Friday, 21 August 2015

செய்திகள் - 21.08.15

செய்திகள் - 21.08.15
------------------------------------------------------------------------------------------------------

1. கொலம்பிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் திருப்பீடத்தின் பார்வையாளர்

2. அசிசி நகரில் இரண்டாவது பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம்

3. மறைபரப்புப் பணிக்கு தாராளமாக உதவுங்கள், சுவிட்சர்லாந்து ஆயர்கள்

4. இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காரித்தாஸ் உதவி

5. பங்களாதேஷில் சிறார் கொலைகளுக்கு நீதி கேட்டு கிறிஸ்தவர்கள்

6. பாகிஸ்தானில் தெய்வநிந்தனை கைதுகளுக்கு மதத் தலைவர்கள் கண்டனம்

7. மகதலா மரியா ஊரில் இயேசு போதித்த தொழுகைக்கூடம் கண்டுபிடிப்பு

8. உலகில் சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் விமான நிலையம்
------------------------------------------------------------------------------------------------------

1. கொலம்பிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் திருப்பீடத்தின் பார்வையாளர்

ஆக.21,2015. "தினமும் நற்செய்தியை வாசிப்பது, நாம் தன்னலத்தினின்று வெளியேறவும், மிகுந்த அர்ப்பணத்தோடு நம் ஆசிரியராம் இயேசுவைப் பின்செல்லவும் நமக்கு உதவுகின்றது" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
@Pontifex  என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் ஏறக்குறைய எல்லா நாள்களிலும் ஒன்பது மொழிகளில் சிந்தனைகள் வெளியிடப்படுகின்றன. 
மேலும், கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானாவில் நடைபெற்றுவரும் கொலம்பிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் திருப்பீடத்தின் பார்வையாளராக கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவரைப் பரிந்துரை செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கொலம்பியாவின் Tunja பேராயர் Luis Augusto Castro Quiroga அவர்களை இப்பேச்சுவார்த்தைகளுக்குப் பரிந்துரை செய்துள்ள திருத்தந்தை, இவ்வழியாக கொலம்பியாவின் அமைதி நடவடிக்கைகளுக்குத் தான் ஆதரவு வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.
தான் பரிந்துரைத்துள்ள நபர், கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக்குழுவுக்கும் ஏற்புடையவராய் இருப்பார் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் ஆயுதம் தாங்கிய மோதல்களில், இதுவரை 2,20,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 25,000த்திற்கும் அதிகமானோர் தலைமறைவாகியுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

2. அசிசி நகரில் இரண்டாவது பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம்

ஆக.21,2015. அசிசி நகரில், பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம் இரண்டாவது முறையாக வருகிற செப்டம்பர் 25, 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறும் என்று திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள் அறிவித்துள்ளார்.
வருகிற செப்டம்பரில் அசிசி நகரில் நடைபெறும் பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் ரவாசி அவர்கள், சந்தேகம், அச்சம், மோதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில் மனித சமுதாயத்திற்கு உரையாடல் மிகவும் இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.
இவ்வாண்டு நடைபெறும் இந்தப் புறவினத்தார் மன்றம், மனிதர் என்ற தலைப்பில் இடம்பெறும் என்றும், மத நம்பிக்கையாளர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் ஆகிய இரு குழுக்களுக்கிடையே உரையாடலும், இக்குழுவினர் இறைவனை எப்படிப் பார்க்கின்றனர் என்பது பற்றிய பகிர்வுகளும் இடம்பெறும் என்றும் கர்தினால் ரவாசி அவர்களின் அறிக்கை கூறுகின்றது.
இந்நாள்களில் கருத்தரங்குகள், பயிற்சிப் பாசறைகள், பகிர்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும் என்றும், இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 2012ம் ஆண்டில் அசிசியில், முதல் பிரான்சிஸ் புறவினத்தார் மன்றம் நடைபெற்றது என்றும் கர்தினால் ரவாசி அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மறைபரப்புப் பணிக்கு தாராளமாக உதவுங்கள், சுவிட்சர்லாந்து ஆயர்கள்

ஆக.21,2015. உலகளாவிய மறைபரப்பு ஞாயிறு நடவடிக்கைகளில் விசுவாசிகள் தாராள மனதுடன் பங்கெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் சுவிட்சர்லாந்து நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.
வருகிற அக்டோபர் 18ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு ஞாயிறை கண்முன்கொண்டு சுவிட்சர்லாந்து ஆயர்கள் சார்பில் மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Markus Büchel அவர்கள் இவ்வாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
"கிறிஸ்துவால் உறுதிப்படுத்தப்பட்டு நம்மை அர்ப்பணிக்கிறோம்!" என்ற விருதுவாக்குடன் அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் Büchel அவர்கள், திருஅவைக்குள் ஒற்றுமையை ஊக்குவிக்கவும், மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும் இந்த உலக  மறைபரப்பு ஞாயிறு நமக்கு அறிவுறுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலில் 1,109 மறைமாவட்டங்கள் இக்கட்டான நிலையில் உள்ளன என்றும், இவற்றுக்கு சுவிட்சர்லாந்து விசுவாசிகள் உதவுமாறும் கேட்டுள்ளார் ஆயர் Büchel.
பாப்பிறை மறைப்பணி கழகங்களின், சுவிட்சர்லாந்து ஆயர்களின் "Missio" நிறுவனம் 118 நாடுகளில் உதவிகள் தேவைப்படும் மறைமாவட்டங்களுக்கு உதவி வருகிறது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காரித்தாஸ் உதவி

ஆக.21,2015. இந்தியாவில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்திய காரித்தாஸ் நிறுவனம் உதவி வருகின்றது.
இந்தியாவின் வட கிழக்கிலுள்ள அசாம் மாநிலத்தில் 280 கிராமங்களும், 12 ஆயிரம் ஹெக்டர் சாகுபடி நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள வேளை, இவ்விடங்களில் பாதிக்கப்பட்டுள்ள 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு காரித்தாஸ் நிறுவனம் உதவி வருகின்றது.
இது குறித்துப் பேசிய இந்திய காரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருள்பணி ஃபிரெட்ரிக் டி சூசா அவர்கள், உலகம் வெப்பமடைந்து வருவதால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெள்ளத்தால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும், கடந்த ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலமற்ற சேவையாற்றிய நிவாரணப் பணியாளர் Altaf Hussain Lone   அவர்களைக் கவுரவித்துள்ளது இந்திய காரித்தாஸ்.
காரித்தாஸ் நிறுவனத்தோடு முதன்முறையாக சேர்ந்து பணியாற்றிய Altaf Hussain Lone அவர்களுக்கு ஒரு சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டது என்று அருள்பணி டி சூசா அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 19, கடந்த புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனிதாபிமான நாளன்று இவ்விருது வழங்கப்பட்டது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

5. பங்களாதேஷில் சிறார் கொலைகளுக்கு நீதி கேட்டு கிறிஸ்தவர்கள்

ஆக.21,2015.  பங்களாதேஷ் நாட்டில் அண்மையில் குற்றக் கும்பல்களால் நான்கு சிறார் கொல்லப்பட்டுள்ளதற்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இவ்வியாழனன்று டாக்காவில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும், வலுவற்ற சிறாரைப் பாதுகாப்பதற்கும் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறிய கிறிஸ்தவர்கள் இறந்த சிறாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபித்தனர்.
பங்களாதேஷில் சிறாரைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் இருக்கின்றபோதிலும், அச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றுரைத்த, அந்நாட்டு ஆயர் பேவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருள்பணி ஆல்பர்ட் தாமஸ் ரொசாரியோ அவர்கள், அரசின் புறக்கணிப்பு, அப்பாவிச் சிறாரின் எதிர்காலத்தை அழிக்கின்றது என்று தெரிவித்தார்.
கைபேசியைத் திருடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கடந்த திங்களன்று, முகமது ராஜா என்ற 17 வயது நிரம்பிய சிறுவனை மூன்று பேர் சேர்ந்து அடித்தே கொலை செய்துள்ளனர். பங்களாதேஷில் கடந்த ஐந்து வாரங்களில் நான்கு சிறார் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

6. பாகிஸ்தானில் தெய்வநிந்தனை கைதுகளுக்கு மதத் தலைவர்கள் கண்டனம்

ஆக.21,2015. பாகிஸ்தானில் தங்களின் தனிப்பட்ட துண்டு விளம்பரம் ஒன்றில், இறைவாக்கினர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக, மூன்று கிறிஸ்தவர்களும், ஒரு முஸ்லிமும் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு மதத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இவ்வெள்ளியன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் துண்டு விளம்பரம் ஒன்றில், இறைவாக்கினர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக, தெய்வநிந்தனை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களின்கீழ் இந்த நால்வரும் பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது குறித்து கருத்து தெரிவித்த உள்ளூர் கிறிஸ்தவத் தலைவர் Ahsan Masih Sandu அவர்கள், Aftab Gill என்ற கிறிஸ்தவர், இறந்த தனது தந்தை Fazal Masih அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அச்சிட்ட துண்டு விளம்பரத்தில், விவிலியத்தில் வரும் இறைவாக்கினரைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த Sandu அவர்கள், முஸ்லிம் சகோதரர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாகவும், ஆனால் அது புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. மகதலா மரியா ஊரில் இயேசு போதித்த தொழுகைக்கூடம் கண்டுபிடிப்பு

ஆக.21,2015. இஸ்ரேலின் வட பகுதியில் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு நிலப் பகுதியில் புதைபொருள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நூற்றாண்டு தொழுகைக்கூடம் ஒன்று, புனித மகதலா மரியா அவர்கள் ஊரைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தொழுகைக்கூடத்தோடு, "bimah" எனப்படும் பழங்கால பலிபீடம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைபொருள் ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள், இதனை மகதலா கல் என்று அழைத்து வருகின்றனர்.
இயேசு கலிலேயாவிலுள்ள தொழுகைக்கூடத்தில் போதித்தார் என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நூற்றாண்டு தொழுகைக்கூடம் இது மட்டுமே என்பதால், இப்பகுதியில் இயேசு கிறிஸ்து போதித்த தொழுகைக்கூடம் இதுவாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்விடத்தில் ஆய்வாளர்கள் தோண்டி எடுத்துள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமையுடைய ஒரு குடுவை, இயேசு தொழுகைக்கூடத்தில் நுழைவதற்கு முன்னர் அவர் கரங்களைக் கழுவப் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.  

ஆதாரம் : Christianglobe / வத்திக்கான் வானொலி

8. உலகில் சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் விமான நிலையம்

ஆக.21,2015. உலகிலேயே முழுவதும் சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் விமான நிலையமாக, கேரளாவின் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் மாறியுள்ளது.
கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் கார்கோ வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 46,150 சூரியத் தகடுகளை உள்ளடக்கிய 12 மெகாவாட் சூரிய ஆற்றல் மின் உற்பத்தி நிலையத்தை கேரள முதல்வர் Oommen Chandy அவர்கள் கடந்த செவ்வாயன்று திறந்து வைத்தார்.
இதில் இருந்து ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், தொழில்நுட்ப முறைப்படி, இவ்விமான நிலையத்தை முழுவதும் சூரிய மின் ஆற்றலால் இயக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தை சூரிய மின் ஆற்றலால் இயக்கும் முயற்சி 2013ம் ஆண்டிலேயே துவங்கியது. முதலில் பயணிகள் வந்து சேரும் பிரிவின் மேற்கூரையில் நூறு கிலோவாட் தகடுகள் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி துவங்கியது. அதன் பிறகு தகடுகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டது. கொல்கத்தாவைச் சேர்ந்த விக்ரம் சோலார் என்ற நிறுவனம் இத்தகடுகளை நிறுவி வருகிறது.
மூன்று மெட்ரிக் டன் நிலக்கரியை எரித்து, அதன் மூலம் எவ்வளவு கரியமில வாயு வெளியாகுமோ அந்த அளவு பாதிப்பை இன்னும் 25 ஆண்டுகளில் இந்த சூரிய மின் ஆற்றல் நிலையம் குறைக்கும். இது ஏறக்குறைய 30 இலட்சம் மரங்கள் நடுவதற்குச் சம்மாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : PTI / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment