Friday, 21 July 2023

கேரள முன்னாள் முதலமைச்சர் மறைவிற்கு கர்தினால் இரங்கல்

 

கேரள முன்னாள் முதலமைச்சர் மறைவிற்கு கர்தினால் இரங்கல்





தனது ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நெருக்கடிக்கும் தீர்வு காண பாடுபட்டவர் ஓமன் சாண்டி.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஓமன் சாண்டி அவர்களின் மறைவிற்கு அரசியல் மற்றும் மதத்தலைவர்களுடன் இணைந்து இரங்கல் தெரிவித்துள்ளார் சீரோ மலபார் வழிபாட்டு முறை தலைவரான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி

ஜூலை 18, செவ்வாய்க்கிழமை காலை, பெங்களூரு மருத்துவமனையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஓமன் சாண்டி அவர்கள் மரணமடைந்த நிலையில், அவரது இழப்பினால் வருந்தும் குடும்பத்தார்க்கு ஆறுதல் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் கர்தினால் ஆலஞ்சேரி.

80 வயதான ஓமன் சாண்டி அவர்கள் இருமுறை கேரளா மாநிலத்தின் முதலமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புடன் ஆட்சி செலுத்தியவர் என்றும், 50 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை முதலமைச்சராகவும் பணியாற்றி, மாநில மக்களின் இதயங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் ஆலஞ்சேரி.

தனது ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நெருக்கடிக்கும் தீர்வுகாண பாடுபட்டவர் என்றும், தீர்க்க முடியாத பிரச்சனைகளில் அவற்றை கடவுளின் விருப்பத்திற்குக் கையளித்து வாழ்ந்தவர் என்றும் கூறினார் கர்தினால் ஆலஞ்சேரி.

கேரள மக்களை  அதிகமாக நேசித்தவர், மக்களால் அதிகமாக நேசிக்கப்பட்டவர் ஓமன் சாண்டி என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ள கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஆசிரியராகவும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவரிடமும் மரியாதையுடன் நடப்பவராகவும், அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கக் கூடியவராகவும் திகழ்ந்தவர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.டி.முஹம்மது பஷீர் ஆகியோர் உட்பட பலர், ஓமன் சாண்டி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், முன்னாள் முதல்வரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜூலை 18, 19 ஆகிய இரு நாட்களை கேரள அரசு, விடுமுறையாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...