Friday, 8 January 2016

செய்திகள் - 08.01.16

செய்திகள் - 08.01.16
------------------------------------------------------------------------------------------------------

1. கடவுளன்பை ஏற்பது, நம் பாவங்களை அற்றுப்போகச் செய்யும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி

3. பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு கிறிஸ்தவர்கள் அஞ்சலி

4. புதிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு திருஅவை எதிர்ப்பு

5. கத்தார் கைதிகள் மன்னிப்புக்கு பிலிப்பைன்ஸ் ஆயர் பாராட்டு

6. ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆயர்கள் ஆதரவு

7. புலம் பெயர்ந்தவர்கள் சுமையில் லெபனான்

8. தென்கிழக்கு ஆசியாவில் ஒளிமயமாகத் தெரியும் இந்தியா

------------------------------------------------------------------------------------------------------

1. கடவுளன்பை ஏற்பது, நம் பாவங்களை அற்றுப்போகச் செய்யும்

சன.08,2016. கடவுளின் அன்பைத் தழுவிக்கொள்வது, நம் பாவங்கள் எவ்வளவாக இருந்தாலும், அவை அனைத்தையும் அற்றுப்போகச் செய்யும் சக்தியை கொண்டிருக்கின்றது என்று இவ்வெள்ளி காலைத் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்து அன்பும் கடவுளிடமிருந்து வருபவை அல்ல, ஏனென்றால் கடவுளே உண்மையான அன்பு என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பாவிகள் என்பது கடவுளுக்கு ஒரு பொருட்டல்ல, ஆனால் அவர் அன்பு கூர்கிறார், அவர் எப்போதும் நம்மை முதலில் அன்பு கூர்கிறார் என்றும் கூறினார்.
இவ்வெள்ளி  காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் முதல் வாசகமான, திருத்தூதர் யோவான் (1 யோவான் 5,5-13) அவர்களின் முதல் திருமுகத்திலிருந்து தனது மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு என்ற சொல்லின் பல்வேறு அர்த்தங்கள் பற்றியும், கிறிஸ்தவ வாழ்வுக்கு மிகவும்  முக்கியமான கடவுளன்பு, பிறரன்பு ஆகிய இரு கட்டளைகள் குறித்தும் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு என்ற சொல், அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதைப் பயன்படுத்தும்போது, உண்மையிலேயே அதற்கு அர்த்தம் என்னவென்று நாம் அறிவதில்லை, உண்மையில் அன்பு என்றால் என்ன, உண்மையான அன்பு எங்கே வெளிப்படுகின்றது என்ற கேள்விகளையும் தன் மறையுரையில் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வோர் அன்பும், கடவுள் என்று சொல்லாமல், கடவுளே அன்பு என்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டத் திருத்தந்தை, கடவுள் நம்மை முதலில் அன்பு கூர்கிறார் என்பதற்கு நற்செய்தியில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன என்றும் கூறினார்.
நம் மனதில் எதையோ வைத்திருக்கும்போது கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதற்கு நாம் விரும்புகிறோம், ஆனால் நம்மை மன்னிப்பதற்கு கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார், மகளே, மகனே நான் உன்னை அன்பு கூர்கிறேன் என்று சொல்வதற்கு, நம்மை அணைத்துக் கொள்வதற்கு, நம் ஒவ்வொருவருக்காகவும் காத்திருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் ஆண்டவரிடம் சென்று, ஆண்டவரே, நான் உம்மை எவ்வளவு அன்பு கூர்கிறேன் என்று உமக்குத் தெரியும், ஆயினும் நான் மோசமான பாவி என்று சொல்ல வேண்டும், கடவுளும், காணாமல்போய் திரும்பி வந்த மகனிடம் தந்தை செய்தது போன்று, நாம் சொல்வதை முடிக்க விடாமல், தமது அன்பால் நம்மை அமைதிப்படுத்துகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி

சன.08,2016. உலகம், வசதியிலும் தன்னலத்திலும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, அது, அந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுவதற்கு உதவ வேண்டியது நம் கிறிஸ்தவ மறைப்பணியாகும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கு உதவுவதற்கென, வத்திக்கான் நாட்டு நிர்வாகம் நடத்தும் பரிசு சீட்டு குலுக்கலுக்கு, வருகிற பிப்ரவரி முதல் தேதி வரை பரிசு சீட்டை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் மருந்தகம், தபால் நிலையம், உணவுப்பொருள்கள் கடை, வத்திக்கான் அருங்காட்சியகத்தின் புத்தகக் கடை போன்ற இடங்களில் இந்தப் பரிசு சீட்டை பெறலாம்.
திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கு உதவுவதற்கென நடத்தப்படும் இந்த குலுக்கல் பரிசு சீட்டு நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ள அனைவருக்கும் நன்றி கூறியுள்ள அதேவேளை, இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் eventi@scv.va என்ற முகவரியோடு தொடர்பு கொள்ளலாம் என்று வத்திக்கான் நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுவரை இருமுறை நடைபெற்ற இந்தப் பரிசு சீட்டு குலுக்கல், இவ்வாண்டு, மூன்றாவது முறையாக நடைபெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு கிறிஸ்தவர்கள் அஞ்சலி

சன.08,2016. பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள், இந்தியர் ஒவ்வொருவரின் வாழ்வைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தவர்கள் என்று போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் பாராட்டிப் பேசினார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ஏழு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய செப வழிபாட்டில் உரையாற்றிய பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், உலகில் பயங்கரவாதம் முடிவுக்கு வரவேண்டுமென்று செபிப்போம் எனவும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.
சனவரி 3ம் தேதி நடத்தப்பட்ட இத்தாக்குதலில் உயிரிழந்த ஏழு இராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து, மெழுகுதிரிகளை கையில் ஏந்தி இச்செப வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா போன்ற அமைதி மற்றும் நல்லிணக்கத்தைத் தேடும் நாடுகளைப் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குகின்றனர் என்றுரைத்த பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக விழிப்புடன் இருப்பதற்கு நாட்டில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு சரியான நேரம் வந்துள்ளது என்றும் கூறினார். 
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியை ஒட்டிய எல்லையில், காஷ்மீர் அளவுக்கு பலத்த பாதுகாப்பு இருக்காது என்பதால், பயங்கரவாதிகள் அப்பகுதியை தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம்' என, அங்குப் பணிபுரிந்த, முன்னாள் இராணுவ மேஜர் வி.வி.நாராயணன் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி

4. புதிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு திருஅவை எதிர்ப்பு

சன.08,2016. இலங்கையின் புதிய துறைமுக நகரத் திட்டம், மீனவர் சமூகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி, அந்நாட்டின் அருள்பணியாளர், அருள்சகோதரிகள் உட்பட பொதுநிலை குழுவினர் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய கொழும்பு துறைமுக நகரத் திட்டம், மீனவக் குடும்பங்களை இடம்பெயர வைக்கும், கடல் பகுதியில் மீன்கள் உற்பத்திக்கு கேடு வருவிக்கும், பவளப் பாறைகளுக்குச் சேதத்தையும், கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பையும், மக்களின் வாழ்வாதாரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தற்போது அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அரசின் சுற்றுச்சூழல் குறித்த அறிக்கையின் அடிப்படையில் அது மீண்டும் தொடங்கப்படவுள்ளதால், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் திருஅவை உறுப்பினர்களும் இணைந்து, அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அரசின் இத்திட்டம் குறித்துப் பேசிய கொழும்பு அருள்பணியாளர் Sarath Iddamalgoda அவர்கள், கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் குடும்பங்கள் இதனால் இடம்பெயரக் கூடும் என்று தெரிவித்தார். 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி

5. கத்தார் கைதிகள் மன்னிப்புக்கு பிலிப்பைன்ஸ் ஆயர் பாராட்டு

சன.08,2016. கத்தார் நாட்டில் பத்து பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் உட்பட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஆயர் ஒருவர் தனது பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார். 
கத்தார் இளவரசர் Sheikh Tamim bin Hamad Al Thani அவர்களின் கனிவும், பிறரன்பும், நன்மைத்தனமும் நிறைந்த இச்செயலுக்கு, பிலிப்பைன்ஸ் திருஅவை நன்றி தெரிவிக்கின்றது என்று, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தவர் ஆணைக்குழுத் தலைவரான ஆயர் Ruperto Santos அவர்கள் கூறியுள்ளார்.
இந்த இரக்கத்தின் ஆண்டில் இரக்கமும், பரிவன்பும் நிறைந்த செயல்களை நாங்கள் அனுபவித்துள்ளோம் என்றும், மனித உயிர்கள், தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் ஆயர் Santos அவர்கள் கூறியுள்ளார்.
கத்தாரில் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பிலிருந்து பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் பாடம் கற்க வேண்டுமென்றும், தாங்கள் பணியாற்றும் நாடுகளின் சட்டங்களுக்கும், மரபுகளுக்கும் ஏற்ப மிகவும் கட்டுக்கோப்பான வாழ்வு வாழ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஆயர் Santos.
கத்தாரில், 2015ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட தேசிய தினத்தை முன்னிட்டு, கைதிகளுக்கு இம்மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று, கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறியது. கத்தாரில் ரம்ஜான் பண்டிகை புனித மாதத்திலும், தேசிய தினத்தன்றும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது. ரம்ஜான் மரபுப்படி, 2015ம் ஆண்டு ஜூலையில் 12 பிலிப்பைன்ஸ் பணியாளர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. 

ஆதாரம் : CBCP/வத்திக்கான் வானொலி

6. ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆயர்கள் ஆதரவு

சன.08,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசுத்தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரசுத்தலைவர் ஒபாமா அவர்களின் இந்நடவடிக்கையை வரவேற்று தனது blogல் செய்தி வெளியிட்டுள்ள டல்லஸ் மறைமாவட்ட ஆயர் Kevin Joseph Farrell அவர்கள்,  துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்த வெட்கத்துக்குரிய சட்டங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, தற்போது ஒரு மனிதருக்காவது துணிச்சல் வந்துள்ளதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி கண்காட்சிகள் மற்றும் இணையத்தில் துப்பாக்கிகளை விற்பதற்கு தற்போது விதிவிலக்கு பெற்றுள்ளவர்கள் உட்பட, துப்பாக்கி விற்பனையாளர்கள் அனைவரும், துப்பாக்கி வாங்குபவர் குறித்த விபரங்களை அறிந்திருக்க வேண்டும், துப்பாக்கிகள் வாங்குவதற்குத் தகுதியற்றவர்கள் பற்றிய விபரங்களை மாநிலங்கள் வழங்கும் என்று,   அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் சனவரி 5, கடந்த செவ்வாயன்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில், துப்பாக்கியால் இடம்பெறும் வன்முறையை ஒழிப்பதற்கென எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆயர் Farrell அவர்கள், பொது இடங்களில் ஆயுதங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படுவது இதனால் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித வளர்ச்சி ஆணைக்குழுத் தலைவர் Miami பேராயர் Thomas Wenski அவர்கள், அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை ஒழிப்பதற்கு உதவும் அறிவுப்பூர்வமான கொள்கைகள் எடுக்கப்படுமாறு ஆயர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்,   அரசுத்தலைவர் ஒபாமா அவர்களின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் அவை தீவிரமாகச் செயல்படுத்தும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் துப்பாக்கி தொடர்புடைய முப்பதாயிரம் இறப்புகள் இடம்பெறுகின்றன.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி

7. புலம் பெயர்ந்தவர்கள் சுமையில் லெபனான்

சன.08,2016. லெபனானில் வாழும் மொத்த மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாக, லெபனான் காரித்தாஸ் தலைவர் அருள்பணி Paul Karam அவர்கள் தெரிவித்தார்.
லெபனானில் புலம்பெயர்ந்தவர் முகாம்கள் என்று தனியாக இல்லை, ஆனால் சில சிரியா மக்கள் தாங்களாகவே குடியிருப்புக்களை அமைத்துள்ளனர், இன்னும் சிலர் அடுக்கு மாடி கட்டடங்களில் வாடகைக்கு வாழ்கின்றனர், மேலும் சிலர் கைவிடப்பட்ட கட்டடங்களில் வாழ்கின்றனர் என்று, CNS செய்தி நிறுவனத்திடம் கூறினார் அருள்பணி Paul Karam .
கடந்த நவம்பரில் ஐ.நா. புலம்பெயர்ந்தவர் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, ஏறக்குறைய 11 இலட்சம் சிரியா நாட்டினர் லெபனானில் பதிவு செய்துள்ளனர், ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும், இந்த ஐ.நா. அமைப்பில் பதிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது லெபனானில் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்த மக்கள் உள்ளனர், அதோடு, இருபதாயிரம் ஈராக் நாட்டுப் புலம்பெயர்ந்த மக்களும் வாழ்கின்றனர் என்று கூறினார் அருள்பணி Paul Karam .
சிரியாவில் சண்டை தொடங்கியதிலிருந்து, லெபனானில், குறைந்தது 65 ஆயிரம் குழந்தைகள் சிரியா பெற்றோருக்குப் பிறந்தனர், இக்குழந்தைகள் எந்தச் சான்றிதழும் இல்லாமல், சொந்த நாடின்றி உள்ளனர். 

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி

8. தென்கிழக்கு ஆசியாவில் ஒளிமயமாகத் தெரியும் இந்தியா

சன.08,2016. கடந்த 2015ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4 விழுக்காடு குறைந்துள்ளது, எனினும், இது இந்த 2016ம் ஆண்டில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, உலக வங்கியின் புதிய அறிக்கை கூறுகிறது.
அனைத்துலக பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கடந்த ஆண்டில், வளரும் நாடுகளில் பரவலாக காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலை, ஐ.நா.வின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி குறைவாக இடம்பெற்ற வளரும் நாடுகளில் உலகின் ஏழைகளில் நாற்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் என்றுரைத்த உலக வங்கித் தலைவர் Jim Yong Kim அவர்கள், வளரும் நாடுகள்  பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளார்.
எனினும், தென்கிழக்கு ஆசியாவில் ஒளிமயமாகத் தெரியும் இந்தியாவின் பொருளாதாரம், வரும் ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பாகவே இருக்கும் என்றும், உலக  அளவில் முக்கியப் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.
2016-17ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.8 விழுக்காடாக இருக்கும், இது சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...