செய்திகள்-12.01.16
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் துணை ஆயர் அ.பணி ஜோஸ் புளிக்கல்
2. செபம், திருஅவையின் வாழ்வுக்கு உண்மையான உந்து சக்தி
3. திருத்தந்தை : “இரக்கம், கடவுளின் அடையாள அட்டை"
4. Madaya, குற்றக்கும்பலுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பிணையல் நகரம்
5. Madayaவில் உடனடி மருத்துவ சிகிச்சைத் தேவையில் 400 பேர்
6. ஜெர்மனியில் குடியேற்றதாரரின் தாக்குதல்கள் சகித்துக்கொள்ள முடியாதவை
7. கொரியத் தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க WCC வேண்டுகோள்
8. போர்ப் பகுதிகளில் 2 கோடிக்கு மேற்பட்ட சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் துணை ஆயர் அ.பணி ஜோஸ் புளிக்கல்
சன.12,2016.
சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் துணை ஆயராக
அருள்பணி ஜோஸ் புளிக்கல் அவர்கள் இச்செவ்வாயன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் புனித தாமஸ் மவுண்டில் கூடிய, சீரோ-மலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் ஆயர்கள் பேரவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலின் பேரில், அருள்பணி ஜோஸ் புளிக்கல் அவர்களை, காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்துள்ளது.
கேரளாவின் Inchiyaniல் 1964ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் ஜோஸ் புளிக்கல் அவர்கள், 1991ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பெங்களூரு தர்மாரம் இறையியல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், மறைக்கல்வி இயக்குனராகவும், 2014ம் ஆண்டிலிருந்து சீரோ-மலபார் வழிபாட்டுமுறை அருள்பணியாளர்களுக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. செபம், திருஅவையின் வாழ்வுக்கு உண்மையான உந்து சக்தி
சன.12,2016. செபம் வியத்தகு வேலைகளைச் செய்கின்றது மற்றும் பக்தியை மறந்து இதயம் கடினமடைவதைத் தடுக்கின்றது என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விசுவாசிகளின் செபம் திருஅவையை மாற்றுகின்றது, திருத்தந்தையர், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் ஆகிய நாம் திருஅவையை முன்னோக்கி நடத்தவில்லை, ஆனால் அவ்வேலையை புனிதர்கள் செய்கின்றார்கள் என்றும் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆலயத்தில் கடவுளிடம் குழந்தை வரம் கேட்டுப் புலம்பி கண்ணீர் சிந்திய அன்னா என்ற பெண், மது மயக்கத்தில் இவ்வாறு புலம்புகிறார் என்று அன்னாவை ஆலயக்குரு ஏலி, தவறாகக் கணித்தது பற்றிய இத்திருப்பலியின் முதல் வாசகத்தை(1சாமு.1:9-20) மையப்படுத்தி மறையுரையாற்றினார் திருத்தந்தை.
செபம் அற்புதங்களை ஆற்றுகின்றது, தங்களின் பக்தியை இழந்த கிறிஸ்தவர்களுக்கும், பொதுநிலையினரானாலும் சரி, ஆயர்கள், அருள்பணியாளர்களானாலும் சரி எல்லாருக்கும் செபம் புதுமைகளை நிகழ்த்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
நீதியின் சாம்பலில் பக்தி உணர்வை இழக்கிறோம், எனவே நாம் விசுவாச மனிதர்களாக மாற வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, அன்னா, தனது இதயத்தில் செபித்தார், அவரின் உதடுகள் மட்டுமே அசைந்தன, துயரத்தோடு, கண்ணீரோடு ஆண்டவரிடம் வரம் கேட்பது, விசுவாச மனிதரின் துணிச்சலைக் காட்டுகின்றது என்றும் கூறினார்.
புனிதர்கள், கடவுளால் அனைத்தையும் ஆற்ற இயலும் என்று நம்புவதற்குத் துணிச்சலைக் கொண்டிருந்தவர்கள் என்று கூறிய திருத்தந்தை, ஆண்டவரே, செபத்தில் நம்பிக்கை வைப்பதற்கு எங்களுக்கு வரம் தாரும் என்று செபித்து மறையுரையை நிறைவு செய்தார்.
மேலும், நாம் ஆண்டவரிடம் நம்மையே அர்ப்பணிக்கும்போது, நம்
வாழ்வுப் பாதையில் நாம் சந்திக்கும் அனைத்து இடர்களையும் நம்மால்
மேற்கொள்ள முடியும் என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர்
செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : “இரக்கம், கடவுளின் அடையாள அட்டை"
சன.12,2016. “இரக்கம், கடவுளின் அடையாள அட்டை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “கடவுளின் பெயர் இரக்கம் (The Name of God is Mercy)” என்ற தனது நேர்காணல் புத்தகத்தில் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய புத்தகத்தை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், இத்தாலிய நடிகரும் இயக்குனருமான Roberto Benigni ஆகிய இருவரும் உரோம் நகரில் பத்திரிகையாளர் கூட்டத்தில் இச்செவ்வாயன்று வெளியிட்டனர். 86 நாடுகளில் ஏறக்குறைய இருபது மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகம், இச்செவ்வாய் முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு ஜூலையில் பொலிவியா, பரகுவாய், ஈக்குவதோர் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் திரும்பிய பின்னர், ஒரு நாள் பிற்பகலில் La Stampa தினத்தாளின் வத்திக்கான் தொடர்பாளர் பத்திரிகையாளர் Andrea Tornielli அவர்கள் மூன்று ஒளி-ஒலிப் பதிவாளர்களுடன் சென்று, திருத்தந்தையிடம் நடத்திய நீண்ட நேர்காணல் இப்புதியப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
"கடவுளின் பெயர் இரக்கம்" என்ற இப்புத்தகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிலளித்த நாற்பது கேள்விகள் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை, இரக்கத்தை எப்படி புரிந்துகொள்கிறார் என்பதும், அவருடைய தனிப்பட்ட வாழ்வுக்கும், திருஅவைக்கும் இரக்கம் என்ன பொருளைத் தருகின்றது என்பதும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
Mondadori புத்தகக் குழுவின் தலைவர் Marina Berlusconi தலைமையில் இத்திங்கள் மாலை சாந்தா மார்த்தா இல்லம் சென்ற இப்புத்தகக் குழு, இத்தாலிய மொழியில் இதன் முதல் பிரதியை திருத்தந்தையிடம் வழங்கியது.
திருத்தந்தையிடம் வழங்கிய குழுவில், La Stampa தினத்தாளின் வத்திக்கான் தொடர்பாளர் பத்திரிகையாளர் Andrea Tornielli, Mondadori குழுவின் தலைமைச் செயலர் Ernesto Mauri, அதன் நிர்வாக இயக்குனர் Enrico Selva Codde, இந்நூலை அச்சிட்ட Piemme ஆகியோரும் இருந்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. Madaya, குற்றக்கும்பலுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பிணையல் நகரம்
சன.12,2016. சிரியாவின் Madaya நகரத்தில் மக்கள், அந்நகரத்திற்குள்ளேயே பிணையல் கைதிகளாக வாழ்கின்றனர் என்றும், ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் ஐ.எஸ். அரசின் உறுப்பினர்களால் அந்நகர மக்கள், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறினார் முதுபெரும் தந்தை Gregory III Laham.
சிரியா அரசுக்கும், புரட்சிப் படைகளுக்கும் இடையே சண்டை இடம்பெறும் Madaya
நகரத்தில் இன்னும் இருபதாயிரம் மக்கள் வாழ்கின்றனர் என்று ஊடகங்கள்
அண்மையில் வெளியிட்ட தகவல்கள் பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, அந்தியோக் மெல்கித்தே வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை 3ம் Laham அவர்கள், திருஅவை என்ற முறையில் அந்நகரோடு தங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிவித்தார்.
நிவாரணப் பொருள்களை அனுப்புவதும் ஆபத்தானது, ஏனென்றால், அவை குற்றக் கும்பல்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களிடம் சென்றடையும் என்றுரைத்த முதுபெரும் தந்தை 3ம் Laham அவர்கள், கடந்த ஜூலையிலிருந்து Madaya நகரம், அரசுப் படைகளின் கைவசம் உள்ளது என்றும் கூறினார்.
சிரியாவில் உதவிகள் சென்றடைவதற்கு கடினமாகவுள்ள பகுதிகளில் 45 இலட்சம் மக்கள் வரை வாழ்கின்றனர், இவர்களில் ஏறக்குறைய நான்கு இலட்சம் மக்கள், 15 ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.
ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி
5. Madayaவில் உடனடி மருத்துவ சிகிச்சைத் தேவையில் 400 பேர்
சன.12,2016. Madayaவில், மக்களின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்ததாய் இருக்கின்றது, மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக 400 பேர் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் தலைவர் Stephen O'Brien அவர்கள் கூறினார்.
இந்நகரில் பலர் பட்டினி போடப்பட்டு இறக்கின்றனர், மற்றவர்கள் அப்பகுதியை விட்டுத் தப்பிக்க முயற்சிக்கும்போது கொல்லப்படுகின்றனர் என்று ஐ.நா. அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த அக்டோபரிலிருந்து இந்நகர மக்கள் எந்த உதவியையுமே பெறாமல் இருக்கும்வேளை, இருபதாயிரம்
பேருக்கு ஒரு மாதத்திற்குப் போதுமான உணவுப்பொருள்களை 49 வாகனங்களில் ஐ.நா.
உணவு திட்ட அமைப்பு இத்திங்களன்று எடுத்துச் சென்றுள்ளது. இவற்றைத்
தொடர்ந்து, புரட்சியாளர்களின் கைவசம் உள்ள இரு நகரங்களுக்கு மற்ற வாகனங்கள் உணவுப்பொருள்களுடன் சென்றுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி
6. ஜெர்மனியில் குடியேற்றதாரரின் தாக்குதல்கள் சகித்துக்கொள்ள முடியாதவை
சன.12,2016.
ஜெர்மனியில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் குடிபெயர்ந்தவர்களால்
ஜெர்மன் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலியல்
தாக்குதல்கள் எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாதவை என்று ஜெர்மன்
ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
ஜெர்மனியின் Cologne பேராலயத்திற்கு வெளியே, புத்தாண்டைச் சிறப்பித்துக்கொண்டிருந்த இளம் பெண்களை, குடிபெயர்ந்தவர்கள் மனிதமற்ற முறையில் தாக்கியுள்ளனர் என்றுரைத்துள்ளார் ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவரும், Munich and Freising பேராயருமான கர்தினால் Reinhard Marx .
2015ம் ஆண்டில், 11 இலட்சம் குடிபெயர்ந்தவர்களை ஜெர்மனிக்குள் அனுமதித்த அந்நாட்டு சான்சிலர் Angela Merkel அவர்கள், இத்தாக்குதல்கள் குறித்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், ஜெர்மன் ஆயர் பேரவை இணையதளத்தில் இத்தாக்குதல்களுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் கர்தினால் Marx.
Cologne மற்றும் பிற முக்கிய நகரங்களில், குடிபெயர்ந்தவர்களை
அதிகமாக வைத்திருப்பது ஜெர்மன் சமுதாயத்திற்கு தொல்லை கொடுக்கின்றது
மற்றும் வருங்காலத்தில் மிகவும் விழிப்போடு செயல்பட வேண்டும் என்றும்
கூறியுள்ளார் கர்தினால் Marx.
இதற்கிடையே, இம்மாதத் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் குடிபெயர்ந்தவர்களை ஆஸ்ட்ரியாவுக்கு அனுப்பி வருகிறது ஜெர்மனி.
ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி
7. கொரியத் தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க WCC வேண்டுகோள்
சன.12,2016. வட கொரிய கம்யூனிச நாடு, ஹைட்ரஜன் அணுகுண்டுப் பரிசோதனையை நடத்தியதைத் தொடர்ந்து பதட்டநிலைகள் ஏற்பட்டுள்ளவேளை, கொரியத் தீபகற்பத்தில், பதட்டநிலைகளைக் குறைத்து, அமைதியை ஊக்குவிக்குமாறு, WCC உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் உலக சமுதாயத்தைக் கேட்டுள்ளது.
உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், நீதி மற்றும் அமைதித் திருப்பயணத்திற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளவேளை, மரணத்தை வருவிக்கும் இராணுவப் பதிலடி வழியாகப் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிப்பதை தவிர்த்து, நம்பிக்கையூட்டும் வேறு வழிகளில் ஈடுபடுமாறு கேட்டுள்ளார் WCC தலைவர் அருள்திரு Olav Fykse Tveit.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பிளவுண்டிருக்கும் கொரியத் தீபகற்பத்தில், உயர் இராணுவ அச்சுறுத்தலால் மக்கள் தொடர்ந்து பிரிக்கப்பட்டு உள்ளனர், அமைதி பற்றிய கண்ணோட்டமும் கனவும் அச்சுறுத்தப்பட்டே வருகின்றன என்றும் கூறியுள்ளார் Tveit.
வட கொரியா, சனவரி 5ம் தேதி ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையை நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
8. போர்ப் பகுதிகளில் 2 கோடிக்கு மேற்பட்ட சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை
சன.12,2016. போர் இடம்பெறும் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத சிறார், ஆயுதம் ஏந்திய குழுக்களில் சேர்க்கப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று எச்சரித்துள்ளது ஐ.நா.வின் யூனிசெப் குழந்தை நல நிறுவனம்.
போர்
இடம்பெறும் பகுதிகளில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட சிறார் பள்ளிக்குச்
செல்லவில்லை என்றுரைத்துள்ள யூனிசெப் நிறுவனத்தின் கல்வி இயக்குனர் Jo Bourne அவர்கள், அவசரகாலச் சூழல்களில் வாழும் சிறாரக்கு கல்வி வழங்கப்படவில்லையெனில், ஒரு தலைமுறைச் சிறார் எவ்விதத் திறமையுமின்றி வளர்வார்கள் என்று கூறியுள்ளார்.
தங்களின் நாடுகளுக்கும், பொருளாதாரத்திற்கும் வழங்குவதற்குத் தேவையான திறமைகள் இன்றி இச்சிறார் வளர்வார்கள் என்றும், சண்டை முடிந்த பிறகே பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் கூறினார் Bourne.
தென் சூடானில் ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளி செல்லும் வயதுடைய 51 விழுக்காட்டுச் சிறாரும், நைஜரில் 47 விழுக்காட்டுச் சிறாரும் பள்ளிக்குச் செல்லவில்லை என்று ஐ.நா.கூறுகிறது.
ஆதாரம் : IANS /வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment