செய்திகள்-11.01.16
------------------------------------------------------------------------------------------------------
1. ஒவ்வோர் உண்மையான மதமும், அமைதியை ஊக்குவிப்பதற்குத் தவறாது
2. பெற்றோர் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மரபுரிமைச் செல்வம் விசுவாசம்
3. திருமுழுக்குக்கு ஒவ்வொரு நாளும் சாட்சியாக வாழ திருத்தந்தை அழைப்பு
4. திருத்தந்தையின் சனவரி, பிப்ரவரி மாதத் திருவழிபாடுகள்
5. “கடவுளின் பெயர் இரக்கம்” புதிய புத்தகம் சனவரி 12ல் வெளியீடு
6. உலக குடிபெயர்ந்தவர் நாள்-பிரித்தானிய ஆயரின் செய்தி
7. 36,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள்
8. River blindness நோய்க்கு 2020ல் தடுப்புமருந்து தயார்
------------------------------------------------------------------------------------------------------
1. ஒவ்வோர் உண்மையான மதமும், அமைதியை ஊக்குவிப்பதற்குத் தவறாது
சன.11,2016. ஒவ்வோர் உண்மையான மதமும், அமைதியை ஊக்குவிப்பதற்குத் தவறாது என்றும், உலகின்
எல்லைவரை அமைதியின் செய்தியைக் கேட்கச் செய்வதற்கான தனது முயற்சிகளை
திருப்பீடம் ஒருபோதும் நிறுத்திக் கொள்ளாது என்றும் இத்திங்களன்று கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
அண்மையில் நாம் சிறப்பித்த, கிறிஸ்மஸ் பெருவிழாவில், அமைதியின் அரசர், வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன் என்றுமுள தந்தை (எசா.9:5) என்றெல்லாம் பெயரிடப்பட்டுள்ள குழந்தையின் பிறப்பை நாம் தியானித்தோம், இந்த விழா, அமைதியை ஊக்குவிக்க வேண்டிய நமது பொறுப்புணர்வை நினைவுபடுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை.
திருப்பீடத்துக்கான
அரசியல் தூதுவர்களை இத்திங்களன்று அப்போஸ்தலிக்க மாளிகையில் சந்தித்து
புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு நீண்ட உரையாற்றிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், குடிபெயர்ந்த மக்கள் பிரச்சனை, தனது இவ்வாண்டு திருத்தூதுப்பயணம், ஏழைகள் மற்றும் துன்புறுவோர்க்கு உதவி ஆகிய மூன்று தலைப்புக்களில் பேசினார்.
பல இதயங்களில் காணப்படும் இறுகியப் புறக்கணிப்புகள், இந்த யூபிலி ஆண்டில், கடவுளின் விலைமதிப்பற்றக் கொடையாகிய இரக்கத்தின் கனிவால் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை.
பெருமளவான மக்களின் அண்மைக் குடிபெயர்வு, ஐரோப்பிய விழுமியங்களுக்கும், மரபுகளுக்கும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது, ஆயினும் ஐரோப்பியக் கண்டம் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, புதிதாக வரும் குடியேற்றதாரரை ஏற்க வழி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் வெளியிட்டார் திருத்தந்தை.
குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, குறிப்பாக, மத்திய
கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலிருந்து வெள்ளமென வரும் மக்கள் ஐரோப்பாவுக்கு
பெரும் சுமையாக உள்ளனர் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இம்மக்களின் சொந்த நாடுகளுடன் உரையாடலைத் தொடங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இன்றையக் குடும்பங்கள் சந்திக்கும் எண்ணற்றச் சவால்களையும் குறிப்பிட்டத் திருத்தந்தை, குடும்பங்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் நிலையான அர்ப்பணம் குறித்த பயம் பரவலாக காணப்படுகின்றது, இதனால் இளையோரும், வயதானவர்களும்
அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார். கடந்த நவம்பரில்
ஆப்ரிக்காவுக்கு மேற்கொண்ட திருத்தூதுப்பயணம் பற்றியும் பகிர்ந்து கொண்டார்
திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீடத்துடன் 180 நாடுகள் அரசியல் உறவைக்
கொண்டிருக்கின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. பெற்றோர் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மரபுரிமைச் செல்வம் விசுவாசம்
சன.10,2016. நம் விசுவாசம், திருமுழுக்கு வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறைக்கு, காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மாபெரும் மரபுரிமைச் செல்வம் விசுவாசமே என்று, இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கானில் அமைந்துள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, 13 ஆண் மற்றும் 13 பெண் குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறையுரையில் இவ்வாறு கூறினார்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மறையுரையை வழங்காமல், அந்நேரத்தில் தனது சிந்தனைகளைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு பிறந்து நாற்பது நாள்கள் சென்று, மரியாவும் யோசேப்பும் அவரை கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு ஆலயத்திற்கு எடுத்துச் சென்றனர், ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவான இன்று, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் திருமுழுக்குப் பெறுவதற்காக கொண்டு வந்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்தினார்.
நம் விசுவாசம், திருமுழுக்கு வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், ஆண்டுகள் கடக்கும்போது, இக்குழந்தைகள் பிறரில், அதாவது, இப்போதைய பெற்றோரின் பேரக்குழந்தைகள் வாழ்வில் கவனம் செலுத்துகின்றனர், அவர்களும் இதே விசுவாசத்தைக் கேட்பார்கள் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பெற்றோரே, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வழங்கக்கூடிய மாபெரும் மரபுரிமைச் செல்வம் விசுவாசம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள், இதை இழந்துவிடாதீர்கள், இந்த மரபுரிமையைப் பேணி பாதுகாத்து வாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருமுழுக்குக்கு ஒவ்வொரு நாளும் சாட்சியாக வாழ திருத்தந்தை அழைப்பு
சன.11,2016. ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவான இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு விசுவாசியும் தான் பெற்ற திருமுழுக்குக்கு ஒவ்வொரு நாளும் சாட்சியாக வாழ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
திருமுழுக்கு அருளடையாளம், வாழ்வில் ஒரேயொருமுறைதான் பெறப்படுகிறது, இது, பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய புதிய வாழ்வாக இருப்பதால், ஒவ்வொரு நாளும், இதற்குச் சாட்சியாக வாழ வேண்டும் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதமற்றச் சூழல்களில் வாழ்வோர், மற்றும் இருள் நிறைந்தப் பாதைகளில் நடப்பவர்களுக்கு இப்புதிய வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவும், இப்புதிய ஒளியை வழங்கவும் விசுவாசிகள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் 26 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றிய பின்னர், நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வருள் அடையாளத்தை அண்மையில் பெற்றுள்ளக் குழந்தைகளுக்கும், அதனைப் பெற்றுள்ள மற்றும் அதற்காகத் தயாரித்து வரும் இளவயதினர், வயதுவந்தோர்க்கும் சிறப்பு ஆசிரை வழங்குவதாகக் கூறினார்.
திருமுழுக்கின் பொருள் மற்றும் அதைப் பெற்றுள்ளவர்களின் கடமைகள் குறித்து மூவேளை செப உரையில் விளக்கியத் திருத்தந்தை, ஒவ்வொருவரும் தாங்கள் திருமுழுக்குப் பெற்ற தேதியைப் பார்க்குமாறும், இத்தேதியே, கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கும், திருஅவை மற்றும் புதிய மனித சமுதாயத்தின் உறுப்பினர்களாவதற்கும் நம்மை அர்ப்பணித்த நாள், இயேசுவோடு நம்மை இணைத்துக்கொண்ட நாள் என்று எடுத்துரைத்தார்.
திருமுழுக்கு நாளில் முதல் முறையாக நாம் தூய ஆவியாரைப் பெறுகிறோம், அவர் நம் இதயங்களை முழு உண்மைக்குத் திறக்கிறார், வாழ்வின் இன்னலான பாதையிலும், பிறரோடு அன்பு மற்றும் ஒருமைப்பாட்டின் மகிழ்வுப் பாதையிலும் நம்மை வழிநடத்துகிறார், தூய ஆவியார், கடவுளின் மன்னிப்பின் கனிவை வழங்குகிறார், தூய ஆவியாரை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு அவர் வாழ்வளிக்கும் பிரசன்னமாக இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தையின் சனவரி, பிப்ரவரி மாதத் திருவழிபாடுகள்
சன.11,2016. 2016ம் ஆண்டு சனவரி, பிப்ரவரி மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாடுகள் குறித்த விபரங்களை, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு குய்தோ மரினி.
புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25, திங்கள் மாலை 5.30 மணிக்கு உரோம் புனித பவுல் பசிலிக்காவில் மாலைத் திருப்புகழ்மாலை, பிப்ரவரி 2, செவ்வாய் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவில் துறவியர் ஆண்டின் நிறைவு வழிபாடு, பிப்ரவரி 10, திருநீற்றுப் புதனன்று மாலை 5 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி, இரக்கத்தின் மறைப்பணியாளரை பணிக்கு அனுப்பும் நிகழ்வு, பிப்ரவரி 12 முதல் 18 வரை மெச்கிகோ திருத்தூதுப்பயணம், தூய பேதுருவின் தலைமைப்பீட விழாவான பிப்ரவரி 18ம் தேதி வத்திக்கான் பசிலிக்காவில் காலை 10.30 மணிக்கு திருப்பலி, திருப்பீடத் தலைமையக யூபிலி ஆகியவை திருத்தந்தையின் திருவழிபாடு நிகழ்வுகள் ஆகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. “கடவுளின் பெயர் இரக்கம்” புதிய புத்தகம் சனவரி 12ல் வெளியீடு
சன.11,2016. “கடவுளின் பெயர் இரக்கம் (The Name of God is Mercy)” என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்று 86 நாடுகளில் ஏறக்குறைய இருபது மொழிகளில் சனவரி 12, இச்செவ்வாயன்று வெளியிடப்படவுள்ளது.
இப்புதியப் புத்தகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் பத்திரிகையாளர் Andrea Tornielli அவர்களுக்கு அளித்த பல நேர்காணல்களில் வெளிப்பட்ட, கடவுளின் இரக்கம் பற்றிய கண்ணோட்டங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இப்புதியப் புத்தகத்தில் அடங்கியுள்ள பல முக்கியக் கூறுகளை, இதன் வெளியீட்டாளர் Piemme அவர்கள், இப்புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னரே வெளியிட்டுள்ளார்.
தூய பேதுருவைப் போன்று, திருத்தந்தைக்கும் இரக்கம் தேவைப்படுகின்றது, கடவுளின் இரக்கம் தேவைப்படும் ஒரு மனிதர் திருத்தந்தை, என்று தனது நீண்ட நேர்காணலில் திருத்தந்தை கூறியிருப்பது இப்புத்தகத்தில் உள்ளது.
தூயவர்கள் பேதுருவும் பவுலும் கைதிகளாக இருந்தார்கள் என்று பொலிவியா நாட்டில் பால்மசோலா கைதிகளிடம் தான் கூறியதாகவும், சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையிலுள்ள கைதிகளோடு தான் சிறப்பு உறவு கொண்டிருப்பதாகவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
Albino Luciani என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் எழுத்துக்கள் தன்னை மிகவும் ஈர்த்தன என்றும், சில காரியங்கள், வெண்கலத்திலும், பளிங்கிலும் வடிக்கப்படவில்லை, ஆனால் அவை தூசியில் வடிக்கப்பட்டுள்ளன என்பதால் கடவுள் என்னைத் தேர்ந்துகொண்டார் என்று திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், திருத்தந்தையாவதற்கு முன்பே ஒரு மறையுரையில் கூறியிருக்கிறார், இத்திருத்தந்தை தன்னை தூசி என்று அழைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Miserando atque eligendo என்ற தனது ஆயர் இலச்சினை குறித்தும், இளம் வயதில் கடவுளின் இரக்கத்தை அனுபவித்தது குறித்தும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை பாவத்தைக் கண்டிக்கிறது, பாவியிடம் இரக்கம் காட்டுகின்றது என்றும் கூறியுள்ளார்.
பாவத்திற்கும் ஊழலுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் குறித்தும் தனது நேர்காணலில் விளக்கியுள்ள திருத்தந்தை, ஊழல் மனிதர் தனது பாவங்களை ஏற்பதற்குரிய தாழ்மைப் பண்பு இல்லாமல் இருக்கிறார் என்றும், இத்தகைய மனிதர் மன்னிப்புக் கேட்பதற்கு சோர்வடைகிறார், முடிவில் தான் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்ற முடிவுக்கும் வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
150 பக்கங்கள் அடங்கிய இந்தப் புதிய புத்தகத்தில், திருஅவை கேட்பாடுகளைப் பின்பற்றாதவர்களை ஒதுக்கி வைக்காமலும், கண்டனம் செய்யாமலும், காயமடைந்துள்ள
மனித சமுதாயத்திடம் பரிவன்புள்ள மேய்ப்பர்களாக வாழுமாறு கத்தோலிக்கத்
தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தீர்ப்பிடுவதற்கு நான் யார் என்ற
கேள்வியை, "கடவுளின் பெயர் இரக்கம்" என்ற புத்தகத்தில் அடிக்கடி கேட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. உலக குடிபெயர்ந்தவர் நாள்-பிரித்தானிய ஆயரின் செய்தி
சன.11,2016.
அடுத்த சில ஆண்டுகளில் இருபதாயிரம் சிரியா நாட்டு புலம்பெயர்ந்த மக்களை
குடியமர்த்த முயற்சிக்கும் பிரித்தானிய அரசுடன் சேர்ந்து உழைப்பதற்கு
அந்நாட்டுத் திருஅவை முன்னுரிமை கொடுக்கின்றது என்று, பிரித்தானிய ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தவர் ஆணைக்குழுத் தலைவர் ஆயர் Patrick Lynch அவர்கள் கூறினார்.
இம்மாதம் 17ம் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக குடிபெயர்ந்தவர் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, Southwark துணை ஆயர் Patrick Lynch அவர்கள், இந்த உலக நாளுக்கு திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியின் முக்கிய கூறுகளையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இரக்கத்தின் நற்செய்தி வழியாக குடிபெயர்ந்தவர் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இந்த அழைப்பு, குடிபெயர்ந்த மக்களின் துன்பங்களை உணர்ந்து, அவர்களின் மாண்பையும் உரிமைகளையும் மதிப்பதற்கு வலியுறுத்துகின்றது என்றும் ஆயரின் செய்தி கூறுகிறது.
Calaisலுள்ள குடிபெயர்ந்த மக்களின் பிரச்சனைக்கு, பிரான்சும் பிரித்தானியாவும் இணைந்து தீர்வு காணுமாறு ஆயர் தனது செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி
7. 36,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள்
சன.11,2016. எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36,000
ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் வரைந்த அற்புதமான
ஓவியங்களை பிரான்ஸ் தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள Ardeche பகுதியில் Chauvet என்ற பழங்கால குகைகளை ஆய்வாளர்கள் கடந்த 1994ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.
ஏறக்குறைய 40,000
ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
எரிமலைகள் வெடித்திருக்க வேண்டும். இதனை இந்த சுற்றுப்பகுதியில் வாழ்ந்த
பழங்கால மக்கள் கண்டுபிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்கால மனிதர்கள் இதுபோன்ற குகைகளில் தங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் தினமும் பார்க்கும் விலங்குகளை அங்குள்ள சுவற்களில் வரைந்து வருவது அவர்களின் பொழுது போக்காகும்.
இவ்வாறு நீளமான தந்தங்கள் உடைய யானைகள், புலிகள், சிங்கம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களை ஓவியமாக வரைந்துள்ளனர்.
அதே சமயம், இந்த குகைப்பகுதியில் எரிமலை வெடித்ததற்கான அடையாளங்களும் அப்படியே உள்ளன.
வரலாற்று
சிறப்பு வாய்ந்த இந்தக் கண்டுபிடிப்புகளை பாதுகாக்க பிரான்ஸ் ஆய்வாளர்கள்
குகைகளுக்கு அருகிலேயே ஒரு மிகப்பெரிய தொல்பொருள் ஆய்வு மையம் ஒன்றை கட்டி
முடித்துள்ளனர்.
ஏறக்குறைய
ஐந்து கோடி யூரோ செலவில் முடிக்கப்பட்டுள்ள இந்த மையம் வருகின்ற ஏப்ரல்
10ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என்றும், உலகம்
முழுவதிலிருந்து ஏறக்குறைய மூன்று இலட்சத்திலிருந்து நான்கு இலட்சம் வரை
சுற்றுலாப் பயணிகள் இந்த குகை ஓவியங்களை கண்டு களிப்பார்கள் என்றும்
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : தமிழ்வின்/வத்திக்கான் வானொலி
8. River blindness நோய்க்கு 2020ல் தடுப்புமருந்து தயார்
சன.11,2016. உலக அளவில் ஒரு கோடியே எழுபது இலட்சம் மக்களைப் பாதித்துள்ள River blindness என்ற
ஒருவகை ஒட்டுண்ணிப் புழுவால் ஏற்படக்கூடிய கண்பார்வையிழப்பு நோய்க்கு
எதிரான தடுப்பு மருந்து 2020ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று
அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நோயை உருவாக்கக்கூடிய மூன்று முக்கிய மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளதாகவும், 2020ம்
ஆண்டளவில் பாதுகாப்பு சோதனைகளுக்காக இந்த நோய் தடுப்பு மருந்துகளில் ஒன்று
தயாராகிவிடும் எனவும் அறிவியளாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் ஆற்றுப்
பக்கம் காணப்படும் ஒருவகை ஒட்டுண்ணிப் புழுக்களால் தொற்றக்கூடிய இந்நோயால்
பாதிக்கப்படுபவரில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் மத்திய மற்றும்
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
2025ம்
ஆண்டளவில் அதன் பயன்பாடு பற்றிய சோதனைகளுக்காக இந்த மருந்து தயாராகவிடும்
என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நோயால் பாதிக்கப்படுபவரில் ஏறக்குறைய
பத்து விழுக்காட்டினருக்கு கண்ணில் பாதிப்பும், ஒரு விழுக்காட்டினருக்குப் பார்வையிழப்பும், எழுபது விழுக்காட்டினருக்கு கடும் தோல் நோய்களும் ஏற்படுகின்றன.
ஆதாரம் : பிபிசி /வத்திக்கான் வானொலி