காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட, அனைத்துலகளவில் அழுத்தம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனத்தின் (CIA) தலைவர் வில்லியம் பர்ன்ஸ், அவரது எகிப்திய எதிரிணையினர் மற்றும் கத்தார் பிரதமருக்கு இடையே கெய்ரோவில் கலந்துரையாடல் நிகழ்விருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டுமெனப் பன்னாட்டளவில் அழுத்தம் அதிகரித்து வரும் வேளை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்றும், பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள Rafah நகரில் ஹமாஸுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலண்டனில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் Orly Goldschmidt கூறுகையில், இராணுவம் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கவில்லை என்றும், நாங்கள் பொதுமக்களைக் காயப்படுத்த விரும்பவில்லை, பாலஸ்தீன மக்களுடன் நாங்கள் ஒருபோதும் போரில் ஈடுபட்டதில்லை என்றும் பிபிசி வானொலிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, Rafah நகர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்களும் வலியுறுத்தியதுடன், அந்நகரில் புகலிடம் தேடுபவர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் நம்பகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் கேமரூன் அவர்கள், Rafah நகரில் எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்குவதற்கு முன் இஸ்ரேல் அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோருக்கு உதவிவரும் UNRWA எனப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துயர்துடைப்புப் பணியகம், காசா பகுதிக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உள்ளே நுழையவிடாமல் இஸ்ரேலிய அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர் என்று கவலையுடன் கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment