Monday, 25 July 2016

வத்திக்கான் வானொலி - செய்திகள் / 23.07.16

வத்திக்கான் வானொலி - செய்திகள் / 23.07.16
------------------------------------------------------------------------------------------------------

1. பெண்கள் ஆழ்தியான சபைகளில் புதியவர்களைச் சேர்ப்பது பற்றி...

2. கிரக்கோவுக்கு ஆசிய விழுமியங்களை எடுத்துச்செல்லும் ஆசிய இளையோர்

3. ஐம்பது நாடுகளில் அன்னை தெரேசா பற்றிய திரைப்பட விழா

4. ஆப்கானில் கடத்தப்பட்ட இந்திய தன்னார்வலப் பணியாளர் மீட்பு

5. தொல்பொருள் ஆய்வுகள் எண்ணெய்யைவிட மதிப்புமிக்கவை

6. சவுதியில் வேலை இழக்கும் குடியேற்றதாரர்க்கு உதவ அழைப்பு

7. உ.பி.யில் ஆசிரியர் பணிக்கு முதல்முறையாக திருநங்கைகள் விண்ணப்பம்

------------------------------------------------------------------------------------------------------

1. பெண்கள் ஆழ்தியான சபைகளில் புதியவர்களைச் சேர்ப்பது பற்றி...

ஜூலை,23,2016. ஆழ்தியான துறவு சபைகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே, மற்ற நாடுகளிலிருந்து அச்சபைகளுக்கு பெண்களைச் சேர்ப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் இந்த எச்சரிக்கை குறித்து விளக்கிய பேராயர் ஹோசே ரொட்ரிகெஸ் கர்பாலோ அவர்கள், வேறு நாடுகளிலிருந்து இச்சபைகளில், வந்து சேரும் விருப்பநிலையினருக்குக் கதவை அடைக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல, ஆனால் அவ்வாறு சேர்க்கும்போது, சரியான தேர்ந்து தெளிதல் அவசியம் என்பதே திருத்தந்தையின் எண்ணம் என்றார்.
“Vultum Dei quaerere”, அதாவது கடவுளின் திருமுகத்தைத் தேடல்என்ற தலைப்பில், பெண்கள் ஆழ்தியான துறவு சபைகளுக்கென திருத்தந்தை எழுதியுள்ள புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தை, இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய, துறவிகள் பேராயத்தின் செயலர் பேராயர் கர்பாலோ அவர்கள் இவ்வாறு விளக்கினார்.
ஓர் ஆழ்தியான சபை, மற்ற கண்டங்களிலிருந்து இறையழைத்தல்களைக் கேட்கும்போது, இதை எதற்காகச் செய்கிறேன்? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும், அச்சபை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் கேட்பது, நற்செய்தி அறிவுரைப்படி நியாயப்படுத்தப்பட முடியாதது என்றும் கூறினார் பேராயர் கர்பாலோ.
அதேநேரம், இச்சபைகளில் சேருவதற்காக, வேறு கண்டங்களிலிருந்து செல்லும் பெண்களும், நான் ஏன் செல்கிறேன்? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும் கூறிய பேராயர் கர்பாலோ அவர்கள், இந்த இரண்டு கேள்விகளும், பல விடயங்களைத் தெளிவுபடுத்தும் என்றும் விளக்கினார்.
புதிதாகச் சபைகளில் சேருபவர்க்கு, உருவாக்கும் பயிற்சியளித்தல் அல்லது, சபைகளை மூடுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களில் ஏற்படும் பாதிப்பு போன்றவைகளில், இச்சபைகள் ஒன்றோடொன்று ஒத்துழைக்குமாறும், கூட்டமைப்புகளை உருவாக்குமாறும்,  Vultum Dei quaerere திருத்தூது கொள்கை விளக்கத்தில், திருத்தந்தை கேட்டுள்ளார்  என்றும் கூறினார் பேராயர் கர்பாலோ.
66 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள் இச்சபைகளுக்கென வெளியிட்ட "Sponsa Christi" என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தில் உள்ள சட்டமுறையான இடைவெளிகளை நிரப்பும் விதமாக, Vultum Dei quaerere புதிய திருத்தூது கொள்கை விளக்கம் அமைந்துள்ளது என்றும் பேராயர் தெரிவித்தார். 38 பக்கங்கள் கொண்ட இப்புதிய கொள்கை விளக்கத்தில், 14 புதிய தலைப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், ஏறத்தாழ நான்காயிரம் ஆழ்தியான துறவு இல்லங்களுக்கும் கேள்விகள் அனுப்பப்பட்டு, கிடைத்த பதில்களிலிருந்து இப்புதிய விளக்கம் வெளிவந்துள்ளது என்பதையும் அறிவித்தார் பேராயர் கர்பாலோ.
இரண்டாயிரமாம் ஆண்டில், 48 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த பெண் ஆழ்தியான சபையினர், 2014ம் ஆண்டில் 39 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தனர் என்றும் அவர் கூறினார்.
இச்சபைகளின் அருள்சகோதரிகள், ஐரோப்பாவில் 23 ஆயிரத்திற்கு அதிகமாகவும், அமெரிக்காவில், எட்டாயிரத்துக்கு அதிகமாகவும்  உள்ளனர். ஏழைக் கிளாரா, கர்மேல், பெனடிக்ட் ஆகிய மூன்று சபைகளுமே அதிகமான எண்ணிக்கையில் அருள்சகோதரிகளைக் கொண்டிருக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
    
2. கிரக்கோவுக்கு ஆசிய விழுமியங்களை எடுத்துச்செல்லும் ஆசிய இளையோர் 

ஜூலை,23,2016. போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் 31வது உலக இளையோர் தின நிகழ்வுக்குச் செல்லும் ஆசிய இளையோர், ஆசிய விழுமியங்களை எடுத்துச் செல்கின்றனர் என்று இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.
கிரக்கோவில் நிகழவிருக்கும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில், பெருமளவில் ஆசிய இளையோர் கலந்துகொள்வது, திருஅவையின் வசந்த காலமாக அமையும் என்று கூறினார், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
கிரக்கோவ் உலக இளையோர் தினம் பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்நிகழ்வில், எண்ணிக்கை, உயிர்த்துடிப்பு, அழகு ஆகியவற்றில் மட்டுமல்ல, ஆசியாவின் பன்மைக் கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் குடும்ப மதிப்பீடுகளை வெளிப்படுத்துவதிலும் ஆசிய இளையோர் சிறந்து விளங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆசிய இளையோர் பிரதிநிதிகளில் பலர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களைப் பார்த்திருக்கின்றனர் மற்றும் அவரின் அன்பை உணர்ந்திருக்கின்றனர் என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இத்திருத்தந்தை மீது ஒருவித நன்றியுணர்வோடும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது அன்பு கொண்டும் இதில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார். 
ஜூலை 26, வருகிற செவ்வாயன்று தொடங்கும் 31வது உலக இளையோர் தினத்தில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியன்மார், பிலிப்பைன்ஸ் என, பல ஆசிய நாடுகளிலிருந்து இளையோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி

3. ஐம்பது நாடுகளில் அன்னை தெரேசா பற்றிய திரைப்பட விழா

ஜூலை,23,2016. அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், வருகிற செப்டம்பரில் புனிதராக அறிவிக்கப்படுவதை முன்னிட்டு, அன்னையின் வாழ்வு மற்றும் போதனைகளை மையப்படுத்திய திரைப்பட விழா ஒன்று, ஏறத்தாழ ஐம்பது நாடுகளில், நூறு இடங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்தியாவில் சமூகத்தொடர்புத்துறைக்கான, உலக கத்தோலிக்க கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும், அன்னை தெரேசா அனைத்துலக திரைப்பட விழா (MTIFF), வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பமாகும். அதன்பின்னர், அடுத்த ஆறு மாதங்களுக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    
நொபெல் அமைதி விருது பெற்ற, அன்னை தெரேசா அவர்கள் வாழ்வால் தூண்டப்பட்டு எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படங்கள், கொல்கத்தாவில் மூன்று நாள்களுக்குத் திரையிடப்படும் என்று, அதன் இயக்குனர் சுனில் லூக்காஸ் அவர்கள் கூறினார்.
அதன்பின்னர், இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, உதய்ப்பூர், குவாஹாட்டி, பாட்னா, இந்தோர், ராஞ்சி மற்றும் கேரளாவின் நான்கு நகரங்களில் திரையிடப்படும் என்று மேலும் கூறினார், சுனில் லூக்காஸ்.
பிரிட்டன், மலேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மியன்மார், பங்களாதேஷ், இலங்கை, சீனா உட்பட 50 நாடுகளில் இவ்விழா நடைபெறும்.  
வருகிற செப்டம்பர் 4ம் தேதி வத்திக்கானில் அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்படுவார்.
அன்னை தெரேசா அனைத்துலக திரைப்பட விழா, அன்னை அருளாளராக அறிவிக்கப்பட்டவுடன், முதலில் 2003லும், பின்னர், 2007 மற்றும் 2010ம் ஆண்டுகளிலும் இடம்பெற்றது.

ஆதாரம் : Business Standard / வத்திக்கான் வானொலி

4. ஆப்கானில் கடத்தப்பட்ட இந்திய தன்னார்வலப் பணியாளர் மீட்பு

ஜூலை,23,2016. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடத்தப்பட்ட இந்திய கத்தோலிக்கப் பெண் தன்னார்வலப் பணியாளர் ஜூடித் டி சூசா அவர்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதை, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்..
கடந்த ஓராண்டாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஆகா கான் அறக்கட்டளையில் பணியாற்றி வந்த நாற்பது வயது நிரம்பிய ஜூடித் அவர்கள், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி, தலைநகர் காபூலில், துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக, இச்சனிக்கிழமை அதிகாலை சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், தனது டுவிட்டர் பக்கத்தில், "ஜூடித் டி சூசா அவர்கள் நம்முடன் இருக்கிறார், அவர் பத்திரமாக, நல்ல நிலையில் உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மீட்கப்பட்ட ஜூடித், காபூலில் இந்திய தூதரகத்தில் இருப்பதாகவும், அவர் இச்சனிக்கிழமை மாலையில் இந்தியா திரும்புகிறார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.
ஜூடித் மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவரது சகோதரர் ஜெரோம் டி சூசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், "எனது சகோதரி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திய அரசுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் விடாமுயற்சியின் காரணமாகவே ஜூடித் மீட்கப்பட்டுள்ளார்" என்றார்.
ஜூடித்தின் தந்தை டென்ஸல், தாய் லாரன்ஸ், சகோதரி ஆக்னஸ் ஆகியோரும், மகிழ்ச்சியுடன் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜுடித், கடந்த ஓராண்டாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஆகா கான் அறக்கட்டளையில் பணியாற்றி வந்தார். இதற்குமுன் பல்வேறு தன்னார்வ அமைப்புகளில் கொல்கத்தா மற்றும் டெல்லியில் பணியாற்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தானைப் புனரமைக்க இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ள நிலையில், இந்திய அமைப்புகள் கடந்த காலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி

5. தொல்பொருள் ஆய்வுகள் எண்ணெய்யைவிட மதிப்புமிக்கவை

ஜூலை,23,2016. ஈராக்கில், சில தொல்பொருள் மற்றும் இயற்கையாக அமைந்த பாரம்பரிய இடங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பது குறித்து தனது மகிழ்வையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் முதுபெரும் தந்தை இரஃபேல் லூயிஸ் சாக்கோ.
யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில், புதிதாக இணைக்கப்பட்டுள்ள மூன்று தொல்பொருள் மற்றும் நான்கு இயற்கையாக அமைந்த பாரம்பரிய இடங்களின் ஒரு பகுதி, ஏடன் விவிலியத் தோட்டம் அமைந்திருந்த பகுதியில் உள்ளது என்று கூறியுள்ளார், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை சாக்கோ.
ஈராக் நாட்டிற்கு, அமைதியும், உறுதியான தன்மையும் அவசியம் என்று கூறி, ஈராக்கியர்கள் இந்தப் பாரம்பரியச் சொத்துக்களைப் பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில், உலகப் பாரம்பியச் சொத்து குழு நடத்திய 40வது அமர்வில், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ, 21 புதிய இடங்களை இணைத்துள்ளது. இதில், ஈராக்கில், கல்தேயர்களின் Ur,  Eridu, Uruk ஆகிய மூன்று இடங்களும் உள்ளடங்கும். இவை கி.மு. 3ம், 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த, சுமேரிய நகரங்களின் எஞ்சிய பகுதிகளாகும். 
இது குறித்துப் பேசிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இவை, வருங்காலத் தலைமுறைகள் சுற்றுலாக்களை ஊக்குவிக்க உதவும் என்றும், தொல்பொருள் அறிவியல் ஆய்வுகள், எண்ணெய்யைவிட மதிப்புமிக்கவை என்றும் கூறினார்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி

6. சவுதியில் வேலை இழக்கும் குடியேற்றதாரர்க்கு உதவ அழைப்பு

ஜூலை,23,2016. சவுதி அரேபியாவில் வேலைகளை இழக்கும் பிலிப்பைன்ஸ் குடியேற்றதாரப் பணியாளர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்குமாறு, அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார் பிலிப்பைன்ஸ் ஆயர் ஒருவர்.
தங்கள் குடிமக்கள், வெளிநாடுகள் சென்று வாழ்வுக்காக உழைப்பது சரியானது என்பது இல்லாவிடினும், அவ்வாறு செல்பவர்களின் உரிமைகளுக்கும், நல்வாழ்வுக்கும் அரசு உறுதியளிக்க வேண்டுமென்று,  பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழு தலைவர் ஆயர் ருபெர்த்தோ சாந்தோஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
பிலிப்பைன்ஸ் தொழில் அமைச்சகர் சவுதி அரேபியா சென்றுள்ள இவ்வேளையில், இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு, அவ்வமைச்சகச் செயலர் சில்வெஸ்டர் பெல்லோ அவர்கள் முயற்சிகள் எடுப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார் ஆயர் சாந்தோஸ்.
சவுதி அரேபியாவில், ஒரு பீப்பாய் எண்ணெய், 100 டாலரிலிருந்து, 30 டாலராக இவ்வாண்டில் குறைந்துள்ளவேளை, அந்நாடு, 2009ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக, வரவுசெலவில் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. உ.பி.யில் ஆசிரியர் பணிக்கு முதல்முறையாக திருநங்கைகள் விண்ணப்பம்

ஜூலை,23,2016. உத்தர பிரதேச அரசுப் பள்ளி மற்றும், கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்களுக்காக, முறைப்படி முதல்முறையாக விண்ணப்பித்துள்ளனர் திருநங்கையர்.
உத்தரப் பிரதேசத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் மற்றும் இன்டர்மீடியேட் கல்லூரிகளில் உள்ள, 9,000 காலிப்பணியிடங்களை நிரப்ப மாநில மேல்நிலைக் கல்வி பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதில், உதவி ஆசிரியர் பணிக்காக, 47 திருநங்கைகளும், விரிவுரையாளர் பணிக்காக 22 திருநங்கைகளும் விண்ணப்பித்துள்ளனர். வாரியத்தின் சார்பில் இதுவரை ஆசிரியர் பணிக்காக 6,26,790 விண்ணப்பங்களும், விரிவுரையாளர் பணிக்காக 3,93,882 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்களில், திருநங்கைகளின் விண்ணப்பங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஆசிரியர் பணியில் சேர அவர்கள் உரிய தகுதியுடன் முன்வந்திருப்பதே முக்கியமானதாக கருதப்படுகிறது.
பணியில் சேருவதற்காக, தங்களின் அடையாளத்தை மறைக்காமல், சமுதாயத்தில் தங்களுக்கான சட்ட உரிமையைக் கேட்டுப்பெறும் வகையில், வெளிப்படையாக விண்ணப்பங்களை அவர்கள் சமர்ப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என, தேர்வு வாரியத்தின் செயலாளர் ரூபி சிங் அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment