வத்திக்கானில், கோடை முகாம் குழந்தைகளைச் சந்தித்தார் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வத்திக்கான் பணியாளர்களின் குழந்தைகளுக்கான 2023-ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற 5 முதல் 13 வயது வரையிலான ஏறத்தாழ 250 குழந்தைகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கும் அவர்களை வழிநடத்துவோருக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினார்.
ஜூலை 18, இச்செவ்வாயன்று, வத்திகானின் புனித ஆறாம் பவுலரங்கில் இக்குழந்தைகளைச் சந்தித்தபோது ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழந்தைகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
எங்களின் கதாநாயர்களாக விளங்கும் பெற்றோருக்கு நாங்கள் எம்மாதிரியான செய்தியை வழங்க வேண்டும் என்று Edoardo என்ற குழந்தை எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, அவர்தம் பெற்றோரின் வளர்ப்புக்காகவும் அர்பணிப்புக்காகவும் அடிக்கடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
உங்களின் கதாநாயகர்கள் யார் என்று Elena என்று இளம்பெண் கேட்ட கேள்விக்கு, தனது தாத்தா பாட்டிதான் என்று அப்பெண்ணுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானம் நிறைந்த அவர்களுடன் உரையாடுவது அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் எப்படி கதாநாயகர்களாக விளங்க முடியும் என்று Raphael என்ற இளைஞன் எழுப்பிய கேள்விக்கு, இந்த விடயத்தில் நாம் நேர்மறையான கண்ணோட்டத்துடன் செயல்படவேண்டும் என்றும், அதேவேளையில், இதில் நாம் தவறாகக் கையாளப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை.
இறுதியாக, இயேசு படிப்பித்த செபத்தை அவர்களுடன் இணைந்து செபித்தபின் அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கிய திருத்தந்தை, ஒருவர் ஒருவருக்காக செபிப்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு, அதைத் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் நண்பர்களிடம் எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்த இளம் குழந்தைகளில் சிலர் வரும் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 6 வரை போர்த்துக்கல்லின் லிஸ்பனில் நிகழவிருக்கும் உலக இளையோர் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
No comments:
Post a Comment