திருஅவையின் நடைமுறைகளில் எழும் 5 சந்தேகங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருஅவையின் நடைமுறை மற்றும் அணுகுமுறைகளில் எழுப்பப்படும் ஐந்து சந்தேகங்களை ஐந்து கர்தினால்கள் இணைந்து திருத்தந்தைக்கு அனுப்பியதைத் தொடர்ந்து அவைகளுக்கு விளக்கம் கொடுத்து தன் பதிலை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவெளிப்பாடுகளுக்கு மறு பொருள்விளக்கமளித்தல், ஒரே பாலின திருமணத்திற்கு ஆசீர்வாதம், திருஅவையின் கட்டமைப்புப் பரிமாணமாக, ஒன்றிணைந்து பயணித்தலை நோக்குதல், பெண்களுக்கு குருத்துவ திருநிலைப்பாடு, அருளடையாள பாவமன்னிப்புக்கு முன் நிபந்தனையாக மனம்வருந்துதலை வைத்தல் என்பன போன்றவைகளையொட்டியக் கேள்விகளை முனவைத்துள்ளனர் கர்தினால்கள்.
கர்தினால்கள் Juan Sandoval Íñiguez, Robert Sarah, மற்றும் Joseph Zen Ze-kiun ஆகியோருடன் இணைந்து கர்தினால்கள் Walter Brandmüller மற்றும் Raymond Leo Burke ஆகியோர் கடந்த ஜூலை மாதம் முன்வைத்த ஐந்து சந்தேகங்களுக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவெளிப்பாடுகள் என்பவை இன்றைய கலாச்சார மற்றும் மானுடவியல் மாற்றங்களுக்கு இயைந்தவகையில் புது விளக்கமளிக்கப்படவேண்டும் என்பதில், மக்கள் நன்முறையில் புரிந்துகொள்ளும்படியாக மறுவிளக்கமளிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதே, ஆனால் திருஅவைப்படிப்பினை தொகுப்புகள் என்பவை ஒருநாளும் வெளிப்படுத்தப்பட்ட இறைவார்த்தைக்கு மேலானவை அல்ல என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஒரே பாலினத் திருமணம் குறித்தக் கேள்விக்கு பதிலளித்துள்ள திருத்தந்தை, திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயானதாகவும், இனப்பெருக்கத்திற்கு தன்னை திறந்ததாகவும் இருக்கிறது எனக் கூறியுள்ளதுடன், இதற்கு முரணாகச் செல்பவர்கள், பாவிகள் என நோக்கப்படாமல் மேய்ப்புப்பணி பிறரன்புடன் நடத்தப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
திருஅவையின் கட்டமைப்புப் பரிமாணமாக ஒன்றிணைந்து பயணித்தல் என்பது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர் மாமன்றம் என்பது, ஆயர் அவையைக் குறித்து நிற்பதல்ல, மாறாக அது திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் ஒன்று என்பதை வலியுறுத்தியதுடன், அது திருஅவையின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பெண்களுக்கு குருத்துவ அருள்பொழிவு வழங்குவது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள திருத்தந்தை, விசுவாசிகளின் பொது குருத்துவம், மற்றும் சடங்குமுறைகளை நிறைவேற்றும் குருத்துவம் என்பவைகள் குறித்து விளக்கி, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் கருத்துக்களையும் மேற்கோள்காட்டி, திருஅவை அங்கத்தினர்கள் அனைவரும் தங்களுக்குரிய பங்களிப்பு மூலம் ஒருவரையொருவர் ஒளிரச் செய்கிறார்கள் என்பதை எடுத்துரைத்துள்ளார்.
பாவத்திற்காக மனம் வருந்துதல் என்பது அருளடையாள மன்னிப்பின் முன் நிபந்தனையாக இருக்கக்கூடாது, ஏனெனில், மன்னிப்புப் பெறுவது என்பது மனித உரிமையாகும் என்ற கருத்திற்கு பதிலுரை வழங்கிய திருத்தந்தை, அருளடையாள மன்னிப்பிற்கு, செய்த பாவம் குறித்து மனம் வருந்துதல் இன்றியமையாதது, ஏனெனில், அது மீண்டும் பாவம் செய்யாதிருப்பதற்கான தீர்மானத்தை உள்ளடக்கியது எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு, தன்னிடம் ஜூலை மாதம் கர்தினால்களால் முன்வைக்கப்பட்ட ஐந்து சந்தேகங்களுக்கான பதிலை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
No comments:
Post a Comment