புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாளை, தங்கள் வழிபாட்டு ஆண்டின் ஒரு நினைவுநாளாகக் கொண்டாட, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாளை, தங்கள் வழிபாட்டு ஆண்டின் ஒரு நினைவுநாளாகக் கொண்டாட, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.
நவம்பர் 15 திங்கள் முதல், 18 இவ்வியாழன் முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோர் நகரில் அந்நாட்டு ஆயர்கள் மேற்கொண்ட ஆண்டு கூட்டத்தில், நவம்பர் 17 இப்புதனன்று எடுக்கப்பட்ட இந்த முடிவை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஓர் ஆயரைத் தவிர, ஏனைய 213 ஆயர்களும், ஒரு மனதாய் ஏற்றுக்கொண்டனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
தன்னைச் சுற்றி வாழ்ந்த வறியோரிலும், ஏனைய மனிதர்களிலும் கிறிஸ்துவை எப்போதும் சந்தித்துவந்த அன்னை தெரேசா அவர்கள், அனைவருக்கும் ஓர் உந்துசக்தியாக விளங்குகிறார் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களில் ஒருவரான, Green Bay மறைமாவட்ட ஆயர் டேவிட் ரிக்கென் அவர்கள் கூறினார்.
1910ம் ஆண்டு, வட மாசிடோனியாவில் பிறந்த அன்னை தெரசா அவர்கள், தன் வாழ்வின் பெரும்பகுதியை, இந்தியாவில், அதிலும் குறிப்பாக, கொல்கத்தாவில், சமுதாயத்தால் கைவிடப்பட்டோரை பேணிக்காக்கும் பணியில் செலவிட்டார்.
1950ம் ஆண்டு, பிறரன்பு மறைப்பணியாளர்கள் என்ற துறவு சபையைத் துவக்கிய அன்னை தெரேசா அவர்கள், எய்ட்ஸ் நோய் உட்பட, பல்வேறு நோய்களால், துன்புறும் மக்களுக்கென, உலகெங்கும், 500க்கும் அதிகமான பராமரிப்பு இல்லங்களைத் துவக்கினார்.
1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, தன் 87வது வயதில் இறையடி சேர்ந்த அன்னை தெரேசா அவர்களை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 2003ம் ஆண்டு, அருளாளராகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு, புனிதராகவும் உயர்த்தினர்.
கொல்கத்தா நகரின் புனித அன்னை தெரேசாவின் திருநாள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. (CNA)
No comments:
Post a Comment