Tuesday, 4 October 2022

உலக விலங்குகள் நாள்- அக்டோபர் 4

 


உலக விலங்குகள் நாள்-அக்டோபர் 4

விலங்குகள் மனிதனின் உணவுத்தேவையை மட்டுமன்றி அடிப்படைத் தேவைகளான காற்று நீர் போன்றவை தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்கின்றன.

மெரினா ராஜ் வத்திக்கான்

இறைவனால் பார்த்து பார்த்து படைக்கப்பட்டதாய், இயற்கையின் வரமாய் இருப்பன விலங்குகள். ஐந்தறிவு கொண்ட உயிரினமாய், பல்லுயிர்ப் பெருக்கத்திற்குக் காரணமாய், ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கும் மேலாய் விலங்குகள் செயல்படுகின்றன. வீட்டு விலங்குகளாக மனிதர்களின் தேவைகளுக்கும், காட்டு விலங்குகளாக இயற்கைப் பாதுகாப்பிற்கும் வழிவகைகள் செய்யும் இவ்விலங்குகள் சில நேரங்களில் மனித உறவுகளை மிஞ்சிய பாச உணர்வுடன் செயல்படுகின்றன. இவ்விலங்குகளைப் பாதுகாக்கவும் பரமாரிக்கவும் ஆண்டு தோறும் அக்டோபர் 4ஆம் நாள் உலக விலங்குகள் நாளானது கொண்டாடப்படுகின்றது. மனிதனின் வாழ்க்கை சூழலுக்கு மிக முக்கிய காரணமாக திகழும் விலங்குகளின் மதிப்பை உலக மக்களுக்கு உணர்த்தவும், விலங்குகளின் நலம் மற்றும் தரத்தை அதிகப்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.

புனித பிரான்சிஸ் அசிசியார்

இயற்கைப் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் அசிசியார் இறந்த நாளில் இந்த உலக விலங்குகள் நாள் கொண்டாடப்படுவது, இயற்கை மற்றும் விலங்குகள் மீது அவர் கொண்ட அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அமைகின்றது. இந்நாள் உருவாக மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஹென்ரிச் ஜெம்மர்மேன் என்னும் ஸ்பெயின் பத்திரிக்கையாளர் சமூக நல ஆர்வலர். இவர் விலங்குகள் மீது கொண்டிருந்த  அளவற்ற பாசமும் பற்றுமே இந்நாளைக் கொண்டாட காரணமாக அமைந்தது. விலங்குகளும் மனிதர்களைப் போலவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பு, அவைகளும் மாண்போடு நடத்தப்படவேண்டும் என விரும்பி இந்நாளைக் கொண்டாட தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் எடுத்தார். அக்டோபர் மாதம் நான்காம் நாள் புனித பிரான்சிஸ் அசிசியாரின் நினைவு நாளில் இந்நாளைக் கொண்டாடுவது மிக பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி பெர்லினில் உள்ள மிகப் புகழ்வாய்ந்த அரண்மனை விளையாட்டு மைதானத்தை அதற்காக  ஏற்பாடு செய்ய எண்ணினார். அம்மைதானம் அந்த நாளில் கிடைக்காத காரணத்தினால் 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதன் முதலில் இந்நாள் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய விலங்குகள் நல ஆர்வலர்கள் 500 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிலர் இந்நாள் 1931 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் கொண்டாடப்பட்டது என்று கருதுகின்றனர். உண்மையில் ஜெம்மர்மேன் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்நாள் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, யூகோஸ்லோவாக்கியா, ஜெர்மனி போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே தொடக்கத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. ஜிம்மர் மேன் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை மிகச்சிறப்பாக கொண்டாட கடுமையாக தளராது உழைத்தார். மிகச்சிறந்த பத்திரிக்கையாளராக, விலங்குகள் நலஆர்வலராக திகழ்ந்த இவர், விலங்குகள் நாள் குறித்த தன்னுடைய கருத்துக்களை பத்திரிக்கை வழியாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழியாக உலகிற்கு எடுத்துரைத்தார். தனி நபராக இவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒட்டுமொத்த உலகமக்களாலும் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 1931 ஆம் ஆண்டு மே மாதம்  இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்ற உலகளாவிய காங்கிரஸ் மாநாட்டில் தனது கோரிக்கையை முன் வைத்தார். இவரது கருத்தை ஒருமனதாக அம்மாநாட்டில் கூடியிருந்தோர் ஏற்று ஒவ்வொரு ஆண்டும்  அக்டோபர் 4ஆம் தேதி உலக விலங்குகள் நாளாகக் கொண்டாட அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே நாம் வாழ்கின்ற சூழலியல் மண்டலம் இயங்குகின்றது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஏனெனில் விலங்குகள் மனிதர்களின் அடிப்படை தேவைகள் கிடைக்க முக்கிய காரணமாக இருக்கின்றன. நதிகள் அருவிகள் வற்றாமல் இருக்க புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் உதவுவதாகக் கூறப்படுகின்றன. இயற்கையாக விளையும் ஒரு வகை புற்கள், அருவிகளில் இருந்து பாய்ந்து வரும் நீரை தேக்கி மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் உதவுகின்றன. இத்தகையப் புற்கள் மான், பசு போன்ற தாவர விலங்குகளால் உண்ணப்படாமல் தடுக்க அவைகளை உண்டு இவ்விலங்குகள் உணவுச்சங்கிலி அமைப்பில் செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகளும் இயற்கையும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட்டால் தான் மனிதர்களாகிய நாம் சிறப்பாக வாழ முடியும் என்பதை மறந்து பல நேரங்களில் செயல்படுகின்றோம்.

மனிதர்களாகிய நாம் விலங்கினங்களுக்கு எந்தவிதமான தீங்கும் செய்யாமல் இருத்தலே அவைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. ஏனெனில் விலங்குகள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளவும், பெருக்கிக் கொள்ளவும் தகுதி படைத்தவைகள். இவைகள் பெரும்பாலும் காடுகளில் வாழ்வதால் இயற்கையின் வளத்திற்கும் மனிதர்களின் நலத்திற்கும் மிக முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. விலங்குகள் அடுத்த நாளுக்கென்று எதையும் சேர்த்து வைக்க விரும்புவதில்லை அன்றன்று கிடைப்பவற்றை உண்டு மன நிறைவுடன் வாழ்கின்றன. மனிதர்கள் தான் தனக்கு பின்வரும் தலைமுறையினருக்கு பொருள் சேர்க்க வேண்டும் என்ற பேராசையினால் காடுகளை அழிக்கின்றனர். இதனால் காடுகளை தங்களது உறைவிடமாகக் கொண்ட விலங்குகள், மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இயற்கை வளம், தாவர விலங்குகளின் பெருக்கம், இயற்கைவளப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு மிக முக்கிய காரணியாக திகழும் காட்டு விலங்குகளான யானை, புலி, சிங்கம் போன்றவைகள் மனிதர்களின் சுய நலத்தாலும் பேராசையாலும் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அரிய வகை விலங்கினங்கள், விலைமதிப்பற்ற காட்டுமரங்கள், தாவர வகைகள் போன்றவை மனித பயன்பாட்டிற்காக வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் மிகுந்த வேதனை அளிக்கின்ற செயலாக இருக்கின்றது. இவ்வாறு மருந்து, தோல், ஆபரணம், அழகு, ஆசை என்று  பல தேவைகளுக்காக விலங்குகள் கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல வனவிலங்கு தடுப்புச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மனிதர்களின் பேராசையால் விலங்குகளின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதை தடுக்க அவற்றின் வளத்தை அதிகரிக்க உலகளவில் 1972 ஆம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் வழியாக விலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என அறிவிக்கப்பட்டு தகுந்த தண்டனையும் வழங்கப்பட்டு வருகின்றது.

விலங்குகளைக் காக்கும் தமிழகம்

தமிழ்நாடு இயற்கை மீதும்   விலங்குகள் மீதும் அதிக அக்கறை காட்டுகின்ற ஒரு மாநிலம். விலங்குகளைப் பாதுகாக்க சரணாலயங்கள் அமைத்து, அவற்றை பாதுகாத்து அவற்றின் இனம் பலுகி பெருக வழிவகைகள் செய்கின்றன. விலங்குகள் மட்டுமல்லாமல் பறவைகளையும் பாதுகாக்கும் பொருட்டு பறவைகள் சரணாலயங்களும் வேடந்தாங்கலில்  அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் செயல்பட்டுவருகின்றது.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், முண்டந்துறை புலிகள் காப்பகம், போன்றவைகள் வன விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்படும் முன்னரே தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு வனவிலங்கு பாதுகாப்பில் நம் நாட்டிற்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி விலங்குகள் பாதுகாப்பிற்கு முன்னோடியாகவும் திகழ்கின்றது. குறிப்பாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்கள் விலங்குகளைப் பாதுகாத்து பராமரிப்பதற்கென்றே சிறப்புற்றுத் திகழ்கின்றன. விவசாய நிலங்களை உழுவதற்கும், தொழில்முறை வேலைகளுக்கும் பயன்படும் விலங்குகளை தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல பார்க்கும் குணம் மக்களிடம் உள்ளது பாராட்டத்தக்கது. உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியா. விலங்குகள் வாழ ஒவ் வொரு நாட்டிலும் உள்ள மொத்த காட்டுப் பகுதியில் 25 விழுக்காடு ஒதுக்கப் பட வேண்டும் என உலக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  நமது மாநிலத்தில் மொத்த வனப்பரப்பில் 29.32விழுக்காடு  பரப்பளவில் வன உயிரின காப்பகங்கள் உள்ளன என்பது நம் சிறப்பு

மனித இனத்தைப் படைப்பதற்கு முன்பே இறைவன் விலங்குகளை படைத்தார் என்று திருவிவிலியமும், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று அறிவியலும் கூறுகின்றது. ஆக மனித இனம் தோன்றுவதற்கு முன்பே இவ்வுலகில் தோன்றி இயற்கை வளத்தைக் காத்த விலங்கினங்களை நாமும் காப்பது நமது கடமை. இயற்கை சூழலியலுக்கு மட்டுமன்றி மனிதர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விலங்குகள் உணவுச்சங்கிலி அமைப்பின் வழியாக இயற்கைக்கு உதவி வருகின்றன. உணவு தேவை மட்டுமன்றி மருத்துவ தேவைகளுக்காகவும், அழகுப் பொருட்களுக்காகவும் பயன்படும் விலங்குகள், மனிதர்களை இயற்கையோடு  இணைந்த வாழ்க்கை வாழ ஈர்க்கின்றன. இதனால் தான் மனதிற்கு மகிழ்வு தரும் சுற்றுலாக்களை மனிதர்கள் மேற்கொள்கின்றார்கள்.

இயற்கை மனிதனுக்கு மன அமைதியைத் தருகின்ற அற்புத மருந்து. அதனால் தான் இயற்கைசூழல் நிறைந்த இடங்களைத் தேடி இன்ப சுற்றுலா ஆன்மீக சுற்றுலா, விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள், அமைதியான தீவுகள், ஆழமான உயரமான பகுதிகள் என   மனிதர்களாகிய நாம் மேற்கொள்ளும் சுற்றுலாக்கள் இருக்கின்றன. இவற்றை நாம் செய்ய காரணமாக இருப்பவை இயற்கையைப் பேணிக்காக்கும் விலங்குகள் தான். மனிதன் விரைவாக பணம் சம்பாதிக்க விலங்குகளை வேட்டையாடி வருகின்றான் பல்லுயிர்களின் பெருக்கத்தால் மனிதனது அடிப்படைத் தேவைகளான காற்று நீர்  உணவு போன்றவவைகள் கிடைக்கின்றன. பல்லுயிர்ப்பெருக்கத்திற்குக் காரணமான விலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் எண்ணிக்கை குறைவுபடும்போது, இயற்கைப் பேரிடர்கள் உருவாகின்றன.

விழிப்புணர்வு

அனைவருக்கும் பொதுவான இல்லமாகிய இப்பூமிப்பந்தில் நாமும் நலமாக வாழ விலங்கினங்களும் வாழ நாம் முயற்சி எடுக்கவேண்டும் விலங்கினங்கள் பாதிக்கப்படுவதற்கு நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் போது அவைகள் தடுக்கப்பட வாய்ப்பிருக்கின்றது. அண்மைக் காலங்களில் நிகழும் காடழித்தல் வனவிலங்குகள் அழித்தல் போன்றவைகள் நமது எதிர்காலம் அழிவுறுவதன் தொடக்கம் என்பதை உணர்ந்து செயல்படுவோம். இயற்கையை நாம் பாதுகாத்தால் அவை நம்மை பாதுகாக்கும். காடுகளை வாழ்வாதாரமாக கொண்ட எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாத்து பரமாரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் பயன்பாடு, காடுகள் அழிப்பு, விலங்கினங்கள் வேட்டையாடப்படுதல், காடுகளை சுற்றுலாத் தளங்களாக்குதல், சாலைகள் விரிவுபடுத்தப்பட காட்டு மரங்கள் அழிக்கப்படுதல்  போன்றவற்றை தடுத்து நிறுத்த நம்மாலான முயற்சிகளை எடுப்போம். வளரும் தலைமுறையினருக்கு விலங்கினங்கள் பற்றிய நல்ல செய்திகளைப் பகிர்வோம். வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து  நடைபெறும் நிகழ்வுகளில் இளையோர்களை  அதிகமாக  பங்கேற்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.  வன விலங்குகளும் காடும் ஒன்றோடொன்று இணைந்தது.  இதில் ஒன்று அழிக்கப்பட்டால் மற்றொன்று தானாக அழிந்துவிடும். இவை இரண்டும் முற்றிலும் அழிந்துவிட்டால் மனித இனமும் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

மனிதனின்  சுயநலத்தால்  அரிய  வகை   விலங்கினங்களும்  மரங்களும்   வெட்டி  கடத்தப்பட்டு வருகின்றன.  விலங்குகளின்   இருப்பிடமாகவும்,  மறைவிடமாகவும்   உள்ள மரங்கள் வெட்டப்பட்டு மனித தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மரத்தை வெட்டுவதால்   மழைவளம் குறைந்து சூழலியல் மாறுதல்கள் ஏற்படவும், இயற்கைப் பேரிடர்கள் நிகழவும் காரணமாகின்றன. இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகம் தனித்தன்மை கொண்ட ஒவ்வொரு உயிர்களாலும் அழகாகத் திகழ்கின்றது. அவர் அழகாக படைத்தவாறே அதை அப்படியே பரமாரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. முற்காலத்தில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களைக் காப்பாற்றவேண்டியிருந்தது. இக்காலகட்டத்திலோ மனிதர்களிடம் இருந்து விலங்குகளைக் காப்பாற்ற வேண்டிய சூழலாக மாறி இருக்கின்றது. இவ்வுலகம் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல என்ற எண்ணம் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்ந்தோமானால் இயற்கை சமநிலையோடு எல்லாரும் மகிழ்வாக வாழலாம். அனைவருக்கும் இனிய உலக விலங்குகள் நாள் நல்வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...