An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Friday, 28 February 2025
திருத்தந்தையின் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்!
திருத்தந்தையின் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்!
பிப்ரவரி 26, புதன்கிழமை காலை வழக்கம்போல் திருநற்கருணை உட்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் அவர் தனது அலுவலகப் பணிகளைத் தொடர்ந்தாற்றினார்.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 26, இப்புதன்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலைக் குறித்து பின்வரும் அறிவிப்புகளை வழங்கியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறுநீரகப் பிரச்சனைகள் குறைந்துவிட்ட நிலையில், அவரது உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் இருந்து வருகிறது. அண்மைய CT ஸ்கேன் அவரது நுரையீரல் அழற்சியின் இயல்பான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவரது இரத்த பரிசோதனைகள் நல்ல முடிவுகளை அளித்துள்ளன. மதியம், அவர் தனது திருப்பீட நிர்வாகப்பணி அலுவல்களைத் தொடர்ந்தபோதிலும் அவரது உடல் நிலை, மருத்துவக் கணிப்புகளுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டு வரும் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றுபோல் இன்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. சுவாச உடலியக்க (physiotherapy) மருத்துவ சிகிச்சைத் தொடர்கிறது. அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள அதேவேளை, மருத்துவர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக்கொண்டு வருகிறார்.
பிப்ரவரி 27, வியாழக்கிழமை இன்று
பிப்ரவரி 26, புதன்கிழமை இரவு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றாக உறங்கினார் என்றும், பிப்ரவரி 27, வியாழக்கிழமை இன்று, நன்றாக ஓய்வெடுக்கின்றார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இன்று காலை அறிவித்துள்ளது.
தினசரி இருமுறை அறிக்கைகள்
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை பிற்பகலில், உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் (Bronchitis) சிகிச்சைக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகள் தினசரி இருமுறை விசுவாசிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
Thursday, 27 February 2025
Monday, 24 February 2025
கிறிஸ்துவின் நற்செய்தியை உலகில் பரப்பும் இறையியல் கல்வி நிறுவனம்
கிறிஸ்துவின் நற்செய்தியை உலகில் பரப்பும் இறையியல் கல்வி நிறுவனம்
கடந்த 20 ஆண்டுகளாக இறையியல் கல்வி வாயிலாகTriveneto இறையியல் கல்வித்துறைக் குடும்பம், மக்களுக்குச் செய்து வரும் ஏராளமான நன்மைகள், இளைய தலைமுறையினருக்கு ஆதரவாகச் செயல்படுதல் போன்றவற்றிற்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
Triveneto இறையியல் கல்வித்துறைக் குடும்பம் முழுவதும் திருஅவையின் பணிக்கு ஒத்துழைப்பதில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவின் நற்செய்தியை உலகில் பரப்ப வேண்டும் என்றும் ஊக்கமூட்டி வாழ்த்துச்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை Triveneto இறையியல் கல்வித்துறை நிறுவப்பட்டதன் 20-ஆவது ஆண்டை முன்னிட்டு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான பாரம்பரியத்திற்கு நம்பிக்கை உடையவர்களாகவும், காலத்தின் அடையாளங்களைப் படிக்கத் தங்களது இதயத்தைத் திறந்தவர்களாகவும் இருக்க அத்துறையினருக்கு எடுத்துரைத்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக இறையியல் கல்வி வாயிலாக மக்களுக்குச் செய்து வரும் ஏராளமான நன்மைகள், ளைய தலைமுறையினருக்கு ஆதரவாகச் செயல்படுதல் போன்றவற்றிற்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் உண்மையை, சமகால மனிதனுக்குத் திறம்பட கொண்டு செல்வதற்கான புதிய சவால்களைத் துணிவுடன் ஏற்று, செயல்பட்டு வருவதற்குத் தனது வாழ்த்துக்களையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இறையியல் கல்வி மற்றும் ஆழப்படுத்துதல் வழியாக மட்டுமன்றி, ஒவ்வொரு நபரின் சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வின் வழியாக உருவாக்கத்திற்கான இடமாக இறையியல் கல்வி நிறுவனங்கள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளில் அடித்தளம் கொண்ட