ஏப்ரல் 5. உலக மனச்சான்று தினம்
தன் மனசாட்சியைப் பார்க்கினும் கடுமையான சிறைக்காவலன் எவனும் இல்லை என்று கூறுவார்கள். ஆம். நாம் தவறுச் செய்யும்போது அவ்வளவு ஆற்றலுடன், உரிமையுடன், அதிகாரத்துடன் குற்றம்சாட்டுவது நம் மனச்சான்றுதான்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இவ்வார இறுதியில், அதாவது ஏப்ரல் 5ஆம் தேதி உலக மனசான்று தினத்தைச் சிறப்பிக்கின்றோம். மனித மனச்சான்றின் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் உலகளாவிய விழிப்புணர்வு தினமாகும் இது.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்றார் வள்ளுவப்பெருந்தகை..
மனசாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும் என்பதாக நம்மை எச்சரிக்கிறார்.
மனச்சான்று அல்லது மனசாட்சி என்றால் என்ன என்பது குறித்துக் கொஞ்சம் சிந்திப்போமா? மனசாட்சி அல்லது மனச்சான்று என்பது தன்னுடைய செயல்கள் சரியானதா அல்லது தவறா என்பதை அடையாளம் காணும் மனதின் குரல் ஆகும். இதுதான் தெய்வத்தின் குரல். அதனால்தான் மனித ஆசைகளுக்கும் இறைவனின் வழிமறித்தலுக்கும் இடையே முரண்பாடுகளைத் தொடர்ந்து சந்தித்து வருகிறான் மனிதன். ரூசோ அழகாகக் கூறுவார், ‘மனசாட்சி ஆன்மாவின் குரல், உணர்ச்சிகள் உடலின் குரல்கள் இவைகளுக்குள் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதில் வியப்பில்லை’ என்று. ஒருவனுக்குத் தன்னுடைய இதயத்தைக் காட்டிலும் இருளடைந்த சிறை வேறு எதுவும் இல்லை, ஒருவனுக்குத் தன் மனசாட்சியைப் பார்க்கினும் கடுமையான சிறைக்காவலன் எவனும் இல்லை என்று கூறுவார்கள். ஆம். நாம் தவறுச் செய்யும்போது அவ்வளவு ஆற்றலுடன், உரிமையுடன், அதிகாரத்துடன் குற்றம்சாட்டுவது நம் மனச்சான்றுதான். ஆனால், இங்கு ஒன்றை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மனச்சான்று நீதிபதியைப் போல் நம்மைத் தண்டிப்பதற்கு முன்னால், நமக்கு நண்பனைப் போல் எச்சரிக்கை செய்கின்றது என்பது நூறு விழுக்காடு உண்மை. அதனால்தான் நம் இதயத்திலுள்ள தெய்வீகச் சுடரான மனச்சான்றினை அணைந்துவிடாமல் காத்துக்கொள்ள நாம் அழைப்புப் பெறுகிறோம். ஏனெனில், மனிதன் மனச்சான்றைப் பெற்றிருக்கிறான் என்பதை விட, அது அவனைப் பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மையிலும் உண்மை. உண்மையான மகிழ்ச்சியின் அடிப்படை மனச்சான்றில் உள்ளது என்பது இன்னுமொரு உண்மை. நாம் ஒரு செயலைச் செய்யத் துவங்கும்போது, நமக்குள் கோழைத்தனம் இருந்தால், நம் உள்மனக்குரல் இது ஆபத்தில்லையா என்ற கேள்வியைக் கேட்கும், நம் தர்க்கவாதமோ, இதில் பயனுண்டா என சிந்திக்கும். சுயநலமோ கொஞ்சம் மேலே போய், இதில் புகழுண்டோ என சிந்திக்கும். ஆனால், மனச்சான்று மட்டுதான், இது நியாயமா என்று நம்மையே நீதிபதியாக்கும். அதனால்தான் சொல்கிறார்கள், நம் மனச்சான்று நம்மை ஒருபோதும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. "நீ நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால் உன் மனச்சான்று உனக்கு கை தட்ட வேண்டும்" என்று நம் முன்னோர் சொல்லிச் சென்றது இதைத்தான்.
கத்தோலிக்க மறைக்கல்வி, மனச்சான்றை 'கடவுளின் குரல்' என அழைக்கின்றது. இந்தக் கடவுளின் குரல்தான் நம் ஆழ்மனம். இந்தக் குரல்தான் ஒருவர் மற்றவரை இணைக்கின்றது. புனித யோவானின் முதல் திருமடலின் வார்த்தைகளைப் பார்த்தால் இது நமக்குப் புரியும். “அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம். அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம்” (1 யோவான் 3:21-22) என்கிறார் புனித யோவான்.
எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், மனச்சான்றை மறைக்கவோ, திரையிட்டு மூடவோ இயலாது. இதைப்பற்றி தெளிவாக புரிந்துகோள்ள, இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கலாம். இயேசு மண்ணில் வாழ்ந்த காலத்தில் குற்றவாளி என விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவின் முன்பு நிறுத்தியபோது, உங்களில் குற்றம் இல்லாதவர் முதல் கல் எறியட்டும் என கூறினார். இயேசுவின் வார்த்தையை கேட்டு அங்கிருந்த பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அவ்விடத்தை விட்டுச் சென்றார்கள் என விவிலியத்தில் நாம் பார்க்கலாம். அவர்கள் ஏன் செல்லவேண்டும்? ஆம். இங்குதான் நாம் பார்க்கின்றோம், அவர்களும் தங்களின் மனக்குரலுக்குக் கட்டுப்பட்டார்கள் என்பதை. இது நமக்கு இன்னுமொரு பாடத்தையும் தருகிறது. நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நமது வாழ்வில் அடுத்தவர்களைத் குற்றவாளிகள் என்று கூறுவதற்கு முன்பாக, நமது செயல்களை நாம் சீர்தூக்கிப் பார்த்து, நம்மை நாம் சரி செய்துகொண்டு, நமது வாழ்வில் நாம் உண்மையான இயேசுவின் சீடர்கள் என்பதை வெளிக்காட்ட, நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
தூணிலும் துரும்பிலும் கடவுள் இருக்கிறார் என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், உண்மையில் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார். அதைத்தான் மனச்சான்று என்று சொல்கிறோம். நல்லது செய்கிறபோது, நம்மையறியாமல் நம்மை நினைத்து பெருமைப்படுகின்றோம். தவறு செய்கிறபோது, அதனை விரும்பிச் செய்தாலும், நமக்குள்ளாக ஏதோ ஒரு நெருடல் ஏற்படுகிறது. அதுதான், உண்மையில் கடவுளின் குரல். அதுதான் உண்மையில் இறைவனின் ஒலி. அந்த ஒலிக்கு செவிமடுத்ததால்தான் அப்பெண்ணை குற்றம் சுமத்தியவர்கள், கல்லெறியாமல் விட்டுச் சென்றனர். அவர்களின் மனச்சான்று அதற்கு இடம்கொடுக்கவில்லை. நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் அடுத்தவரின் குறைகளை சுட்டிக்காட்டி, அவர்களை குற்றவாளிகள் என்று கூறிக்கொண்டே நமது வாழ்க்கையை நகர்த்துவதைவிட, நம்மை நாம், நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொண்டு, ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக அவரை பின்தொடர வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய செயல்பாட்டையே இறைவன் நம்மிடம் விரும்புகிறார்.
அதைப்போல், நாம் வாழக்கூடிய உலகில் மற்றவர்கள் என்ன செல்ல விரும்புகிறார்கள் என்பதை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, நமக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள் அதிகமாக இருப்பதைக் காண்கிறோம். அதுபோலவே நம்மிடம் இருக்கக்கூடிய குறைகளை சரி செய்து கொள்வதை விடுத்து விட்டு, அடுத்தவரின் குறைகளை மிகைப்படுத்தி குற்றம்சாட்டி அவர்கள் தங்கள் வாழ்க்கையை சரிசெய்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்க கூடியவர்களையும் அதிகம் அதிகமாகக் காண்கிறோம். ஒரு கேள்வி நமக்கு இயல்பாகவேத் தோன்றுகிறது. இவர்கள் மற்றவர்கள் சரியாகச் செயல்படவேண்டும் என எண்ணம் கொள்ளும் அதேவேளை, தாங்கள் நன்றாக வாழவேண்டும் என விரும்புவதில்லையோ என்று.
நாம் தெளிவாகப் புரியும் விதத்தில் இன்னொன்றைச் சொல்ல விரும்புகிறோம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கண்காணிப்பு காமிராதான் இந்த மனச்சான்று அல்லது மனக்குரல். இன்றைய உலகில் எல்லா இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேர்வறைகளிலும், தேர்தல் நேரங்களிலும் கண்காணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் தற்காலங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இந்நிலையில், ’கண்காணிப்பு’ என்பது நம் சொந்த வாழ்விலும், பொதுவாழ்விலும் பெருத்த முக்கியத்துவம் பெறுகிறது. நமது தவறு செய்யும் ஆர்வத்திற்கு ’சுய கண்காணிப்பு’ தொடக்கத்திலேயே தடை போடுகிறது. தவறு செய்வது மனித இயல்பு. அதை திருத்திக் கொள்வது நம் கடமை. இந்நிலையில், ’கண்காணிப்பு’ என்பதன் நோக்கம் குறைகளைக் காண்பதற்காக அல்ல. காணும் குறைகளைக் களையவும், நிலைமையை மேம்படுத்துவதற்காக மட்டுமே ஆகும். பல சமயங்களில் நம் மனச்சான்றே, நமக்கு நல்ல கண்காணிப்பாளாராக செயல்பட்டு நேர்பட்ட வாழ்வை வாழ உதவுகிறது. ஆனால், மனிதனுக்கு பேராசைகள் பெருகும்போது, அவனின் மனச்சான்று காணாமல் போகிறது. அங்குதான் நமக்கு ’கண்காணிப்பின்’ தேவை தொடங்குகிறது. முதலில் நண்பனாக இருந்து எச்சரிப்பதும், பின்னர் நீதிபதியாக இருந்து தண்டிப்பதும் மனச்சான்றுதான், அந்த கண்காணிப்பு காமிராதான். அந்த காமிராவை பழுது வராமல் பாதுகாப்போம்.
இப்போது உங்களுக்கு இந்த பன்னாட்டு மனச்சான்று தினத்தின் துவக்கம் குறித்த ஆவல் இருக்கலாம். உலக அமைதி மற்றும் அன்பின் கூட்டமைப்பு பிப்ரவரி 5, 2019 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் பன்னாட்டு மனச்சான்று தினத்தை அறிவிக்க உலகளாவிய முன்னெடுப்பைத் தொடங்கியது. இது 185 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு, 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் ஐ.நா. பொதுச்சபை பஹ்ரைன் அரசு சமர்ப்பித்த 'அன்பு மற்றும் மனசாட்சியுடன் அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல்" என்ற வரைவு தீர்மானத்தை ஜூலை 25, 2019 அன்று ஏற்றுக்கொண்டது. பின்னர் ஏப்ரல் 5, 2020 முதல் பன்னாட்டு மனச்சான்று தினம் கொண்டாட வலியுறுத்தியது. அன்றிலிருந்து இந்த தினம் கொண்டாடப்படுகின்றதேயொழிய, மனச்சான்றின் குரல் என்பது மனிதன் உருவான நாள் முதலே இருந்து வருகிறது. தடுக்கப்பட்டக் கனியை உண்ட மனிதன், தவறை உணர்ந்ததால்தான், அவன் மனக்குரல் அதனை சுட்டிக்காட்டியதால்தான், மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான். இன்று நாம் ஒளிந்து கொள்ளவில்லை, துணிந்தே பல தவறுகளைச் செய்து வருகிறோம். நம் உள்ளிருக்கும் காமிராக்கள்தான் ஒளிந்திருந்து நம்மைக் காண்காணித்து எச்சரிக்கின்றன. அக்குரலுக்குச் செவிமடுக்கிறோமா? சிந்திப்போம். நாம் நம்மை சரிசெய்ய வேண்டுமானால், மனக்குரலுக்கு செவிமடுத்தேயாக வேண்டும்.
No comments:
Post a Comment