தமானது

------------------------------------------------------------------------------------------------------

1. எளியவர்களைத் தேடிச்செல்ல விண்ணப்பித்த திருத்தந்தை

மார்ச்,18,2016. விவிலியம், அருளடையாளங்கள் மற்றும் செபம் ஆகியவற்றின் சக்திக்கு முன், இறைவனுக்கும், மனிதருக்கும் எதிரியான சாத்தான், ஒன்றுமில்லாமல் போகிறான் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, வத்திக்கானின் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் உரையாற்றினார்.
திருஅவை உறுப்பினர்களை புது வழியில் உருவாக்கும் Neocatechumenal Way என்ற அமைப்பைச் சேர்ந்த 7000த்திற்கும் அதிகமானோரை இவ்வெள்ளியன்று சந்தித்தத் திருத்தந்தை, விவிலியத்தில் காணப்படும் ஒற்றுமை, மாட்சிமை, உலகம் என்ற மூன்று வார்த்தைகளை மையப்படுத்தி, தன் உரையை வழங்கினார்.
மனிதர்களைப் பிரிப்பதில் முழு மூச்சுடன் செயலாற்றும் சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிப்பது Neocatechumenal அமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று திருத்தந்தை கூறினார்.
திருமுழுக்கு பெற்ற அனைவரும் அன்னையாம் திருஅவையின் குழந்தைகள் என்பதால், நாம் அனைவரும் ஒரே சாயல் கொண்டவர்கள் என்றும், நமக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை என்றும் திருத்தந்தை, தன் உரையில் வலியுறுத்தினார்.
இயேசு தன் சிலுவை வழியே மாட்சிமை பெறுவதைப் பற்றி, யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதை (யோவான் 17,5), அரங்கத்தில் கூடியிருந்தோருக்கு நினைவுறுத்தியத் திருத்தந்தை, இரக்கம் கொள்ளுதல், துன்பத்தில் பங்கேற்றல் என்ற பண்புகள் வழியாகத்தான் அன்னையாம் திருஅவை மாட்சிமை பெறமுடியும் என்று கூறினார்.
உலகின் மீது பெருமளவு அன்பு கொண்டுள்ள இறைவன், (யோவான் 3:16) அந்த உலகில், உயர்ந்தவற்றையும், பெரியனவற்றையும் நாடாமல், எளியவற்றை நாடி வருகிறார் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, Neocatechumenal Way அமைப்பைச் சார்ந்தவர்களும், இவ்வுலகில் எளியவர்களைத் தேடிச்செல்ல விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. Instagram செயலியில் தன் பகிர்வுகளைத் துவங்கும் திருத்தந்தை

மார்ச்,18,2016. படங்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் Instagram என்ற வலைத்தள செயலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று செயலாற்றத் துவங்குகிறார் என்று, வத்திக்கான் ஊடகத் துறையின் தலைவர், அருள்பணி, தாரியோ எதொவார்தோ விகனோ (Dario Edoardo Viganò) அவர்கள் கூறினார்.
இன்றைய உலகில் படங்கள் சக்திவாய்ந்த தொடர்புகளை உருவாக்குகின்றன என்பதை நன்கு அறிந்துள்ளத் திருத்தந்தை, 'Franciscus' என்ற பெயரில் Instagram செயலியில் தன் பகிர்வுகளைத் துவங்குகிறார் என்று, அருள்பணி விகனோ அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தன் சொற்களால் மட்டுமல்ல, அதைவிடக் கூடுதலாக தன் செயல்கள் வழியே, மக்கள் மனங்களில் ஆழமானத் தாக்கங்களை உருவாக்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் Instagram வழியே தன் செயல்பாடுகளின் படங்களை உலகினரோடு பகிர்ந்துகொள்வது, பொருத்தமானதாக உள்ளது என்று, வத்திக்கான் ஊடகத் துறையின் தலைவர், அருள்பணி விகனோ அவர்கள் எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, "தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்துவோரின் குற்றங்கள் எவ்வளவு பெரியதோ, அந்த அளவு பெரியதாக, திருஅவை அவர்கள் மீது காட்டும் அன்பும் இருக்கவேண்டும்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை, தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஏமனில் கடத்தப்பட்ட இந்திய அருள்பணியாளர் நிலை என்ன?