உண்மை, நன்மை, அழகு ஆகியவற்றின் அடிப்படையில், இளைஞர்கள் தங்களை உணர்ந்து கொள்ள, அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதை ஆசிரியர்கள் நன்கறிவார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இறையியல் கல்வித்துறை இதுவரை ஆற்றிய செயல்கள் மற்றும் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தனது வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், ஞானத்தின் இருப்பிடமான அன்னை மரியின் பாதுகாப்பில் புதிய பாதையை நாடி இதயப்பூர்வமாக அவர்களுக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இயேசு சபையின் திருப்பயண பக்கத்தில் ஹிந்தியும் தமிழும் இணைப்பு
இயேசு சபையின் திருப்பயண பக்கத்தில் ஹிந்தியும் தமிழும் இணைப்பு
நேரடியாக இயேசு சபையினர் தொடர்புடைய இடங்களைச் சென்று காண்பதற்கும், வீட்டில் அமர்ந்துகொண்டே கணனி வழியாக இவ்விடங்களைக் காணவும் உதவும் இயேசு சபையினரின் திருப்பயண இணையப் பக்கம்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இயேசு சபையை நிறுவிய புனித இக்னேசியஸ் லொயோலா மற்றும் இயேசு சபையினர் தொடர்புடைய புனித தலங்களைக் கணனியில் கண்டு இரசிப்பதற்கு உதவும் வகையில் இயங்கி வந்த மென்பொருளில் ஹிந்தி மற்றும் தமிழும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.
Jesuit Pilgrimage என்ற இணையப் பக்கத்தில் ஏற்கனவே ஆங்கிலம், இஸ்பானியம், பிரெஞ்ச், இத்தாலியம், எளிதாக்கப்பட்ட மற்றும் பாரம்பரிய சைனம், கொரியன், வியட்நாம் என எட்டு மொழிகளில் புனித தலங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஹிந்தி மற்றும் தமிழும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.
இயேசு சபையினரின் ஆன்மீக பாரம்பரியம் மேலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள இவ்விரு மொழிகளும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இம்மொழி பேசும் மக்களுக்கும் உதவுவதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயேசு சபையினர் தொடர்புடைய இடங்களை நேரடியாகச் சென்று காண்பதற்கும், வீட்டில் அமர்ந்துகொண்டே கணனி வழியாக இவ்விடங்களைக் காணவும் உதவும் வகையில் ஒலி-ஒளி சேவையை வழங்கும் இந்த இணையப் பக்கம், இவ்விடங்களின் வரலாற்றுப் பின்னணி, அவை வழங்கும் ஆன்மீக சிந்தனைகள், நடைமுறைத் தகவல்கள் போன்றவைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
ஒவ்வொரு புனித இடத்தின் வரலாறு, ஆன்மீக சிந்தனைகள், விளக்கங்கள் என்பவை அவ்விடம் குறித்து நாம் ஆழமாக புரிந்துகொள்ள உதவுவதுடன், ஊடாடும் வரைபடம், தரம் மிகுந்த காட்சிகள் போன்றவையும் ஆழமான திருப்பயண அனுபவத்தை நம்மில் விதைக்க உதவுகின்றன.
இந்த Jesuit Pilgrimage கணனி பயன்பாட்டு மென்பொருள் இலவசமாக தரவிறக்கம் செய்யப்படும் வகையில் தரப்பட்டுள்ளது.
Friday, 21 February 2025
Thursday, 20 February 2025
Saturday, 15 February 2025
Friday, 14 February 2025
Thursday, 13 February 2025
Wednesday, 12 February 2025
2024-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சயத் விருது!
2024-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சயத் விருது!
2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி, இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே மற்றும் 'உலக மத்திய சமையலறை’ (World Central Kitchen) என்ற உணவு உதவி அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி, இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே மற்றும் 'உலக மத்திய சமையலறை’ என்ற உணவு உதவி அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை மாலை, அபுதாபி நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) நிறுவுனர் சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அவர்களின் நினைவிடத்தில் (Founder’s Memorial) இடம்பெற்ற நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
மனித உடன்பிறந்த உணர்வு நிலை குறித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏடு, திருத்தந்தைக்கும் Al-Azhar தலைமைக் குருவுக்கும் இடையே 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டதை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட மனித உடன்பிறந்த நிலை சயத் விருது, தற்போது ஆறாவது ஆண்டாக வழங்கப்பட்டுள்ளது.
