Tuesday, 2 April 2019

மதச்சார்பற்ற இந்திய அரசியல் அமைப்பு ஆதரிக்கப்பட...

மதச்சார்பற்ற இந்திய அரசியல் அமைப்பு ஆதரிக்கப்பட... தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

நாட்டின் வளர்ச்சிக்கும் ஒன்றிப்புக்கும் குரல் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதுடன், மத தீவிரவாதப் போக்கை எதிர்க்குமாறும் இந்தியக் கத்தோலிக்கர்களிடம் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற அரசையும் ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், போலியான தேசியவாதத்தை ஒதுக்கித்தள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன, இந்தியாவின் இரு மாநில ஆயர்களின் அறிக்கைகள்.
தேர்தல் பற்றிய தலத் திருஅவையின் நிலைப்பாட்டைக் குறித்து இந்திய மக்களுக்கு, பொதுவான ஓர் அறிக்கையை, அண்மையில், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் வெளியிட்டபின், தற்போது, கேரள ஆயர்கள், தங்கள் மாநில கத்தோலிக்கர்களுக்கென வெளியிட்டுள்ள அறிக்கையில், மதச்சார்பற்ற இந்திய அரசியல் அமைப்பை ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்குமாறு விண்ணப்பித்துள்ளனர்.
வரும் ஞாயிறன்று அனைத்துக் கத்தோலிக்கக் கோவில்களிலும் வாசிக்கப்படவுள்ள இந்த மேய்ப்புப்பணி சுற்றறிக்கை,  வாக்களிப்பது குறித்த வழிமுறைகளை எடுத்துரைத்துள்ளதுடன், எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும், அரசியல் கொள்கைக்கும்  கேரளத் தலத்திருஅவை ஆதரவு அளிக்கவில்லை என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
மத உணர்வுகளைத் தூண்டியும், பதவிக்கு மீண்டும் வந்தால் இந்து இராஜ்ஜியம் அமைப்போம் எனவும் கூறப்பட்டுவரும் நிலையில், நாட்டின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும், ஒன்றிப்புக்கும், குரல் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதுடன், மத தீவிரவாதப் போக்கை எதிர்க்குமாறும், கேரள ஆயர்கள், கத்தோலிக்கர்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், கோவா மாநில ஆயர்களின் சமூக நீதி மற்றும் அமைதி அவை  வெளியிட்டுள்ள தேர்தல் வழிகாட்டல் அறிக்கையில், போலியான தேசியவாதத் துணையுடன் இடம்பெறும் அச்சுறுத்தலை எதிர்க்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
தங்களின் வெற்றிக்காகவும், அதிகாரத்திற்காகவும் கட்சி மாறும் வேட்பாளர்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
தங்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் வேட்பாளர்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என தெளிவாக உரைக்கிறது கோவா மாநில ஆயர்களின் அறிக்கை. (UCAN)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...