Tuesday, 2 April 2019

மனநிலையைச் சரிசெய்தால்...

மனநிலையைச் சரிசெய்தால்...  விளையாடும் மகிழ்வில் சிறார்

நமக்கு உள்ளே என்ன இருக்கின்றதோ, அதுவே முக்கியமானதாகும். நமக்கு உள்ளே இருந்து, நாம் உயர்வதற்கு காரணமாக இருப்பதே நம் மனப்பாங்குதான், நம் மனநிலைதான்.
 

ஒரு சந்தையில் பலூன்களை விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார் ஒரு வியாபாரி. சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை போன்ற பல வண்ணப் பலூன்கள் அவரிடம் இருந்தன. வியாபாரம் மந்தமாகும் நேரங்களில் எல்லாம், ஹீலியம் நிரப்பிய பலூன் ஒன்றை மேலே பறக்கவிடுவார். அது மேலே எழும்பிச் செல்வதைப் பார்க்கும் சிறார் அனைவரும் அதன்மேல் ஆசை வைத்து, உடனே அவரிடம் ஓடிவந்து பலூன்களை வாங்குவார்கள். அதனால் அவரது விற்பனை மீண்டும் உயரும். நாள் முழுவதும் அவர் இது மாதிரியே செய்து வருவார். இதைக் கவனித்துக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அன்று திடீரென பின்னால் இருந்து, யாரோ ஒருவர் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்தார் அந்த பலூன் வியாபாரி. திரும்பிப் பார்த்தால் அந்தச் சிறுவன். ஐயா, நீங்கள் ஒரு கறுப்பு பலூனை மேலே விட்டால், அதுகூட பறக்குமா எனக் கேட்டான் சிறுவன். அந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை உணர்ந்து நெகிழ்ந்த அந்த வியாபாரி, மகனே, இந்த பலூன் மேலெழும்பிச் செல்வதற்கு, அதன் நிறம் காரணம் அல்ல, மாறாக, அதற்கு உள்ளே என்ன இருக்கிறதோ, அதுவே காரணம் என்று பரிவன்புடன் பதில் சொன்னார்.
இந்தக் கதையை நீங்கள் முன்பே கேட்டிருக்கலாம். ஆயினும் இந்தக் கதை சொல்லும் கருத்து நம் வாழ்வுக்கும் பொருந்தும். நமக்கு உள்ளே என்ன இருக்கின்றதோ, அதுவே முக்கியமானதாகும். நமக்கு உள்ளே இருந்து, நாம் உயர்வதற்கு காரணமாக இருப்பதே நம் மனப்பாங்குதான், நம் மனநிலைதான். சில தனிமனிதர்கள், சில தொழில் அமைப்புகள், சில நிறுவனங்கள், அல்லது சில நாடுகள், ஏனையோரைவிட வெற்றிகரமாகச் செயல்பட முடிகின்றதே, அது ஏன் எனச் சிந்தித்துப் பாருங்களேன்.

ஹைதராபாத் பாபுராவ்
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் ‛லாட்டி கா பவுல் பஜார்’ (Laadtea ka paul bazar) வழியாக பயணம் செய்யும்போது நிலோபர் கபே என்று பெயரிடப்பட்ட ஒரு டீ கடை உள்ளது. அந்த கடைக்குள் முதன்முதலில் சென்ற தினமலர் நிருபர் எல்.முருகராஜ் அவர்கள், தனது வியப்புகலந்த அனுபவத்தை இவ்வாறு சொல்கிறார்
அந்த டீ கடை,  நகைக்கடை போல காட்சியளிக்கிறது. உறவும் நட்புமாக கூட்டம் கடைக்கு உள்ளும் புறமும் அலைமோதுவது வித்தியாசமான காட்சிதான். இந்த டீ கடையில் வெளிப்புறம் எவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறதோ, அதைவிட அதிகமாக உள்ளே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. பிஸ்கட்களில் விதவிதமான பிஸ்கட்டுகள். பல பல இனிப்பு வகைகள், கேக்குகள். வழக்கமான டீயுடன், பெப்பர் டீ, லெமன் டீ, ஜிஞ்சர் டீ என்று, பலவிதமான டீ அங்கே விற்கப்பட்டு இருந்தது. டீ மிகவும் வித்தியாசமாகவும் அதிகச் சுவையுடனும் இருந்தது. பதினைந்து ரூபாயில் இருந்து டீயின் விலை ஆரம்பிக்கிறது. இங்குள்ள பிஸ்கட்டை சுவைத்துக்கொண்டே டீ சாப்பிடுவது இன்னும் சுகம். டீ சாப்பிடும் வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, துபாய்க்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த டீ கடையின் மற்றோர் அம்சம், பார்சல் வாங்குபவர்களுக்கு, ஒரு முறை பயன்படக்கூடிய பேப்பர் பிளாஸ்க்கில் டீ தருகின்றனர். எவ்வளவு நேரம் கழித்து குடித்தாலும் சூடு ஆறுவதில்லை. டீ கடையின் அதிபர் பாபுராவ் அவர்கள், சுறுசுறுப்பாக வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இதில் வியப்பு என்னவென்றால், இந்தக் கடையின் உரிமையாளரான பாபுராவ் அவர்கள், இதே டீ கடையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், கூட்டிப் பெருக்கும் வேலை செய்து கொண்டிருந்தாராம். இவர், தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கிராமத்தில் உள்ள விவசாய கூலித் தொழிலாளரின் மகன். படிப்பதற்கு புத்தகம் வாங்க இயலாத நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைதேடி ஹைதராபாத் வந்தார் பாபுராவ்.
அவருக்கு இந்த டீ கடையில் கிடைத்த அந்த வேலையை ஆனந்தமாகச் செய்தார். இரவில் இரயில் நிலைய நடைமேடைகளில் துாங்கிக்கொள்வார். சில வருடங்களில் டீ மாஸ்டராக பதவி உயர்வு பெற்றார் அவர். ஒரு நெருக்கடி காரணமாக இந்தக் கடையை நடத்த முடியாத முதலாளி, கடையை பாபுராவ் அவர்களிடம் விற்றுவிட்டார். பாபுராவ் அவர்கள் கடைக்கு பொறுப்பு ஏற்றபிறகு, வெறும் டீ மட்டும் கொடுக்காமல், வாடிக்கையாளர்களுக்கு பிஸ்கட்டும் தயாரித்துக் கொடுத்தார். கடைக்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்தனர், வருமானமும் அதிகரித்தது. நாற்பது ஆண்டுகள் கடினமாக உழைத்தார். தனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றை எல்லாம் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தார். வியாபாரத்தில் வெற்றிபெற்றார். இன்று ஹைதராபாத்தின் செல்வந்தர்களில் ஒருவராக விளங்குகிறார் பாபுராவ். கடந்த ஆண்டு நட்சத்திர ஒட்டல் வடிவமைப்பில், மற்றொரு டீ கடையைத் திறந்தார். அதுதான் நிலோபர் கபே. பாபுராவ் அவர்களின் இன்னொரு பக்கம் கருணை நிறைந்தது. இவர் ஒரு காலத்தில், பசியின் கொடுமையை உணர்ந்ததாலோ என்னவோ தனது கடை அமைந்திருக்கும் தெருவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு, காலை மற்றும் மதிய உணவை, கடந்த பத்து ஆண்டுகளாக, இலவசமாக வழங்கி வருகிறார். மேலும் குணமான நோயாளிகள் ஊர் திரும்புவதற்குத் தேவையான பணத்தையும், இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான உதவியையும் இவரே செய்து வருகிறார். ஆதரவற்றவர்களை ஆதரித்து டீ கடையில் வேலை தருகிறார். சிறிது நாளானதும் பணம் கொடுத்து அவர்களுக்கு இவரே ஒரு டீ கடை வைத்துக்கொடுத்து பிழைக்க வழிகாட்டுகிறார். பாபுராவ் அவர்கள், வறிய நிலையில் இருந்து, உழைப்பால் உயர்ந்து, இப்போது குணத்தாலும் உயர்ந்து நிற்கிறார். (நன்றி: தினமலர்)


ரம்யா ஜெ.கிறிஸ்டினா
மனிதர் தனது மனநிலைகளை மாற்றிக்கொள்வதன் வழியாகவே, தனது வாழ்வை மாற்றிக் கொள்ளலாம் என்பதே, எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும் என்று, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த வில்லியம் ஜேம்ஸ் அவர்கள் சொன்னார். ஆம். ஒவ்வொரு மனிதரின் உயர்வுக்கு அவரின் மனநிலை முக்கிய காரணமாக அமைகின்றது. மனிதரின் உயர்வுக்கு அடுத்த காரணமாக அமைவது, தன்னம்பிக்கை. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரம்யா ஜெ.கிறிஸ்டினா அவர்கள். இவர் உடலெங்கும் வெண்புள்ளி என்ற குறையைக் கொண்டுள்ளவர். ஆனால், மாடலிங், உதவி இயக்குனர், விளம்பரங்களில் எழுத்தாளர், விழிப்புணர்வுப் பேச்சாளர் என, இவரைப் பற்றி நிறையச் சொல்லலாம். இந்த இடத்தை எட்டுவதற்கு, 22 வயது வரை இவர் சந்தித்த அவமானங்கள், கேலிப் பேச்சுகள், மனஉளைச்சல், மனசாட்சியற்ற சாடல்கள் போன்றவை எழுத்துக்குள் அடங்கா.
பலரும் தூக்கிக் கொஞ்சும் அளவுக்கு, ஐந்து வயதுவரை அழகாக இருந்த ரம்யா கிறிஸ்டினா அவர்கள், தனது ஐந்தாவது வயதில் அசைவம் சாப்பிட்டபோது உடலில் கொப்புளம் வந்தது. அதற்காக மருத்துவர் கொடுத்த மருந்து ஒவ்வாமையாகிவிட்டது. அதைத் தொடர்ந்து முடி கொட்டியது. உடலில் ஆங்காங்கே திட்டுத் திட்டாகக் கருமை நிறம் படிந்தது. உடல் முழுவதும் மெலனின் குறைபாட்டால் தோல் நிறம் மாறிவிட்டது. தலைமுடியும் உதிர்ந்துவிட்டது. யாரும் அவர் பக்கத்தில் உட்கார மாட்டர்கள்; பேச மாட்டார்கள். பள்ளியில் தோழிகளும் கிடையாது. தன்னிடம் தண்ணீர் வாங்கி குடித்தால் பாவம் என்றார், பள்ளி ஆசிரியர் ஒருவர். ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் ரம்யா. பரிசு வாங்குவதற்காகச் சென்றபோது உனக்கெல்லாம் பரிசுதர முடியாது என ஒலிபெருக்கியில் சொல்லி மூவாயிரம் மாணவர்கள் முன் அவமானப்படுத்தியுள்ளனர். ரம்யா அவர்கள் மேலும் சொல்கிறார்...
சிலநேரம் மன அழுத்தம் தாங்க முடியாமல் மெழுகுவர்த்தியில் கைகளைச் சுட்டுக்கொண்டு, என்னை நானே துன்புறுத்திக்கொள்வேன். இதற்கு நடுவில் தோல் சிகிச்சைக்காக நிறைய மருந்து எடுத்துக்கொண்டிருந்தேன். பெரியப்பா பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பார்க்க வரும்போது, என்னை முன்னே வரவேண்டாம் என அவர்கள் வீட்டில் சொன்னது, எனது அம்மாவைப் பாதித்தது. அதிலிருந்து என்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட நான் மீண்டுவந்தது ஒரு நட்பால்தான். கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கைபோல் இல்லை. நண்பர்கள் கிடைத்தனர். புகைப்படக் கலைஞர் மாதுரி தேவி அவர்கள், என்னை அழகான சிறுத்தை என அழைத்தார். மாசற்ற தனித்துவமான அழகி எனச் சொல்லி பலவிதங்களில் புகைப்படம் எடுத்தார். அப்போதுதான் மாடலிங் செய்யலாம் எனத் தோன்றியது. நம்மிடம் எது அழகு என்று பார்க்கக் கற்றுக்கொண்டால்போதும் என அப்போது புரிந்தது. பல விளம்பர நிறுவனங்கள் மாடலிங் செய்ய என்னை அணுகினர். அதன்பின்னர் சில இயக்குநர்களிடம், சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். இப்போது விளம்பரங்களுக்குக் கருத்துருவாக்கம் செய்கிறேன். “என்னைப் போன்ற நிறமி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு என் கதையைச் சொல்லி தன்னம்பிக்கை வளர்க்கிறேன். பல நிறுவனங்களில் பேச அழைக்கிறார்கள். என்னைப் பார்த்து ஒதுங்குபவர்களையும் பரிதாபப்படுபவர்களையும் பார்த்தால் நான் புன்னகைப்பேன். ஆறுதல் சொல்பவர்களிடம், “என்னைப் போன்றவர்களை நீங்கள் சந்திக்க நேரிட்டால் அவர்களை உதாசீனம் செய்யாதீர்கள்; அவரிடம் என் கதையைச் சொல்லி என்னைப்போல் மாறச் சொல்லுங்கள்” என்று கூறி அமைதியாகக் கடந்து விடுகிறேன். (நன்றி: விகடன்)
எனவே நம் மனநிலையைச் சரிப்படுத்திக் கொண்டால், எந்நிலையையும் சமாளித்து வாழ்வில் முன்னேறலாம். நமது சிந்தனை நமது மனநிலையை மாற்றுகின்றது. இந்த மனநிலையானது நேர்மறை அல்லது எதிர்மறை மனநிலையாக உருவாகிறது. நேர்மறை மனநிலை, உற்சாகமான வாழ்வையும், சாதனை செய்யும் மனதையும் உருவாக்கும். ஆகவே, நமது மனநிலையை நேர்மறையாக வைத்துக்கொள்ள முயற்சிகள் எடுப்போம். நமது குடும்பச்சூழல், கல்வி, வாழும் பகுதி, நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம் போன்றவையும் நம் மனநிலையை நிர்ணயிக்கும் காரணிகள். எனவே வாழ்க்கையோடு நாம் ஒன்றிப்போனால் நம் முயற்சிகள் வெற்றிபெறும்.    

No comments:

Post a Comment