'பகிரப்பட்ட மனிதநேயம்'
இவ்விருது வழங்கும் விழாவில், முதலில் உரையாற்றிய பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி அவர்கள், மக்கள் மற்றும் கோள்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும், மனித வளர்ச்சி நலமான சூழலை எவ்வாறு நம்பியுள்ளது என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.
அடுத்து, உரைநிகழ்த்திய 'உலக மத்திய சமையலறை' என்ற உணவு உதவி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி எரின் கோர் அவர்கள், மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு, குறிப்பாக காசாவில், அக்டோபர் 2023-ஆம் ஆண்டில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 10 கோடி மக்களுக்கு உணவுகளை வழங்குவதில் இவ்வமைப்பின் முயற்சிகளைப் பற்றி உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.
இறுதியாக, 15 வயது நிரம்பிய இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே, எத்தியோப்பியாவில் மருத்துவமனை கட்டுவது உட்பட தனது திட்டங்களை இன்னும் மேம்படுத்த தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிசுத் தொகையைப் பயன்படுத்தப் போவதாக நம்பிக்கையுடன் கூறினார். இவர் ஆரம்ப கட்ட தோல் புற்றுநோயைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் ஒரு சோப்பை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பீடம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான திருப்பீடத்தூதர் பேராயர் கிறிஸ்டோஃபே எல்-காசிஸ் அவர்கள், 2007-ஆம் ஆண்டில் தொடங்கிய ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் திருப்பீடத்திற்கு இடையேயான வலுவான தூதரக உறவுகள் குறித்து வத்திக்கான் செய்தி நிறுவனத்திடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
மனித உடன்பிறந்த நிலை உறுதி ஆவணத்தை ஆதரிப்பதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கை எடுத்துரைத்த பேராயர், உலகளவில் மனித உடன்பிறந்த நிலையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
தனது நேர்காணலில், சயத் விருது குறித்தும் பாராட்டியுள்ள பேராயர் எல்-காசிஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பெரிய இமாம் இடையேயான ஒத்துழைப்பை மற்றவர்களுக்கு முன்மாதிரி என்று அழைத்ததுடன், "நாம் அனைவரும் ஒரே குடும்பம்" என்பதை உலகிற்கு நினைவூட்டினார்.
புனித அன்னை தெரேசாவின் விழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைப்பு!
புனித அன்னை தெரேசாவின் விழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைப்பு!
திருவழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத் துறை, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று கொண்டாடப்படும் கொல்கொத்தா நகர் அன்னை தெரேசாவின் திருவிழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டுள்ளது குறித்த ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருவழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத் துறை, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று கொண்டாடப்படும் இந்தியாவின் கொல்கொத்தா நகர் அன்னை தெரேசாவின் திருவிழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டுள்ளது குறித்த ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று, இந்த ஆணையை வெளியிட்டுள்ள இத்திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Arthur Roche அவர்கள், “புனித அன்னை தெரேசா, கைவிடப்பட்டவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் “அன்னை தெரேசா உயரத்தில் சிறியவராக இருந்தாலும் அன்பை வழங்குவதில் மிகவும் மகத்தானவராக இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் Arthur Roche அவர்கள், “கருவறையில் கூட கைவிடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மற்றும் இகழ்ந்தொதுக்கப்பட்ட அனைத்து மனித உயிர்களையும் பாதுகாப்பதில் பணிவான சேவையின் மாண்பு மற்றும் சிறப்புக்குச் சான்றாக விளங்கினார்” என்றும் உரைத்துள்ளார்.
“ஆயர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலை விசுவாசிகளின் வேண்டுகோள்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அன்னை தெரேசாவின் திருவிழாவை உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைக் கேட்டுக்கொண்டார்” என்றும் கூறியுள்ளார் கர்தினால் Roche
“அன்னை தெரேசாவின் புனிதமும் ஆன்மிகமும், வாழ்க்கையில் கைவிடப்பட்டவர்களின் நம்பிக்கைக்கு சிறந்ததொரு சான்றாக வெளிப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் Roche அவர்கள், “கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டெம்பர் 4,-ஆம் தேதியன்று, அன்னை தெரேசாவைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருச்சடங்கின்போது, ‘நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கும் இறை இரக்கத்தின் வழித்தடம் அன்னை தெரேசா’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைத்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த ஆணை, அந்நாளுக்குரிய திருவழிபாட்டு ஆவணங்கள் (இலத்தீன் மொழியில்) திருப்புகழ் மாலை மற்றும் திருப்பலிக் கொண்டாட்டங்களின்போது இறைவேண்டல் செய்வதில் விசுவாசிகளுக்கு வழிகாட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அன்னை தெரேசாவின் திருவிழா (செப்டம்பர் 5-ஆம் தேதி) ஒரு விருப்ப வழிபாட்டு நினைவாக (an optional liturgical memorial) ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்றும் அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில், ஆபத்தின் பிடியில் இருக்கும் 50 இலட்சக் குழந்தைகள்!
சிரியாவில், ஆபத்தின் பிடியில் இருக்கும் 50 இலட்சக் குழந்தைகள்!
சிரியாவில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் வெடிக்கும் தன்மையுள்ள ஆயுதங்களால் ஆபத்தில் இருப்பதாகவும், பலர் பள்ளியை விட்டு இடைநின்றுள்ளனர் மற்றும் பலர் பள்ளியை விட்டு வெளியேறும் ஆபத்தில் உள்ளததாகவும் கூறி அந்நாட்டிற்கு உடனடி ஆதரவைக் கோரியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிரியாவில் வெடிக்கும் தன்மையுள்ள ஆயுதங்களால் 50 இலட்சக் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என்றும், அவர்களுக்கு உடனடி ஆதரவுத் தேவை என்றும் கூறியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
பிப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை, இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், மோதலால் 72 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், அவர்களில் பாதி பேர் குழந்தைகள் எனவும் தனது எக்ஸ்தள பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் வெடிக்கும் தன்மையுள்ள ஆயுதங்களால் 50 இலட்சக் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என்றும், 24 இலட்சம் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறி உள்ளனர் என்றும் உரைக்கும் அவ்வமைப்பு, மேலும் 10 இலட்சம் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறும் ஆபத்தில் உள்ளனர் எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.
அந்நாட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பு, மாண்பு மற்றும் நம்பிக்கையுடன் மீண்டும் கட்டியெழுப்ப யுனிசெஃப் பணியாற்றி வருகிறது.
23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளது!
23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளது!
சில நாடுகளில் இதனை நீக்குவதற்கான முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது என்றாலும், காம்பியாவில் தடைகளை நீக்குவதற்கான முயற்சிகள் போன்ற சவால்கள் தொடர்கின்றன என்றும் அதன் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளன என்றும், 2030-ஆம் ஆண்டில் 2 கோடியே 70 இலட்சம் பேர் இதேநிலையைச் சந்திக்கும் பேராபத்தில் இருக்கின்றனர் என்றும் யுனிசெஃப் நிறுவனம், உலக நல அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி அமைப்பும் கவலை தெரிவித்துள்ளன.
சில நாடுகளில் இதனை நீக்குவதற்கான முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது என்றாலும், காம்பியாவில் தடைகளை நீக்குவதற்கான முயற்சிகள் போன்ற சவால்கள் தொடர்கின்றன என்றும் அதன் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் FGM எனப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைத்தலை ஒழிப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கு வலுவான கூட்டணிகள், கொள்கை அமலாக்கம் மற்றும் முதலீட்டிற்கு இந்த நிறுவனங்கள் மூன்றும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்ம பேச்சு அதிகரிப்பு
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்ம பேச்சு அதிகரிப்பு
2024ல் பொதுத் தேர்தல் நடந்ததால் இந்தியாவில் வன்மப்பேச்சுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, மொத்த வன்மப்பேச்சுகளுள் 98.5 விழுக்காடு இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்தது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை மற்றும் வன்ம பேச்சுக்கள் 2024ஆம் ஆண்டில் மிக உச்சத்தை எட்டியதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் Think Tank என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மப் பேச்சுகள் 2024ஆம் ஆண்டில் 74.4 விழுக்காடு அதிகரித்ததைச் சுட்டிக்காட்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டை தலைமையிடமாகக் கொண்ட இந்த Think Tank அமைப்பு, இஸ்லாமியர்களை வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்களாக சித்தரிக்கும் போக்கு கடந்த ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாக புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கிறது.
பெரும்பான்மையினராக வாழும் இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் இலாபம் பார்ப்பதற்காக கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் காலத்தில், இந்திய பிரதமரும், அவரின் பாஜக கட்சியும், வன்மப் பேச்சுகளில் ஈடுபட்டதாக இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
இந்தியாவில் வாழும் 22 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் தங்கள் வருங்காலம் குறித்த ஒருவித அச்சத்தில் வாழ்வதாகக் கூறும் இந்த அமைப்பு, 2023ல் 668ஆக இருந்த வன்மப் பேச்சுகள் 2024ல் 74.4 விழுக்காடு அதிகரித்து 1165ஆக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
2024ல் பொதுத் தேர்தல் நடந்ததால் வன்மப்பேச்சுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எனவும், மொத்த வன்மப்பேச்சுகளுள் 98.5 விழுக்காடு இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்ததாகவும் இவ்வமைப்பின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பூர்வீகக் குடியினர் தங்கள் தனித்தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை
பூர்வீகக் குடியினர் தங்கள் தனித்தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை
பூர்வீகக்குடிகளுக்குரிய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுவதால் பூர்வீக மக்களின் மாண்புடன் வாழ்வதற்கான உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பூர்வீகக் குடிமக்கள் தங்கள் கலாச்சாரத் தனித்தன்மையையும், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் உரிமையை வலியுறுத்தி ஐ.நா. கூட்டத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
IFAD எனப்படும் ஐ.நா.வின் வேளாண் வளர்ச்சிக்கான பன்னாட்டு நிதி அமைப்பினால் அதன் உரோம் நகர் தலைமையகத்தில் பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளில் இடம்பெறும் பூர்வீகக் குடியினர் குறித்த 7வது கருத்தரங்கிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலம், நீர், உணவு என்பவையெல்லாம் வெறும் பொருட்கள் அல்ல, மாறாக, அவை வாழ்வின் அடிப்படை, மற்றும் இயற்கையோடு பூர்வீகக் குடியினரின் பிணைப்பு என அதில் குறிப்பிட்டுள்ளார்.
‘சுய நிர்ணயத்திற்கான பூர்வீகக் குடியினரின் உரிமை: உணவு பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அது பாதை’ என்ற தலைப்பில் இடம்பெறும் கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், பூர்வீகக் குடியினர் தங்கள் தனித்தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை இருக்கின்றபோதிலும், இன்றைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்களும் நாடுகளும் விவசாய நிலங்களைப் பறித்துக் கொள்வதால் இந்த உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது என கவலையை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு, பூர்வீகக்குடிகளுக்குரிய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுவதால் பூர்வீக மக்களின் மாண்புடன் வாழ்வதற்கான உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை தன் செய்தியில்.
பூர்வீகக் குடிமக்கள் இந்த உலக சமூகத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும், மற்றும், இயற்கை வளங்களை அனுபவிப்பதற்கான அவர்களின் உரிமைகள் ஏற்கப்பட வேண்டும் என மேலும் தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூர்வீகக் குடிமக்களின் உரிமைகள் மதிக்கப்படுவது நீதியோடு தொடர்புடையது மட்டுமல்ல, மனித குலத்தின் வருங்காலத்தை உறுதி செய்வதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பதட்டநிலைகளாலும் சிக்கல் நிரம்பிய சவால்களாலும் நிறைந்திருக்கும் இன்றைய உலகிற்கு பூர்வீகக் குடிகளின் முன்னோர் தந்த பாரம்பரியம், நிகழ்காலத்திற்கு, எதிர்நோக்கின் வைகைறையைத் திறந்து விடுகிறது என மேலும் IFAD கூட்டத்திற்கான தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Saturday, 8 February 2025
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Bombay archdiocese studies porn addiction among youth Study aims at understanding those who use it, and finding programmes to help...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...