Tuesday, 3 December 2024

டிச.03. உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

 டிச.03. உலக மாற்றுத்திறனாளிகள் தினம்


மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், அவர்களுக்கு சம வாய்ப்புகளும், அவர்களின் நலவாழ்வுக்கான உரிமையும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

டிசம்பர் 3ஆம் தேதி, புனிதர் பிரான்சிஸ் சவேரியாரின் திருவிழாவன்று, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தைச் சிறப்பிக்கின்றோம். 1981ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் தினமாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம் என கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருளாக, தலைப்பாக, ‘அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்துதல்’ என்பது எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை நம்மில் ஏற்படுத்துவதற்கும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள சம உரிமையை வழங்குவதற்கு எவ்வாறு நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதை உணரவும் இந்த நாள் நமக்கு உதவ வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அவர்களும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழும் அத்தனை உரிமைகளையும் பெற்றவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், அவர்களுக்கு சம வாய்ப்புகளும், அவர்களின் நலவாழ்வுக்கான உரிமையும் ஆகும். இந்த தினத்தின் நோக்கமே, மாற்றுத்திறனாளர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துவது, அவர்கள் நல வாழ்வு வாழ்வதற்கான உரிமையை வழங்குவது மற்றும் அவர்களை கண்ணியமாக நடத்துவது, அவர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்குவது ஆகியவற்றை செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்வது, அவர்களை கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் அவர்களின் நலவாழ்வு, உரிமைகள், அவர்களுக்கு உரிமை கொடுப்பது இந்த நாளின் நோக்கமாகும். ஏனெனில், டிசம்பர் 3 - அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம் என்பது, மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக ஐநா சபையால் உருவாக்கப்பட்ட ஒன்று.  மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வடிவமைப்பதில் ஏன் இன்னும் பற்றாக்குறை நிலவுகிறது என கேட்டால், “ஒவ்வொரு சேவையுமே சந்தை தேவையைப் பொறுத்துதான் அமையும்” என்பது பதிலாகக் கிடைக்கின்றது. இன்றைய உலகில் மொத்த மக்கள்தொகையில் 16 விழுக்காட்டினர், அதாவது, 130 கோடி பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானல், 6க்கு ஒருவர் மாற்றுத்திறனாளியாக உள்ளார். இதற்கு காரணம் என்னவெனில், தொற்றுவகையைச் சாராத தீவிர நோய்களும், ஆயுட்காலம் அதிகரித்திருப்பதும் என்று சொல்லலாம். மாற்றுத்திறனாளிகள் போதிய உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இன்மையால் அவர்கள் இறப்பதும் விரைவில் இடம்பெறுகிறது. நாம் ஏன் அப்படி சொல்கின்றோம் என்றால், அவர்கள் எளிதில் மருத்துவரை அணுகமுடியாது, எப்போதும் யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். சக்கர நாற்காலியிலேயே சிலர் வாழ்நாள் முழுவதும் அமர்ந்திருக்க வேண்டியிருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. ஊனமுற்றோருக்கு என உடற்பயிற்சி நிலையங்கள் குறித்து சமூகம் சிந்தித்துப் பார்க்கக்கூட தயங்குகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மனத்தளர்ச்சி, ஆஸ்துமா, சர்க்கரை நோய், பக்கவாதம், உடல் பருமன், பல் ஆரோக்கிய கேடு போன்றவை இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் உடல் குறைபாடுகள் பலவிதங்களில் ஒத்துழைப்பதில்லை என்ற காரணத்தை பொதுவாகக் குறிப்பிட்டாலும், அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படல், ஏழ்மை, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலிருந்து அவர்கள் ஒதுக்கிவைக்கப்படல், நல ஆதரவுப் பணிகளை இலகுவாகப் பெறுவதில் தடைகள் போன்றவையும் காரணமாக இருக்கின்றன. அதற்கு நாமும் பலவேளைகளில் காரணமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டியது அவசியமாகிறது. மாற்றுத்திறனாளிகளின் நிலை உணர்ந்து, அவர்களை அனுதாபத்துடன் அல்ல, மாறாக சகோதர பாசத்துடன் அணைத்துச் செல்வதுதான் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், மால்கள் உள்ளிட்டவற்றை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். சென்னையில் 2அல்லது 3 மால்களில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் நிறுத்தும் வசதிகள் உள்ளன. ஐரோப்பாவை எடுத்துக்கொண்டோமானல், எல்லா இடங்களிலும், ஊனமுற்றோருக்கான வாகனங்கள்  நிறுத்துவதற்கான இடம் தனியாக இருக்கும். அதற்கென எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. அதற்கு அவர்கள் ஏற்கனவே நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து, அவர்கள் ஊனமுற்றோர் தான் என்பதை நிரூபிக்கும் அடையாள அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். அது எளிதான ஒன்றுதான். தமிழகத்தில் தனியார் கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கானதாக இல்லை. ஓரிடத்தை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைப்பதில் தனியாருக்கும் பொறுப்பு உண்டு. அரசுக்கு மட்டும் இதில் பங்கு இல்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பங்கு இருக்கிறது.

ஒரு கட்டிடத்திற்கு உரிமம் அளிக்கும்போது மாற்றுத்திறனாளிகள் அதனை அணுகும் விதத்தில் இருக்கிறதா என்பதை பார்த்து அளிக்க வேண்டும். இந்த விடயத்தில் எந்தளவுக்கு சமூகம் முதிர்ச்சியடைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அது இருக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் சக்கர நாற்காலி உபயோகிப்பவர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே சென்றால் எல்லா இடங்களுக்கும் அதிலேயே சென்றுவரும் விதத்தில் உள்ளது. மேலும், சில தொலைக்காட்சி செய்திகள், சைகை மொழிபெயர்ப்புடன் இடம்பெறுகின்றன. ஆனால், இன்று, எத்தனை இணையதளங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதத்தில் இருக்கின்றன என்ற கேள்விக்கு பதிலில்லை. இணையதளங்களை வடிவமைக்கும்போது அனைத்து குறைபாடு உடையவர்களும் அணுகும் விதத்தில் வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

மேலும், எந்தவொரு பொருளையோ, சேவையையோ பெறுவதற்கான விலை, கட்டணம் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார நிலைக்கேற்றவாறு இருக்க வேண்டும். ஏனெனில், மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கிறார்கள் என அனைத்துலக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகள் அவர்கள் ஏழைகளாக இருப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.

‘ஐ.நா.வின் மாற்றுத்திறனாளிகள் உடன்படிக்கை’யில் சாலைகளில் ‘ஆடியோ சிக்னல்’ வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆடியோ சிக்னல்கள் பெரும்பாலான இடங்களில் இல்லை. எனவே, ஒரு சாலையை கடக்க வேண்டும் என்றாலும் ஒருவரை சார்ந்துதான் இருக்க வேண்டும். பொது இடங்களில் எங்கும் பிரெய்ல் முறையில் அறிவிப்புப் பலகைகள் எழுதப்பட்டிருக்காது. விதி விலக்காக சில இடங்களில் இருந்தாலும் அவை எங்கு இருக்கிறது என்பதே தெரியாது என்பதுதான் உண்மை. மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த சமூகம் இன்னும் நிறைய நிறைய செய்யவேண்டியிருக்கிறது.

நம் அணுகுமுறைகள் மாறி அனைவரையும் சகோதரர்களாக அரவணைத்து முன்னோக்கி எடுத்துச்செல்வது ஒன்றுதான் உண்மையான பாதையாக இருக்க முடியும்.


No comments:

Post a Comment