கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
மக்கள் அனைவரும் அமைதி மற்றும், மகிழ்வோடு, பாதுகாப்பாக வாழக்கூடிய ஓர் இடமாக இவ்வுலகை மாற்றுவதற்கு, கிறிஸ்தவர்களும் இந்துக்களும், மற்ற மத மரபினர், மற்றும், நன்மனம்கொண்ட மக்களோடு இணைந்து பணியாற்றுமாறு பல்சமய உரையாடல் திருப்பீட அவை, அக்டோபர் 17, இத்திங்களன்று கேட்டுக்கொண்டுள்ளது.
அக்டோபர் 24, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பல்சமய உரையாடல் திருப்பீட அவை உலகின் அனைத்து இந்தமத நண்பர்களுக்கும் வெளியிட்டுள்ள நல்வாழ்த்துச் செய்தியில், அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய இடமாக இவ்வுலகை அமைப்பதற்கு, இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து பணியாற்றவேண்டிய கூட்டுப்பொறுப்புணர்வு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்களின் மத நம்பிக்கைகள் மற்றும், உறுதிப்பாடுகளில் வேரூன்றியுள்ள அனைவரும், மனிதக் குடும்பம், மற்றும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் நலனைப் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளனர் என்பதையும் அச்செய்தி நினைவுபடுத்தியுள்ளது.
நல்லிணக்க வாழ்வு, கூட்டுப்பொறுப்புணர்வு
மதம், கலாச்சாரம், இனம், மொழி, உயர்வுமனப்பான்மை போன்றவற்றின் அடிப்படையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் பதட்டநிலைகள், வன்முறை மற்றும் போர்கள், உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதியான நல்லிணக்கத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளன, இச்சூழலில் மக்கள் மத்தியில் ஒன்றிணைந்த வாழ்வு மற்றும், கூட்டுப்பொறுப்புணர்வை ஊக்கப்படுத்தவேண்டியதன் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நல்லிணக்க வாழ்வு
நல்லிணக்கத்தோடு வாழ்வதென்பது, பன்முகத்தன்மைகொண்ட மக்கள் மத்தியில், நன்மதிப்பு, அன்பு மற்றும் நம்பிக்கை உணர்வில், நட்போடு வாழும் திறமையைக் கொண்டிருப்பதாகும் எனவும், இது, மனிதர் மத்தியில் மட்டுமன்றி, மக்களுக்கிடையேயும், இயற்கையோடும் நல்லிணக்க உறவோடு வாழும் ஒரு செயல் மற்றும் கலையாகும் எனவும் அத்திருப்பீட அவை தெரிவித்துள்ளது.
இத்தகைய வாழ்வு, உரையாடல் மற்றும் சந்திப்புக் கலாச்சாரத்தின் வழியாக, பொறுமை மற்றும், மனஉறுதியோடு, ஒருவர் ஒருவருக்குச் செவிமடுத்தல் மற்றும் கற்றுக்கொள்வதன் அடிப்படையில் அமைக்கப்படவேண்டும், இவ்வாழ்வை ஊக்குவிப்பது, ஒருவர் ஒருவரையும், இயற்கையையும் பராமரிப்பதில் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமையுணர்வைச் சார்ந்துள்ளது என்று, அச்செய்தி எடுத்துரைக்கின்றது.
குடும்பங்களில், பெற்றோர் மற்றும், மூத்தவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வால், அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு, நல்லிணக்க வாழ்வு, கூட்டுப்பொறுப்புணர்வு ஆகிய சிறந்த பண்புகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும், சமயத் தலைவர்கள், கல்வி நிறுவனங்கள், ஊடகத்துறையினர், அரசுகள், அரசு-சாரா அமைப்புகள் ஆகிய அனைத்தும் இப்பண்புகளைப் பேணி வளர்க்கும் கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்று பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தீபாவளிச் செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தீபாவளிச் செய்தியில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel l Ayuso Guixot அவர்களும், அதன் செயலர் பேரருள்திரு Indunil Janakaratne Kodithuwakku Kankanamalage அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்
No comments:
Post a Comment