மார்ச்,18,2016. ஏமனின் ஏடன் நகரில் அன்னை தெராசாவின் பிறரன்பு சபையைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வேளையில் கடத்திச் செல்லப்பட்ட இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் குறித்து, இரண்டு வாரங்கள் கடந்தும் எவ்வித செய்தியும் இல்லை என தலத்திருஅவை தன் கவலையை வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 4ம் தேதி, ஏமனின் ஏடன் நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு பணியாற்றி வந்த 4 அருள் சகோதரிகளையும் 12 உடனுழைப்பாளர்களையும் கொன்றபின், அங்கிருந்த இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களைக் கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளர், உயிருடன் இருக்கின்றாரா அல்லது எங்கிருக்கிறார் என்பது குறித்த எவ்வித செய்தியும் இதுவரை கிட்டவில்லை என, கவலையை வெளியிட்டுள்ளார், தெற்கு அரேபியாவிற்கான அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Paul Hinder.
இதற்கிடையே, வன்முறைகளை பெருமளவில் சந்தித்து வரும் ஏமன் நாட்டில், கடந்த திங்களன்று இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலால் 107 பேர் இறந்துள்ளனர். சவுதியிலிருந்து விமானத் தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
2015 மார்ச் மாதம் முதல் இடம்பெற்றுவரும் மோதல்களால், கடந்த ஓராண்டில், ஏமன் நாட்டில், குறைந்தது 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

4. அயர்லாந்து மக்களுக்கு புனித பேட்ரிக் திருவிழாச் செய்தி

மார்ச்,18,2016. அயர்லாந்தில் உள்ள ஒரு சிலர், வன்முறைகளைத் தூண்டிவந்தாலும், அயர்லாந்து மக்கள், பாலங்களைக் கட்டுவதிலும், அமைதியை வளர்ப்பதிலும் அக்கறையுள்ளவர்கள் என்று அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர், ஈமோன் மார்ட்டின் (Eamon Martin) அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
மார்ச் 17, இவ்வியாழனன்று, அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக் திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் மார்ட்டின் அவர்கள், இவ்வாறு தன் செய்தியில் கூறியுள்ளார்.
புனித பேட்ரிக் வாழ்க்கையால் தூண்டப்பட்ட அயர்லாந்து மக்கள் அனைவரும், இரக்கத்தை தங்கள் வாழ்வில் மையமாகக் கொண்டிருக்கவேண்டும் என்று, பேராயர் மார்ட்டின் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
வறுமை, வீடற்ற நிலை போன்ற பிரச்சனைகளால் அயர்லாந்தில் குடும்ப வாழ்வு சிதைந்து வருகிறது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டும் பேராயரின் செய்தி, புனித பேட்ரிக் பரிந்துரையால் மக்கள் நம்பிக்கையுடனும், இரக்கத்துடனும் வாழ அழைப்பு விடுக்கிறது.
அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி, ஓர் அடிமையாக வாழ்ந்த புனித பேட்ரிக், இன்றைய உலகில், ஆவணங்கள் ஏதுமின்றி அலைக்கழிக்கப்படும் ஆயிரமாயிரம் புலம் பெயர்ந்தோருக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறார் என்பதையும் பேராயர் மார்ட்டின் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இலங்கை சிறுபான்மையினருக்கு சம உரிமைகள் வேண்டி, கிறிஸ்தவ அமைப்பு

மார்ச்,18,2016. இலங்கை அரசியலைப்பில் மாற்றங்களைக் கொணர்வதற்கென உருவாக்கப்பட்ட 20 பேர் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அவை, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வதற்கு, தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் விவாதங்களில், முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்படும் என்றார் அந்நாட்டு அருள்பணி சரத் இடமல்கோடா.
இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக புகார்கள் உள்ள நிலையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும் உழைக்கவேண்டியது திருஅவையின் கடமையாகிறது என்றார் CSM என்ற கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி இடமல்கோடா.
ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவங்களை மதித்தல், அதிகாரப் பகிர்வு, தெற்கையும் வடக்கையும் இணைத்தல், மத சரிநிகர் தன்மை, இலவசக் கல்வி மற்றும் நலவாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை, இலங்கையின் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
1977ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இலங்கையின் புதிய அரசியலமைப்பு, ஏற்கனவே 19 முறைகள்  திருத்தப்பட்டுள்ளபோதிலும், தற்போதைய விவாதங்களும் மாற்றப் பரிந்துரைகளும், உள்நாட்டுப் போருக்குப் பின் உருவாகியுள்ள நிலைகளை கவனத்தில் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. முதுபெரும் தந்தை பர்த்தலோமேயுவின் தவக்காலச் செய்தி

மார்ச்,18,2016. போர்ச்சூழலை விட்டு தப்பித்து ஓடும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்வது, இத்தவக்காலத்தில் நம்மை வந்தடைந்துள்ள அழைப்பு என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களின் தவக்காலச் செய்தி கூறுகிறது.
ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றும் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்தவர்கள், மார்ச் 20, வருகிற ஞாயிறன்று தவக்காலத்தைத் துவக்கி, மேமாதம் முதல் தேதி ஞாயிறன்று, உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடவுள்ளனர்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையில் இஞ்ஞாயிறு துவங்கும் தவக்காலத்திற்காக செய்தி வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், இன்றைய உலகில் புலம்பெயர்ந்தோர் எழுப்பும் வேதனைக் குரலே நமக்கு வழங்கப்பட்டுள்ள தவக்கால அழைப்பு என்று கூறியுள்ளார்.
கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்கள் வெளியிட்டுள்ள இச்செய்தி, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த அனைத்து ஆலயங்களிலும், மார்ச் 20, இஞ்ஞாயிறன்று வாசிக்கப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. இந்தியாவில் சூரத் இரயில் நிலையம் மிகவும் சுத்தமானது

மார்ச்,18,2016. இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான இரயில் நிலையம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் இரயில் நிலையம் என இந்திய இரயில் மற்றும் சுற்றுலாத் துறைகளின் இணைந்த அமைப்போன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்திய இரயில் உணவுத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்த IRCTC என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவ்வாண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பல்வேறு ரயில் நிலையங்களிலும் பயணிகளிடமும் கருத்துக் கணிப்பை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையிலேயே இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1.34 இலட்சம் பயணிகளிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டபோது, தூய்மை தொடர்பாக 40 அம்சங்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 407 இரயில் நிலையங்கள், வருமான அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதாவது ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் 75 இரயில் நிலையங்கள் ஏ-1 என்ற பிரிவின் கீழும் ரூ.6 கோடி முதல் ரூ.50 கோடி வரை வருமானம் ஈட்டும் 332 இரயில் நிலையங்கள் ஏ பிரிவின் கீழும் பட்டியலிடப்பட்டன.
இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏ-1 பிரிவில் இந்தியாவிலேயே மிகவும் சுத்தமானதாக, குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் இரயில் நிலையமும், 2-வது இடத்தில் இராஜ்கோட் ரயில் நிலையமும் தேர்வாகியுள்ளன. சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிலாஸ்பூர் இரயில் நிலையம் மூன்றாவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
75 ரயில் நிலையங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவில், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட இரயில் நிலையம், 65-வது இடத்தில், அதாவது மிகவும் அசுத்தமானது என்ற இடத்தில் இருக்கிறது.
ஏ - பிரிவில், பஞ்சாப் மாநிலம் பீஸ் இரயில் நிலையம் சுத்தமானது என்று, முதலிடத்தை பிடித்துள்ளது. 5-வது இடத்தில் தமிழகத்தின் கும்பகோணம் இரயில் நிலையம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...