Thursday, 3 April 2025

இறைமக்கள் ஒன்றிணைந்து பயணிப்பதே திருஅவை!

 

இறைமக்கள் ஒன்றிணைந்து பயணிப்பதே திருஅவை!


கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது அன்றாட வாழ்க்கையிலும், அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் காணப்படுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது ஒருபோதும் ஒருசிலருக்கு மட்டுமே உரியது அல்ல, ஆனால் அது எப்போதும் எல்லோருக்கும் உரியது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 31 முதல் ஏப்ரல் 3 வரை வத்திக்கானில் கூடியுள்ள இத்தாலியத் தலத்திருஅவைகளின் இரண்டாவது ஒன்றிணைந்த பயண அவையின் பங்கேற்பாளர்களுக்கு ஏப்ரல் 1, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை.

மகிழ்ச்சி என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ள இந்த அவையில், கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது வெறும் மகிழ்ச்சி அல்லது பிரச்சனைகளைத் தவிர்ப்பது மட்டுமல்ல என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

கடவுள் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதை அறிந்து, அவர் மீது நம்பிக்கை கொள்வதன் வழியாக உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமடைந்தபோது இந்த மகிழ்ச்சியை தனிப்பட்ட முறையில் அனுபவித்ததாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது அன்றாட வாழ்க்கையிலும், அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் காணப்படுகிறது என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

இத்தாலியத் தலத்திருஅவைகளின் எதிர்காலத்திற்கான முக்கியமான திட்டங்களில் வாக்களிக்க பங்கேற்பாளர்கள் தயாராகிவரும் இவ்வேளையில், அவர்கள் தூய ஆவியால் வழிநடத்தப்படவும், திருஅவை என்பது பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் மட்டுமல்ல, அனைத்து விசுவாசிகளாலும் ஆனது என்பதை நினைவில் கொள்ளவும் அவர்களை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

இத்தாலியத் தலத்திருஅவைகளின் நான்கு ஆண்டுகாலப் பணியை மறுவரையறை செய்வதற்கான ஒன்றிணைந்த பயணத்தின் இறுதிக் கட்ட அமர்வு என்றும், இந்த நான்கு ஆண்டுகளில், ஆயர்களும், பிரதிநிதிகளும் கருத்துக்களைக் கேட்டு, திட்டங்களைப் பற்றி விவாதித்தனர் என்றும் இதுகுறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment