Thursday 6 August 2015

செய்திகள் - 06.08.15

செய்திகள் - 06.08.15

------------------------------------------------------------------------------------------------------

1. கிழக்கு தீமோர் மக்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

2. ஈராக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தையின் ஆறுதல் மடல்

3. அதிலாபாத் சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்

4. திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் - 37ம் ஆண்டு நினைவு

5. ஹிரோஷிமா, நாகசாகியில் ஆயர்களின் செப முயற்சிகள்

6. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென தனிப்பட்ட பணிக்குழு

7. பாலஸ்தீன இளையோர் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி

8. சுற்றுச்சூழலை மையப்படுத்தி ஸ்வீடன் நாட்டில் திருப்பயணம்
------------------------------------------------------------------------------------------------------

1. கிழக்கு தீமோர் மக்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

ஆக.06,2015. "நம் கிறிஸ்தவக் குடும்பங்களில் பல புண்ணிய முயற்சிகளைக் கற்றுக்கொள்கிறோம்; அனைத்துக்கும் மேலாக, எவ்விதப் பதிலிருப்பையும் எதிர்பாராமல், அன்பு செய்வதைக் கற்றுக்கொள்கிறோம்" என்ற வார்த்தைகளை, ஆகஸ்ட் 6, இவ்வியாழனன்று, தன் Twitter செய்தியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.
மேலும், ஆகஸ்ட் 15, வருகிற சனிக்கிழமை, கிழக்கு தீமோர் குடியரசில், நற்செய்தி அறிவிக்கப்பட்ட 5ம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை, தன் பிரதிநிதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்து, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மறைபரப்புப் பணியாளர்களின் துணிவுமிக்க, அயராத உழைப்பினால், கிழக்கு தீமோர் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் அந்நாட்டு மக்களையும், ஆயர் பேரவையையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுமென்று திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை மரியா விண்ணேற்பு அடைந்த நாளான ஆகஸ்ட் 15ம் தேதியன்று, கிழக்கு தீமோரின் தலைநகரான Diliயில், இந்த நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், அந்த அன்னை, விண்ணிலிருந்து, கிழக்கு தீமோர் மக்கள் மீது இறைவனின் அருள் வளங்களை பொழிந்தருள தனது செபம் கலந்த ஆசீரையும் திருத்தந்தை இம்மடலில் கூறியுள்ளார்.
ஆசியாவில், பிலிப்பின்ஸ் நாட்டிற்கு அடுத்தபடியாக, அதிகமான கத்தோலிக்கர்களைக் கொண்ட நாடென கருதப்படும் கிழக்கு தீமோர் நாட்டில், 88.4 விழுக்காடு மக்கள் கத்தோலிக்கர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஈராக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தையின் ஆறுதல் மடல்

ஆக.06,2015. உலகின் பல பகுதிகளில் வதைபட்டு வரும் கிறிஸ்தவர்களின் கொடுமைகள் குறித்து குரல் கொடுக்க நான் பலமுறை ஆசித்துள்ளேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி, ஈராக்கிலிருந்து விரட்டப்பட்டு, ஜோர்டான் நாட்டில் கிறிஸ்தவர்கள் அடைக்கலம் புகுந்த துயர நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவைக் கடைபிடிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள, தன் சார்பில், இத்தாலிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் Galantino Nunzio அவர்களை, திருத்தந்தை அனுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் 6ம் தேதி முதல், 9ம் தேதி முடிய, ஜோர்டனில் பயணம் மேற்கொண்டுள்ள ஆயர் Nunzio வழியாக, எருசலேம், இலத்தீன் வழிபாட்டு முறை துணை ஆயர், Maroun Lahham அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள கடிதத்தில், கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் துயரங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்தவர்களின் துயர்களைக் கண்டு தங்கள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்ளாமல், துன்புறுவோருக்கு ஆறுதலாக விளங்கும் தலத்திரு அவைக்கும், துறவு சபைகளுக்கும் தன் ஆழ்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் இம்மடலில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அதிலாபாத் சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்

ஆக.06,2015. இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், அதிலாபாத் (Adilabad) சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி அன்டனி பிரின்ஸ் பானேங்காடன் (Antony Prince Panengaden) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.
அதிலாபாத் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவந்த ஜோசப் குன்னத் (Joseph Kunnath) அவர்கள் பணிஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, புதிய ஆயரை நியமித்துள்ளார்.
புதிய ஆயராகப் பணியேற்கவிருக்கும் அருள்பணி பானேங்காடன் அவர்கள், 1976ம் ஆண்டு, கேரளாவின் திருச்சூரில் பிறந்து, கார்மேல் துறவு சபையில் இணைந்தார்.
2007ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணி பானேங்காடன் அவர்கள், உரோம் நகரில் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும், இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டில் வாழும் சீரோ மலபார் கத்தோலிக்கர்களுக்கென டொரான்டோ (Toronto) நகரில், ஒரு புதிய அதிகார வட்டத்தை உருவாக்கி, அதற்கு, அருள்பணி ஜோஸ் கல்லுவேளில் (Jose Kalluvelil) அவர்களை அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் - 37ம் ஆண்டு நினைவு

ஆக.06,2015. 37 ஆண்டுகளுக்கு முன், ஆகஸ்ட் 6ம் தேதி இறையடி சேர்ந்த திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அவர்களின் நினைவாக, இவ்வியாழன் காலை வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள கெபியில் அல்பானோ ஆயர், Marcello Semeraro அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார்.
இத்தருணத்தையொட்டி, 6ம் பவுல் நிறுவனத்தின் தலைவரான, அருள்பணி Angelo Maffeis அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களிடமிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெருமளவு உத்வேகம் பெற்றுவருகிறார் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள, "இறைவா உமக்கே புகழ்" என்ற அண்மையத் திருமடலில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முன்னேற்றம் குறித்து பேசியிருப்பது, மக்களின் முன்னேற்றம் என்று பொருள்படும் "Populorum Progressio" என்ற திருமடலில், அருளாளர் 6ம் பவுல் அவர்கள், கூறியிருக்கும் ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்பதன் எதிரொலியாக நாம் காணலாம் என்று அருள்பணி Maffeis அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
வருகிற செப்டம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐ.நா.அவையில் உரை வழங்கவிருப்பதைக் குறித்து எண்ணிப்பார்க்கும்போது, ஐ.நா. அவையில் முதல் முதலாக உரையாற்றியவர், திருத்தந்தை 6ம் பவுல் என்பதையும் மறக்க இயலாது என்று அருள்பணி Maffeis அவர்கள், எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஹிரோஷிமா, நாகசாகியில் ஆயர்களின் செப முயற்சிகள்

ஆக.06,2015. ஆகஸ்ட் 6, இவ்வியாழனன்று ஹிரோஷிமா நகரில் அமைந்துள்ள உலக அமைதி பேராலயத்தில், கத்தோலிக்க ஆயர்களும், ஆங்கிலிக்கன் ஆயர்களும் இணைந்து பத்துநாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப முயற்சிகளைத் துவக்கி வைத்தனர்.
ஆகஸ்ட் 9, வருகிற ஞாயிறன்று, நாகசாகி நகரில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் நினைவுக் கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இருநாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொண்ட அணுகுண்டு தாக்குதலின் 70ம் ஆண்டு நினைவாக, இவ்வியாழன் காலை 8.15 மணிக்கு, 40,000த்திற்கும் அதிகமானோர் ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் கூடி, அமைதி அஞ்சலி செலுத்தினர்.
ஹிரோஷிமா நகரை அணுகுண்டு தாக்கிய நேரமான, காலை 8.15 மணிக்கு, அமைதி மணி ஒவ்வோர் ஆண்டும் ஒலிக்கப்படுகிறது. அவ்வேளையில், ஹிரோஷிமா நகரின் மேயர், அணுகுண்டின் விளைவுகளைச் சந்தித்து உயிர் வாழ்ந்தோரில், கடந்த ஆண்டு இறந்தோரின் பட்டியலை வாசிப்பார்.
ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகளால், 1,40,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்த ஆண்டுகளில் அணுகுண்டின் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டோர் இறந்து வருகின்றனர்.
அணுகுண்டு தாக்குதலின் 70ம் ஆண்டு நிறைவு வேளையில், இதன் விளைவுகளைத் தாங்கி உயிர் வாழ்வோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,90,000 என்றும், இவர்களின் சராசரி வயது, 79.44 வருடங்கள் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென தனிப்பட்ட பணிக்குழு

ஆக.06,2015. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென தனிப்பட்டப் பணிக்குழுவை உருவாக்கும் தீர்மானத்தை, பிலிப்பின்ஸ் நாட்டில் பணியாற்றும் அனைத்து துறவு சபைகளும், அண்மையில் நிறைவேற்றின.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலை மையப்படுத்தி அண்மையில் வெளியிட்ட "இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலின் பொருளை ஆழமாகக் கற்றுக்கொள்வதும், அத்திருமடல் வழியே திருத்தந்தை விடுக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதும் இந்தப் பணிக்குழுவின் முக்கியப் பணி என்று துறவு சபைகள் அறிவித்துள்ளன.
காலநிலை மாற்றத்தை மனதில் கொண்டு செயலாற்றும் பல்வேறு சமுதாய அமைப்புக்களுடன், இந்தப் பணிக்குழு இணைந்து உழைக்கும் என்றும் துறவு சபையினர் கூறியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தையொட்டிய பணிக்குழு ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஆசிய ஆயர் பேரவையும் ஈடுபட்டுள்ளதென்று, ஆசிய ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.
86 மறைமாவட்டங்களைக் கொண்ட பிலிப்பின்ஸ் நாட்டில், 12,000த்திற்கும் அதிகமான அருள் சகோதரிகளும், 7335 அருள்பணியாளர்களும் பணியாற்றிவருவதாக, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. பாலஸ்தீன இளையோர் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி

ஆக.06,2015. காசாப் பகுதியில் வாழும் பாலஸ்தீன இளையோர் தீட்டியுள்ள ஓவியங்கள் அடங்கிய ஒரு கண்காட்சி, லண்டன் மாநகரில் ஆகஸ்ட் 7, இவ்வெள்ளி முதல் ஆகஸ்ட் 22 முடிய மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது.
இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல், 51 நாட்கள் நடைபெற்ற மோதல்களில், 1,500க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 5,00,000த்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்தனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
இந்த மோதல்களால் பாதிக்கப்பட்ட 4,00,000 த்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கும், இளையோருக்கும் உள்ளத்தளவில் நலம் வழங்கும் முயற்சிகளை, CFTA எனப்படும் கலாச்சார மற்றும் சுதந்திர எண்ணம் கழகம் என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு மேற்கொண்டது.
CFTA அமைப்பின் வழியே, இளையோர் தங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி, வரைந்துள்ள 400க்கும் அதிகமான ஓவியங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி, ஆகஸ்ட் 6, இவ்வியாழன் மாலை திறந்துவைக்கப்பட்டது.
இளையோரும் குழந்தைகளும் வரைந்துள்ள ஓவியங்களுடன், Heidi Levine என்ற புகைப்படக் கலைஞர், காசாப் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களை பதிவு செய்துள்ள புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி

8. சுற்றுச்சூழலை மையப்படுத்தி ஸ்வீடன் நாட்டில் திருப்பயணம்

ஆக.06,2015. சுற்றுச்சூழலை மையப்படுத்தி ஸ்வீடன் நாட்டில் திருப்பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் நடுவில் ஸ்வீடன் நாட்டின் Uppsala என்ற நகரில் துவங்கிய இத்திருப்பயணம், 630 கிலோ மீட்டர் தூரம் கடந்து, செப்டம்பர் 10ம் தேதி, ஸ்வீடனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Lund என்ற நகரை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் காலையிலும் செபத்துடன் துவக்கப்படும் இப்பயணம், மாலை 4 மணியளவில் நிறைவுச் செய்யப்படுவதாகவும், வழியில் காணும் அனைத்து பங்கு கோவில்களிலும் இக்குழுவினர் செபவழிபாடுகள் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருப்பயணத்தின் ஒரு தொடர் முயற்சியாக, சுற்றுச்சூழல் உலக மாநாடு நடைபெறவிருக்கும் பாரிஸ் மாநகர் நோக்கிய பயணம், செப்டம்பர் 13ம் தேதி மேற்கொள்ளப்படும் என்றும், இத்திருப்பயண அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment