Wednesday, 17 November 2021

ஸ்டான் சுவாமியின் இறைவாக்கு குரல் ஒடுக்கப்பட்டது

 மனித உரிமைப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச.


இந்தியாவின் முக்கிய பழங்குடியின குழுமங்கள் வாழ்கின்ற ஜார்கண்ட், ஒடிசா மற்றும், சட்டீஸ்கர் மாநிலங்களில் நிலக்கரி அதிகமாகக் கிடைக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடந்த வாரத்தில் முடிவடைந்த COP26 கிளாஸ்கோ உலக உச்சி மாநாட்டில், நிலக்கரி பயன்பாட்டை ஒழிப்பது, முக்கிய விவகாரமாகப் பேசப்பட்டதை, மும்பையில் ஒன்பது மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டு, மரணமடைந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் இறைவாக்காகப் பேசினார் என்றும், அவரது குரல் ஒடுக்கப்பட்டது என்றும் ஆசியச் செய்தி கூறுகிறது.

இந்தியாவின் 41 நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்திற்கு விடுவதற்குத் திட்டமிருந்த இந்திய அரசின் கொள்கைக்கு எதிராக, கடினமான கட்டுரை ஒன்றை ஸ்டான் சுவாமி அவர்கள் எழுதியிருந்தார். அரசின் இக்கொள்கை, பழங்குடியின மக்களின் உரிமைகளை மீறுவதாய் உள்ளது என்றும், ஸ்டான் சுவாமி அவர்கள், அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

பழங்குடியின மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த, ஸ்டான் சுவாமி அவர்கள், கைது செய்யப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும், மனித உரிமைக்காக இவர் எழுப்பிய குரல் முதலில் சிறையில் மௌனப்படுத்தப்பட்டது, பின்னர் சிறையின் நடவடிக்கையால் கடந்த ஜூலையில் தனது 84வது வயதில் அவரது குரல் முற்றிலும் அணைக்கப்பட்டது என்றும், ஆசியச் செய்தி கூறுகிறது. 

COP26 உலக மாநாட்டில், நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக ஒழிப்பது என்பதற்குப் பதிலாக, 'நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாகக் குறைப்பது' என ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதற்கு, இந்தியா ஒரு முக்கிய காரணம் என்பதும், இவ்வாறு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதற்கு பல நாடுகள் தங்களின் அதிருப்தியை வெளியிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கன.

புவிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்சைடு வாயுவில் 40 விழுக்காட்டிற்கு, புதைபடிம எரிபொருளான நிலக்கரியே காரணம். நிலக்கரி, சுற்றுச்சூழலுக்கும், மக்களின் சமூக வாழ்வுக்கும் பெரும் சேதங்களை விளைவிக்கின்றது. இந்தியாவின் முக்கிய பழங்குடியின குழுமங்கள் வாழ்கின்ற ஜார்கண்ட், ஒடிசா மற்றும், சட்டீஸ்கர் மாநிலங்களில் நிலக்கரி அதிகமாகக் கிடைக்கின்றது. ஜார்கண்ட் மாநிலத்தில்தான் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் பணியாற்றினார்.

இந்திய அரசின் நிலக்கரி சுரங்கம் சார்ந்த கொள்கையில், பத்து கோடி டன்கள் நிலக்கரி, வாயுவாக மாற்றப்படும் என்றும், இதன் வழியாக, உலகில், நிலக்கரியை ஏற்றுமதிசெய்யும் பெரிய நாடாக இந்தியா மாறும் என்றும், இவ்வாறு இந்தியா தன்னிறைவு பெறும் என்றும் கூறப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. (AsiaNews)

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...