Thursday 16 March 2017

கத்தோலிக்கச் செய்திகள் - 16.03.17

கத்தோலிக்கச் செய்திகள் - 16/03/17
------------------------------------------------------------------------------------------------------

1. வறியோர் மீது அக்கறையற்று வாழ்வது, பாவம் - திருத்தந்தை

2. திருத்தந்தையைச் சந்தித்த லெபனான் நாட்டு அரசுத் தலைவர்

3. மார்ச் 24, 25 தேதிகளில், 'இறைவனோடு 24 மணி நேரங்கள்'

4. ஏப்ரல் 2ம் தேதி, கார்பியில் திருத்தந்தையின் மேய்ப்புப்பணி பயணம்

5. பாத்திமா அன்னையின் நம்பிக்கையை உருவாக்கும் செய்தி

6. சிரியா போர், அப்பாவி மக்களைக் கொல்லும் சுனாமி - கர்தினால் சேனாரி

7. மனித வர்த்தக ஆற்றின் கிளை நதி, கடுமையான வறுமை

8. திருப்பீடத்தின் நிதி உதவியால் இல்லம் திரும்பியவர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. வறியோர் மீது அக்கறையற்று வாழ்வது, பாவம் - திருத்தந்தை

மார்ச்,16,2017. தான் என்ற சூழலுக்குள் தன்னையே மூடிக்கொண்டு, தன்னுடைய செல்வங்களில் நிறைவுகண்டு, தன்னை மட்டுமே நம்பி வாழ்பவர், திசைகாட்டும் கருவியை இழந்து, தவிக்க வேண்டியிருக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் வழங்கிய மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள செல்வரும், இலாசரும் உவமையினை அடித்தளமாகக் கொண்டு, மறையுரை வழங்கிய திருத்தந்தை, வறியோர் மீது அக்கறையற்று வாழ்வது, அழிவுக்கு இட்டுச் செல்லும் பாவம் என்று குறிப்பிட்டார்.
பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது, ஆபிரகாம் மடியில் இருந்தவர் லாசர் என்று அடையாளம் காண முடிந்த செல்வர், இவ்வுலக வாழ்வில் அவரது பெயரைக் கூட தெரிந்துகொள்ள விரும்பாத சுயநலத்தில் சிக்கியிருந்தார் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
தெருக்களில் வறியோரையும், வீடற்றோரையும் காணும் நாம், 'இவர்கள் திருடுபவர்கள், ஏமாற்றுபவர்கள்' என்று நமக்குள் நாமே சொல்லிக்கொண்டு, நம் வழியே நடக்கிறோமா என்ற கேள்வியை தன் மறையுரையில் எழுப்பினார், திருத்தந்தை.
மருத்துவமனையில் குண்டு விழுந்து குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்ற செய்தியைப் போல பல துயரமானச் செய்திகளைக் கேட்கும்போது, பாவப்பட்ட அம்மக்களுக்காக ஒரு செபம் சொல்லிவிட்டு நம் வழியே நாம் தொடர்வது, நம்மையும் பாவ வழியில் நடத்திச் செல்லும் மனநிலையாக மாறிவிடும் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையைச் சந்தித்த லெபனான் நாட்டு அரசுத் தலைவர்

மார்ச்,16,2017. லெபனான் நாட்டின் அரசுத்தலைவர், Michel Aoun, மற்றும் அவரது துணைவியார், அரசு அதிகாரிகள் ஆகியோர், மார்ச் 16, இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தனர்.
லெபனானுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்தும், பன்முகக் கலாச்சாரங்களையும், மதங்களையும் கொண்டுள்ள லெபனான் நாட்டில், அனைத்து இனத்தவருக்கிடையிலும் ஒருங்கிணைப்பும், கூட்டுறவும் நிலவுவது நாட்டின் எதிர்காலத்திற்குச் சிறந்தது என்றும், இச்சந்திப்பில் பேசப்பட்டதென, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
சிரியாவின் தற்போதைய நிலை குறித்தும், பொதுவாக மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் குறித்தும், இச்சந்திப்பில் பேசப்பட்ட வேளையில், புலம்பெயர்ந்தோருக்கு லெபனான் நாடு ஆற்றிவரும் தொண்டுகள் குறித்து, திருப்பீடம் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத்தலைவர், Michel Aoun அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் பால் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.
மேலும், தங்கள் 'அத் லிமினா' சந்திப்பிற்கென உரோம் நகருக்கு வருகை தந்திருக்கும், கனடா நாட்டு ஆயர்களின் ஒரு குழுவினரை, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மார்ச் 24, 25 தேதிகளில், 'இறைவனோடு 24 மணி நேரங்கள்'

மார்ச்,16,2017. ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறையொட்டி நடைபெறும் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' என்ற ஒப்புரவு அருளடையாள முயற்சி, இவ்வாண்டும், மார்ச் 24, 25 ஆகிய இரு நாள்கள் சிறப்பிக்கப்படும் என்று, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 25ம் தேதி, மிலான் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, இவ்வாண்டு, 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சியின் ஒரு பகுதியான ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை, மார்ச் 17, இவ்வெள்ளியன்று, புனித பேதுரு பசிலிக்காவில், திருத்தந்தை தலைமையேற்று நடத்துவார்.
இவ்வாண்டு கொண்டாடப்படும் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சிக்கு, 'இரக்கத்தையே விரும்புகிறேன்' (மத்தேயு 9:13) என்ற சொற்கள் மையக்கருத்தாக அமைந்துள்ளன.
மார்ச் 24, 25 ஆகிய நாள்கள் நடைபெறும் ஒப்புரவு அருளடையாள முயற்சியின் இறுதியில், Sassiaவில் உள்ள தூய ஆவியார் ஆலயத்தில், புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் தலைமையில் மாலை வழிபாடு நடைபெறும்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

4. ஏப்ரல் 2ம் தேதி, கார்பியில் திருத்தந்தையின் மேய்ப்புப்பணி பயணம்

மார்ச்,16,2017. "கிறிஸ்துவிடமிருந்து வெளிப்படும் அன்பு, கருணை, மற்றும் ஆறுதல் ஆகியவற்றுடன், திருஅவை, ஒவ்வொருக்கருகிலும் இருக்க விழைகிறது" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இவ்வியாழனன்று இடம்பெற்றுள்ளன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 2ம் தேதி, ஞாயிறன்று, கார்பி (Carpi) நகரில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்களை திருப்பீடம் இவ்வியாழனன்று வெளியிட்டது.
ஞாயிறு காலை 8.15 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, 10.30 மணிக்கு, கார்பி, மறைசாட்சிகளின் சதுக்கத்தில், திருப்பலி நிகழ்த்தி, நண்பகல் மூவேளை செப உரையும் வழங்குவார்.
கார்பியின் அருள்பணியாளர் பயிற்சி இல்லத்தில், அப்பகுதியின் ஆயர்கள், மற்றும் ஒய்வு பெற்ற அருள்பணியாளர்களுடன் மதிய உணவை அருந்தும் திருத்தந்தை, பிற்பகல் 3 மணிக்கு, கார்பி மறைமாவட்ட துறவியர், அருள்பணியாளர், குருமாணவர்கள் அனைவரையும் சந்திப்பார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பேராலயத்தை வெளியில் இருந்து காணும் திருத்தந்தை, நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு அங்கு மலரஞ்சலி செலுத்துவார்.
மாலை 5.30 மணிக்கு கார்பியிலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பும் திருத்தந்தை, மாலை 7 மணிக்கு வத்திக்கான் சென்றடைவார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

5. பாத்திமா அன்னையின் நம்பிக்கையை உருவாக்கும் செய்தி

மார்ச்,16,2017. அன்னை மரியா, பாத்திமா நகரில் தந்த செய்திமனமாற்றத்திற்கும், செபத்திற்கும் விடுக்கப்பட்ட அழைப்பு மட்டுமல்ல, மாறாக, இறைவனின் இருப்பு இவ்வுலகில் உள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்கும் செய்தியாகவும் அமைந்தது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாத்திமா அன்னையின் செய்தி குறித்தும், மேமாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா திருத்தலத்திற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்தும், கர்தினால்கள் குழுமத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ அவர்கள், இப்புதனன்று, வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கூறினார்.
வத்திக்கானில் இயங்கிவரும் போர்த்துக்கல் தூதரகத்தில் கர்தினால் சொதானோ அவர்கள் இவ்வுரையை வழங்கியபோது, பாத்திமா மறைமாவட்ட ஆயர், António Marto Dos Santos அவர்களும், இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கத்தோலிக்கத் திருஅவையில் அன்னை மரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமிக்க பங்கைக் குறித்துப் பேசிய கர்தினால் சொதானோ அவர்கள், போர்மேகங்களால் இருண்டிருந்த இவ்வுலகில், பாத்திமா அன்னை, நம்பிக்கையின் விடிவெள்ளியாகத் தோன்றினார் என்று தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கும் திருத்தந்தையருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து எடுத்துரைத்த கர்தினால் சொதானோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணம், அன்னையின் மீது நமது பக்தியையும், அன்னை வழங்கிய நம்பிக்கை செய்தியில் ஆழ்ந்த பிடிப்பையும் உருவாக்கும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. சிரியா போர், அப்பாவி மக்களைக் கொல்லும் சுனாமி - கர்தினால் சேனாரி

மார்ச்,16,2017. போரின் கொடுமைகளை ஆறு ஆண்டுகளாக அனுபவித்துவரும் சிரியா நாட்டின் நிலைமை குறித்து, ஜெனீவாவிலும், அஸ்தானாவிலும் நடைபெறும் கூட்டங்கள் அந்நாட்டு மக்களுக்கு பயனுள்ளவற்றைக் கொணரும் என்று தான் நம்புவதாக, சிரியா நாட்டு திருப்பீடத் தூதர், கர்தினால் மாரியோ சேனாரி அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சிரியாவில் நடைபெற்றுவரும் போரை, ஆழிப்பேரலை என்ற உருவகித்து பேசிய கர்தினால் சேனாரி அவர்கள், தான் சிரியாவில் கழித்த, கடந்த எட்டு ஆண்டுகளில், ஆறு ஆண்டுகள், போரின் கொடுமைகளைக் காணவேண்டியிருந்ததென்றும், இந்த வன்முறைச் சுனாமியால் அதிகம் அழிந்தது, அப்பாவி பொதுமக்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்தப் போரின் அழிவுகள், இளையோர் மற்றும் குழந்தைகள் மனங்களில் மிக ஆழமாகப் பதிந்திருப்பது, தனக்கு பெரும் கவலையைத் தருகிறதென்று, கர்தினால் சேனாரி அவர்கள் இப்பேட்டியில் எடுத்துரைத்தார்.
ஜெனீவாவில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Ivan Jurkovič அவர்கள், இப்போரை, மதியற்ற படுகொலை என்று குறிப்பிட்டிருப்பதை தான் முற்றிலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய கர்தினால் சேனாரி அவர்கள், இந்தப் பேரழிவுக்கு பன்னாட்டுச் சமுதாயமும், வெளிநாட்டு அரசுகளும் பெரும் பொறுப்பேற்கவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
17,000 குழந்தைகள் உட்பட, 96,000 பேர் இந்தப் போரினால் உயிரிழந்துள்ளனர் என்றும், போருக்கு முன், 2 கோடியே 30 இலட்சமாக இருந்த மக்கள் தொகை, இன்று, 66 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றும், ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிக்கை, நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது என்று, கர்தினால் சேனாரி அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. மனித வர்த்தக ஆற்றின் கிளை நதி, கடுமையான வறுமை

மார்ச்,16,2017. மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராடுவது, தன் தலைமைப்பணியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்த்தி வருவதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. தலைமையகத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், “போர்ச் சூழல்களில் மனித வர்த்தகம்: அடிமைத்தனம், கட்டாயப் பணிகள்என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில், இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், இவ்வாறு கூறினார்.
வெள்ளமெனப் பெருகியோடும் மனித வர்த்தகம் என்ற ஆற்றில் கடுமையான வறுமை, சமுதாய பாகுபாடுகள், அடிப்படை தேவைகள் நிறைவேறாத நிலை போன்ற கிளை நதிகள் கலக்கின்றன என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக, மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மனசாட்சியற்ற முறையில் நடந்துகொள்கின்றனர் என்றும், போர் நிலவும் சூழல்களில், இவர்களிடம் மனிதாபிமானம் முற்றிலும் அழிந்துபோகிறது என்றும், பேராயர் அவுசா அவர்கள் கவலை வெளியிட்டார்.
போர்ச்சூழல்களில், கிறிஸ்தவர்களும், சிறுபான்மை சமுதாயங்களும் அனுபவிக்கும் கொடுமைகள், திருப்பீடத்திற்கு ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளது என்று, பேராயர் அவுசா அவர்கள் ஐ.நா. அவை கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. திருப்பீடத்தின் நிதி உதவியால் இல்லம் திரும்பியவர்கள்

மார்ச்,16,2017. திருப்பீடம் வழங்கிய 8 கோடி மத்திய ஆப்ரிக்க பிராங்க், அதாவது, 1,31,000 டாலர்கள் மதிப்புள்ள நிதி உதவியின் பயனாக, மத்திய ஆப்ரிக்க நாட்டில், 968 பேர் மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு திரும்பி, புது வாழ்வைத் துவக்கியுள்ளனர் என்று, பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய ஆப்ரிக்க காரித்தாஸ் வழியே அனுப்பியுள்ள இந்த உதவித் தொகையால், 371 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பாங்கியில் உள்ள 23ம் ஜான் மையத்தை அடைந்துள்ளனர் என்று இச்செய்தி மேலும் கூறுகிறது.
மத்திய ஆப்ரிக்காவில் தங்கள் இல்லங்களையும், உடமைகளையும் இழந்து வெளியேறிய மக்கள், 2016ம் ஆண்டு மார்ச் மாதம், 138,415 என்ற எண்ணிக்கையில் இருந்ததாகவும், திருப்பீடம் மற்றும் ஏனைய பிறரன்பு அமைப்பினரின் உதவிகளால், இந்த எண்ணிக்கை இவ்வாண்டு பிப்ரவரி மாதம், 127,933 என குறைந்துள்ளது என்றும் பீதேஸ் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment