Thursday 17 March 2016

செய்திகள் - 17.03.16

செய்திகள் - 17.03.16
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: இளையோரின் பார்வை, வறியோர்மீது திரும்பவேண்டும்

2. திருத்தந்தை: கிறிஸ்தவ நம்பிக்கை, பணிவான, உறுதியான ஒரு புண்ணியம்

3. போர்த்துகல் அரசுத் தலைவருடன் திருத்தந்தையின் சந்திப்பு

4. இரக்கத்தை முதன்மைப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் - முன்னாள் திருத்தந்தை

5. யூபிலி கண்காட்சியைத் திறந்து வைத்த கர்தினால் பரோலின்

6. திருஅவையில் யூபிலிகள் உரோம் நகரில் கண்காட்சி

7. குருத்தோலை ஞாயிறன்று திருத்தந்தை ஆசீர்வதிக்கும் ஒலிவக் கிளைகள்

8. கந்தமால் கிறிஸ்தவர்களை விடுவிக்கவேண்டும் - கர்தினால் கிரேசியஸ்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: இளையோரின் பார்வை, வறியோர்மீது திரும்பவேண்டும்

மார்ச்,17,2016. பல்கலைக் கழக மாணவர்கள் என்ற முறையில், நீங்கள் உங்கள் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, உங்களைச் சுற்றியுள்ள உடனடி சமுதாயம், மற்றும் உலகில் பரந்துபட்ட சமுதாய முன்னேற்றத்தின் நன்மையைக் குறித்தும் சிந்திப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த 3000த்திற்கும் அதிகமான இளையோரிடம் கூறினார்.
Harvard World Model United Nations என்ற ஓர் அமைப்பு, மார்ச் 14, இத்திங்கள் முதல், 18 இவ்வெள்ளி முடிய, உரோம் நகரில் நடத்திவரும் ஒரு பன்னாட்டுக்  கருத்தரங்கில் கலந்துகொள்ளும் இளையோரை, இவ்வியாழன் நண்பகல், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இளையோருக்குக் கிடைத்துள்ள இத்தகைய ஒரு வாய்ப்பு, அவர்களின் பார்வையையும், எண்ணத்தையும் சமுதாயத்தில் நலிந்திருப்போர் மீது திருப்பினால், அதுவே, இத்தகைய அமைப்புக்கள் ஆற்றக்கூடிய சிறந்த பணி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஐ.நா.அவையைப் போல செயலாற்ற, பல்கலைக் கழக மாணவர்களைப் பயிற்றுவிக்கும் இவ்வமைப்பின் பன்னாட்டு கூட்டங்கள் வழியே, ஐ.நா.அவை எவ்விதம் பன்னாட்டு உறவுகளை கட்டமைத்துள்ளது என்பதை மட்டும் பயில்வதில் பொருளில்லை, மாறாக, ஐ.நா.அவை போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், வறியோருக்கும், ஒதுக்கப்பட்டோருக்கும் எவ்விதம் பணியாற்றுகிறது என்பதை அறிந்துகொள்வது இளையோருக்கு பயனளிக்கும் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பன்னாட்டளவில் ஏற்பாடு செய்யப்படும் இத்தகையக் கருத்தரங்குளில் பேசப்படும் பிரச்சனைகள், வெறும் ஏட்டளவு பிரச்சனைகள் அல்ல, மாறாக, அவை ஒவ்வொன்றுக்கும் பின்னே, மனிதர்கள், தங்கள் ஏக்கங்களோடும், கனவுகளோடும் காத்திருக்கின்றனர் என்பதை, இளையோர் உணரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
உலகில் வளர்ந்துவரும் வன்முறைகளின் விளைவாகப் பெருகிவரும் புலம் பெயர்ந்தோரைக் குறித்தும், இவர்களுக்கு திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தின் வழியே இளையோர் கற்றுக்கொள்வதை தான் விரும்புவதாக திருத்தந்தை கூறினார்.
1992ம் ஆண்டு துவக்கப்பட்ட Harvard World Model United Nations அமைப்பு, தன் 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, அதன் உறுப்பினர்கள் 110 நாடுகளில் உள்ளனர் என்றும், இவ்வாண்டு கூட்டத்திற்கு, "எதிர்கால 25" என்பது மையக் கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை: கிறிஸ்தவ நம்பிக்கை, பணிவான, உறுதியான ஒரு புண்ணியம்

மார்ச்,17,2016. கிறிஸ்தவ நம்பிக்கை, பணிவான, உறுதியான ஒரு புண்ணியம் என்றும், வாழ்வின் பல துயரங்களில் நம்மைத் தாங்கி நிற்பது, இந்த நம்பிக்கையே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, தன் மறையுரையில் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், இறைவன் நம்மைக் கைவிடுவதேயில்லை என்ற எண்ணம் ஒன்றே நமக்கு உண்மை மகிழ்வைத் தரும் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபிரகாம், தன் நம்பிக்கையில் தளர்வதற்கு பல சூழல்கள் எழுந்தாலும், இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.
'எதிர் நோக்கிற்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், ஆபிரகாம் எதிர்நோக்கினார்' (உரோமையர் 4:18) என்று திருத்தூதர் பவுல் கூறுவதை தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, மனிதர்மீது  நம்பிக்கை சிதைந்துபோகும்போது, இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கையே நமக்கு மகிழ்வைக் கொணரும் என்று வலியுறுத்தினார்.
ஆபிரகாமில் துவங்கிய எதிர்நோக்கு, இஸ்ரயேல் வரலாற்றில், எலிசபெத்து, மரியா என்று பலர் வழியே மீண்டும், மீண்டும் நமக்குப் புலனாகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
மேலும், "இறைவனின் இரக்கத்திலிருந்து யாரும் ஒதுக்கப்படுவதில்லை; திருஅவையானது, யாரையும் ஒதுக்கி வைக்காமல், ஒவ்வொருவரையும் வரவேற்கும் இல்லமாக விளங்குகிறது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் காணப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. போர்த்துகல் அரசுத் தலைவருடன் திருத்தந்தையின் சந்திப்பு

மார்ச்,17,2016. இவ்வியாழன் காலை, போர்த்துகல் நாட்டின் அரசுத் தலைவர், மார்செலோ ரெபெலோ தெ சூசா (Marcelo Rebelo de Sousa) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
இம்மாதம் 9ம் தேதி போர்த்துகல் நாட்டின் புதிய அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற ரெபெலோ தெ சூசா அவர்கள் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் வத்திக்கானுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பீடத்திற்கும், போர்த்துகல் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அந்நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும், சிறப்பாக, குடும்ப வாழ்வை மையப்படுத்தி, திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
மேலும், மக்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறி, ஐரோப்பிய நாடுகளை அடைந்துள்ள புலம் பெயர்ந்தோர் நிலை குறித்தும் இச்சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
அரசுத் தலைவர், ரெபெலோ தெ சூசா அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட இச்சந்திப்பிற்குப் பின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இரக்கத்தை முதன்மைப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் - முன்னாள் திருத்தந்தை

மார்ச்,17,2016. இறைவனின் இரக்கமே நம்மை அவரிடம் இணைக்கிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மேய்ப்புப்பணியில் முதன்மைப்படுத்தியுள்ளார் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.
இத்தாலியில் வெளியாகும் Avvenire என்ற நாளிதழுக்கு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழங்கிய ஒரு  பேட்டியில், இறைவனின் நீதி என்ற எண்ணம் நம்மை அச்சுறுத்தினாலும், அவரது இரக்கம் நம்மை அவரருகே கொண்டு செல்கிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவாக்கியுள்ளார் என்று கூறினார்.
இயேசுவே உலகமனைத்திற்கும் மீட்பர் என்ற எண்ணத்திற்கும், கத்தோலிக்கத் திருஅவை, ஏனைய மதங்களோடு உரையாடல் மேற்கொள்ளவேண்டிய கடமை உள்ளது என்ற எண்ணத்திற்கும் இடையே நிலவும் இறுக்கத்தைக் குறித்து, முன்னாள் திருத்தந்தை அவர்கள், இப்பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.
இந்த இறுக்கத்தை குறைக்கக்கூடிய ஒரே மருந்து, இறைவனின் இரக்கம் என்பதால், அந்த எண்ணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பணிக்காலத்தில் வலியுறுத்தி வருகிறார் என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய உலகில் மனிதர்கள் அதிகம் காயப்பட்டிருப்பதால், தங்கள் வேதனைகளைக் குறைக்க நீதி என்ற எண்ணத்தை வெகுவாக வலியுறுத்திவருகின்றனர் என்று கூறிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இறைவனின் இரக்கம் ஒன்றே நம் வேதனைகளைக் குறைக்கவல்லது என்பதை இப்பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. யூபிலி கண்காட்சியைத் திறந்து வைத்த கர்தினால் பரோலின்

மார்ச்,17,2016. கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகள், ஆன்மீக நிகழ்வுகள் என்றாலும், அவை, உரோம் நகரின் தனித்துவம் மிக்க பாரம்பரியமாகவும் விளங்குகின்றன என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியேற்ற மூன்றாம் ஆண்டு நிறைவையும் இணைத்து, உரோம் நகரில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு யூபிலி கண்காட்சியைத் திறந்து வைத்த கர்தினால் பரோலின் அவர்கள், தன் துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.
1300ம் ஆண்டு முதல், திருஅவையில் பல்வேறு யூபிலி ஆண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த யூபிலி ஆண்டுகளின் ஓர் அடிப்படை அம்சம், இரக்கம் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
மனிதர்களோடு நடக்க இறைவன் எப்போதும் விழைகிறார் என்ற உண்மையே, ஒவ்வொரு யூபிலியின் வழியாகவும் திருஅவை இவ்வுலகிற்குக் கூறவிழையும் ஒரு முக்கியமான செய்தி என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், பழிக்குப் பழி என்ற உணர்வில் தோய்ந்திருக்கும் இவ்வுலகிற்கு, இரக்கம், மிகத் தேவையான ஓர் உண்மை என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருஅவையில் யூபிலிகள் உரோம் நகரில் கண்காட்சி

மார்ச்,17,2016. நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, திருஅவை வரலாற்றில் இதுவரை இடம்பெற்ற யூபிலி ஆண்டுகளின் நினைவுகள் அடங்கிய ஒரு கண்காட்சி, உரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1300ம் ஆண்டு, திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட முதல் யூபிலியிலிருந்து, தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி முடிய அனைத்து யூபிலிகளையும் நினைவுக்குக் கொணரும் புகைப்படங்கள், திருத்தந்தையர் விடுத்த ஆவணங்களின் பிரதிகள், மற்றும் யூபிலிகளையொட்டி வெளியிடப்பட்ட தபால் தலைகள் என்று 500க்கும் மேற்பட்ட பல்வேறு நினைவுப் பொருள்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவையன்றி, கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் கணணிகள் வழியே, மேலும் 1,300க்கும் அதிகமான டிஜிட்டல் உருவங்களைக் காணும் வசதியும் செய்து வைக்கப்பட்டுள்ளது.
1300ம் ஆண்டு 8ம் போனிபாஸ் அவர்கள் முதல் யூபிலியை அறிவித்த ஆவணத்தில் காணப்படும் "Antiquorum Habet" என்ற முதல் இரு வார்த்தைகள், இந்த வரலாற்றுக் கண்காட்சியின் பெயராக அமைந்துள்ளன.
உரோம் நகரில் உள்ள Dogana Vecchia சாலையில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சியை, நுழைவு கட்டணம் ஏதுமின்றி காண முடியும் என்றும், இக்கண்காட்சி மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கும் என்றும் இதன் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. குருத்தோலை ஞாயிறன்று திருத்தந்தை ஆசீர்வதிக்கும் ஒலிவக் கிளைகள்

மார்ச்,17,2016. புனித பூமி, மற்றும் இத்தாலியின் அசிசி நகர், மோந்தேகஸ்ஸீனோ (Montecassino) ஆகிய இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒலிவக் கிளைகளை, மார்ச் 20, குருத்தோலை ஞாயிறு வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசீர்வதித்து, போலந்து நாட்டு இளையோர் கையில் ஒப்படைப்பார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜூலை மாதம், போலந்து நாட்டின் கிரகோவ் நகரில் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறுவதையொட்டி, அந்நாட்டின் இளையோர் மேற்கொண்ட ஒரு முயற்சியின் பயனாக, இந்த அடையாளச் சடங்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தையின் தலைமையில் நடைபெறுகிறது.
நடைபெறும் இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் மன்னிப்பு கருத்துக்கள், இம்முயற்சியின் அடிப்படையாக அமைந்தன என்று போலந்து நாட்டு இளையோர் கூறியுள்ளனர்.
அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு ஆகிய அம்சங்களை சுட்டிக் காட்டுவது, ஒலிவக் கிளைகள் என்பதால், புனித பூமியிலிருந்தும், இத்தாலியின் இருவேறு இடங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட ஒலிவக் கிளைகள் வத்திக்கானுக்குக் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயேசு, பாடுகளை அனுபவித்த ஒலிவமலைத் தோட்டத்திலிருந்தும், அமைதியின் தூதனாகக் கருதப்படும் புனித பிரான்சிஸ் அவர்களின் ஊரான அசிசியிலிருந்தும், போலந்து நாட்டின் வீரர்கள் மிக அதிக அளவில் புதைக்கப்பட்டிருக்கும் கல்லறை அமைந்துள்ள மோந்தேகஸ்ஸீனோவிலிருந்தும் ஒலிவக் கிளைகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று, இம்முயற்சிகளை மேற்கொண்டுவரும் இளையோர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. கந்தமால் கிறிஸ்தவர்களை விடுவிக்கவேண்டும் - கர்தினால் கிரேசியஸ்

மார்ச்,17,2016. 2008ம் ஆண்டு, இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில், சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற இந்து மதத் தலைவர் கொலையுண்டதன் தொடர்பாக, கைது செய்யப்பட்ட ஏழு கிறிஸ்தவர்களை விடுவிக்கவேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள ஒரு விண்ணப்பத்தில், இந்தியக் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கையொப்பமிட்டுள்ளார்.
2008ம் ஆண்டு நிகழ்ந்த இந்தக் கொலையுடன் ஏழு கிறிஸ்தவர்கள்  தொடர்புபடுத்தப்பட்டு, 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். தகுந்த ஆதாரங்கள் ஏதுமின்றி கைது செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவாமி சரஸ்வதி அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, கந்தமால் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காரணமான இந்து அடிப்படைவாதிகள் மீது சட்டப்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காதபோது, ஆப்பாவியான கிறிஸ்தவர்கள், தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தவறு என்று, மனிதாபிமான அமைப்புக்கள் விடுத்துள்ள ஒரு விண்ணப்பத்தில், கர்தினால் கிரேசியஸ் அவர்களும் கையெழுத்திட்டுள்ளார் என்று, UCAN செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் இறந்த கிறிஸ்தவர்களின் நினைவாக, ஆகஸ்ட் 30ம் தேதி, 'மறைசாட்சிகளின் நாள்' கடைபிடிக்கப்படும் என்று, ஒரிஸ்ஸா ஆயர் பேரவை தீர்மானித்திருப்பதாக, இப்பேரவையின் தலைவரும், கட்டக் புபனேஸ்வர்  பேராயருமான ஜான் பார்வா அவர்கள் Fides செய்தியிடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN / Fides / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...