Saturday 11 March 2017

கத்தோலிக்கச் செய்திகள் - 10/03/17

கத்தோலிக்கச் செய்திகள் - 10/03/17
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் ஆண்டு தியானம் நிறைவுற்றது

2. திருஅவையின் கலாச்சார வளங்கள், அருங்காட்சியகப் பொருள்கள் அல்ல

3. ஊடகத்துறை சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கட்டும்

4. புலம்பெயர்ந்தோர்க்கு கதவுகளை மூட வேண்டாம், திருஅவைத் தலைவர்கள்

5. டிரம்ப்பின் குடியேற்றதாரர் திட்டம், அமெரிக்க விழுமியங்களுக்கு முரணானது

6. திருப்பீட தலைமையகத்தில் பெண்களின் குரல்

7. தென் கொரியாவில் பிரிவினைகளைத் தவிர்க்குமாறு பல்சமயத் தலைவர்கள்

8. இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் ஆண்டு தியானம் நிறைவுற்றது

மார்ச்,10,2017. உரோம் நகருக்கு 16 மைல் தூரத்திலுள்ள அரிச்சாவில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், ஆண்டு தியானத்தை நிறைவு செய்து, இவ்வெள்ளி முற்பகல் 11.30 மணிக்கு வத்திக்கான் வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வெள்ளி காலையில், தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், சிரியா நாட்டுக்காகத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அலெப்போவில் வாழும் ஏழை மக்களுக்கென ஒரு இலட்சம் யூரோக்களை வழங்கியுள்ளார்.
இந்நன்கொடைக்கு, திருப்பீட தலைமையகமும் உதவியுள்ளது. இந்நிதி, திருப்பீடத்தில் தர்மக் காரியங்கள் ஆற்றும் அலுவலகம் வழியாக, புனித பூமி பாதுகாவலருக்கு அனுப்பப்படும் என, திருப்பீட உதவிச் செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.
இன்னும், தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், தியான உரைகளாற்றிய பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் ஜூலியோ மிக்கேலினி அவர்களுக்கு, நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மார்ச் 05, ஞாயிறு மாலை, திருத்தந்தையும், திருப்பீட உயர் அதிகாரிகளும் மேற்கொண்ட ஆண்டு தியானம், மார்ச் 10, இவ்வெள்ளியன்று நிறைவு பெற்றது.
மேலும், இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, உரோம் மறைமாவட்ட தலைமையகத்தில், அம்மறைமாவட்ட தலைமைப் பங்கு அருள்பணியாளர்களைச் சந்திக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சிரியாவில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில் ஐ.நா. தலைமையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் உரையாடலின் ஐந்தாவது அமர்வு, மார்ச் 23ம் தேதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ம் தேதி நடந்த உரையாடலில், நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 
இன்னும், இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், தவக்காலத்தில், சோகமான முகங்களைக் கொண்டிருக்காமல், புன்சிரிப்பு முகங்களுடன், நோன்பைக்  கடைப்பிடிப்போம் என்ற சொற்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருஅவையின் கலாச்சார வளங்கள், அருங்காட்சியகப் பொருள்கள் அல்ல

மார்ச்,10,2017. திருஅவையின் கலாச்சாரப் பாரம்பரியச் சொத்துக்கள், அருங்காட்சியகப் பார்வைப் பொருள்கள் அல்ல, மாறாக, அவற்றின் மேன்மை உணரப்பட்டு, மதிக்கப்பட வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், தேசியக் கூட்டமொன்றில் கூறினார்.
யுனெஸ்கோவில் திருப்பீட பிரதிநிதியாகப் பணியாற்றும் பேரருள்திரு Francesco Follo அவர்கள், இத்தாலியின் வெனிஸ் நகரில், சமய கலாச்சார பாரம்பரிய சொத்துக்கள் பற்றி அறிதல், பாதுகாத்தல், மதித்தல் என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.
திருஅவையின் கலாச்சாரப் பாரம்பரியச் சொத்துக்கள் வெளிப்படுத்தும், சமய மற்றும் மேய்ப்புப்பணி விழுமியங்களை மறந்து, பொருளாதார மற்றும், சமூகக் கூறுகளை மட்டும் புரிந்துகொள்வதற்கு முயற்சித்தால், அவற்றின் முக்கியத்துவம் இழக்கப்படும் என்றும் எச்சரித்தார், பேரருள்திரு Follo.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம், சிஸ்டீன் சிற்றாலயம் போன்ற, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சமய கலாச்சார பாரம்பரியச் சொத்துக்கள், வத்திக்கான் நகர நாட்டிற்குள்ளேயே இருக்கின்றன என்று உரையாற்றிய, பேரருள்திரு Follo அவர்கள், விசுவாசத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இடையே உறுதியான தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
உலகிலுள்ள கலாச்சாரப் பாரம்பரியச் சொத்துக்களில் ஐம்பது விழுக்காடு இத்தாலியில் உள்ளன எனவும், இவற்றில், எழுபது முதல் எண்பது விழுக்காடு, திருஅவையைச் சார்ந்தவை எனவும், உரைத்த பேரருள்திரு Follo அவர்கள், இத்தாலியில், ஏறக்குறைய 95 ஆயிரம் ஆலயங்கள், மூவாயிரம் நூலகங்கள் மற்றும், 28 ஆயிரம் பங்குத்தள கலாச்சார வளங்கள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஊடகத்துறை சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கட்டும்

மார்ச்,10,2017. ஊடகத்துறையில் பணியாற்றுகின்றவர்கள், ஒப்புரவு மற்றும், சந்திப்பு  கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கருவிகளாகச் செயல்படுமாறு, ஊடக சுதந்திரம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டமொன்றில் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், கேட்டுக்கொண்டார்.
OSCE என்ற, ஐரோப்பிய பாதுகாப்பும் ஒத்துழைப்பும் என்ற நிறுவனத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேரருள்திரு Janusz Urbanczyk அவர்கள், அந்நிறுவனம் நடத்திய 1136வது கூட்டத்தில், ஊடக சுதந்திரம் பற்றி உரையாற்றுகையில், 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊடகத்துறையினருக்கு ஆற்றிய உரையிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசினார்.
ஊடகத் துறையினர் உட்பட, எல்லாருக்குமே வாழ்வு எப்பொழுதும் எளிதாக அமைவதில்லை எனவும், ஆயுத மோதல்கள் போன்ற கடினமான சூழல்கள் பற்றி செய்திகள் கொடுக்கும்போது, ஊடகத் துறையினர் சவால்களை எதிர்கொள்கின்றனர் எனவும், இக்கூட்டத்தில் கூறினார், பேரருள்திரு Urbanczyk.
ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்கள், பொதுநலனைக் கட்டியெழுப்புவதற்கும், ஒப்புரவுப் பாதையை ஊக்குவிப்பதற்கும் உதவுகின்றவர்களாகப் பணியாற்றுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதை, OSCE கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார், பேரருள்திரு Urbanczyk.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. புலம்பெயர்ந்தோர்க்கு கதவுகளை மூட வேண்டாம், திருஅவைத் தலைவர்கள்

மார்ச்,10,2017. புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்வோர்க்கு வழங்கப்படும் உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்று, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும், ஏனைய நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர், திருஅவையின் இரு முக்கிய தலைவர்கள்.
லெபனான், ஜோர்டன், ஈராக், கிரேக்கம் ஆகிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்கின்ற மக்களைப் பார்வையிட்ட பின்னர், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க கர்தினால் ரோஜெர் மகோனி, பேராயர் சில்வானோ தொமாசி ஆகிய இருவரும், தங்களின் வாழ்வுக்காக, நாடுகளின் கதவுகளைத் தட்டும் மக்களுக்குரிய உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.
திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்வோர் அலுவலகம் ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய இத்தலைவர்கள், மனித சமுதாயம் மிக மோசமான நிலையில் வாழ்வதைக் காண முடிந்தது எனத் தெரிவித்தனர்.
இம்முகாம்களில் வாழ்கின்ற மக்களுடன் திருத்தந்தை கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்ததாகவும், குடியேற்றதாரர் குறித்து அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் எடுத்திருக்கும் தீர்மானம், இம்மக்களை மேலும் பாதிக்கும் எனவும் கூறினார், கர்தினால் ரோஜர் மகோனி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
     
5. டிரம்ப்பின் குடியேற்றதாரர் திட்டம், அமெரிக்க விழுமியங்களுக்கு முரணானது

மார்ச்,10,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டில், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் குடியேற்றத்தை நிறுத்துவதற்கு, அந்நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் திட்டமிட்டு வருவது, அமெரிக்க சமுதாயத்தின் பாரம்பரியத்திற்கு எதிரானது என்று, உலகளாவிய இயேசு சபை தலைவர் அருள்பணி Arturo Sosa அவர்கள் கூறினார்.
இவ்வாரத்தில் ANSA செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ள அருள்பணி Arturo Sosa அவர்கள், மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவது, மற்றும், ஆறு முஸ்லிம் நாடுகளின் மக்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது குறித்த டிரம்ப் அவர்களின் திட்டம், ஆகியவை, அமெரிக்க மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களை மீறுவதாக உள்ளது என்று கூறினார்.
பயங்கரவாதத்தோடு இஸ்லாமைத் தொடர்புபடுத்த முயற்சிப்பது, அறிவற்றதனம் என்றும் கூறிய அருள்பணி Sosa அவர்கள், குடியேற்றதாரரைத் தடைசெய்வதற்கு சுவர்களைக் கட்டுவது, மனிதமற்ற செயல் எனவும், குறை கூறினார்.
துன்பச் சூழலை எதிர்கொள்கின்ற குடியேற்றதாரர், நாடுகளுக்குள் நுழைவதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, வேறு வழிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்பதால்,  தடைச் சுவர்கள் பயனற்றவை என்றும், இயேசு சபை தலைவர் அருள்பணி Arturo Sosa அவர்கள் கூறினார்.

ஆதாரம் : ANSA / வத்திக்கான் வானொலி

6. திருப்பீட தலைமையகத்தில் பெண்களின் குரல்

மார்ச்,10,2017. வத்திக்கானில் பெண்களின் இருப்பு அவசியமானது மற்றும், அது, மேலும் அழகு சேர்ப்பதாக இருக்கும் என்று, திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள் கூறினார்.
திருப்பீட கலாச்சார அவையில் பெண்கள் ஆலோசனை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது குறித்து, Zenit செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, கர்தினால் ரவாசி அவர்கள்,  தனது துறையின் நடவடிக்கைகளில், பெண்களின் கண்ணோட்டத்தை உட்புகுத்தும் நோக்கத்தில், புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த அலுவலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 பெண்களின் குரல்கள் கேட்கப்படும் எனவும், பெண்ணாக இருப்பது மிகவும் கடினம் எனவும், ஏனெனில் இவர்கள், ஆண்களோடு சேர்ந்து செயல்பட வேண்டியுள்ளது எனவும் கூறினார், கர்தினால் ரவாசி.
மார்ச் 07, இச்செவ்வாயன்று, திருப்பீட கலாச்சார அவையில், பெண்கள் ஆலோசனை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

7. தென் கொரியாவில் பிரிவினைகளைத் தவிர்க்குமாறு பல்சமயத் தலைவர்கள்

மார்ச்,10,2017. தென் கொரிய அரசுத்தலைவர் Park Geun-hye அவர்களை, பதவியில் இருந்து நீக்கிடும் நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் இவ்வெள்ளியன்று உறுதி செய்துள்ளவேளை, குடிமக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்குமாறு, பல்சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்நாட்டின் கத்தோலிக்க, பிரிந்த கிறிஸ்தவ சபைகள் மற்றும், புத்த மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் அனைவரும் ஒற்றுமையைக் காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
தென் கொரிய அரசுத்தலைவர் குறித்த இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை  வெளியிட்டுள்ள, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Iginus Kim Hee-joong அவர்கள், அரசியல் சாசன நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதால், மக்கள் மோதல்களையும், பிளவுகளையும், கீழ்ப்படியாமையையும் விலக்கி நடக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தென் கொரியாவின் அரசுத்தலைவர் Park Geun-hye உள்ளிட்டவர்கள் மீது, ஊழல் குற்றம்சாட்டப்பட்டு, தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அந்நாட்டின் ஆளும் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில், தென் கொரியாவில், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அரசுத்தலைவர் தேர்தல் நடக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
தன்னுடைய நெருங்கிய தோழி Choi Soon-silலை, நாட்டின் விவகாரங்களில் தலையிட அனுமதித்ததன் மூலம், Park Geun-hye சட்டத்தை மீறியுள்ளார் என்று, அரசியல் சாசன நீதிமன்றம் கூறியுள்ளது.
தென் கொரியாவின் முதலாவது பெண் அரசுத்தலைவராகப் புகழ்பெற்ற Park Geun-hye அவர்கள், சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிகாரத்தில் இருந்து நீக்கப்படும் முதலாவது தலைவராகவும் மாறியுள்ளார்

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

8. இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி

மார்ச்,10,2017. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், ஏறக்குறைய பத்து இலட்சம் மக்களுக்கு உடனடி உணவு உதவி தேவைப்படுகின்றது என, ஐ.நா.வும், இலங்கை அரசும் கூறியுள்ளன.
மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, வாழ்வைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஏனைய உதவிகளும் தேவைப்படுகின்றன எனவும், ஐ.நா.வும், இலங்கை அரசும் கூறியுள்ளன.
பேரிடர் தடுப்பு நிர்வாக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறக்குறைய 9 இலட்சம் பேருக்கு அவசர உணவு உதவியும், ஏறக்குறைய 80 ஆயிரம் பேருக்கு வாழ்வைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஏனைய உதவிகளும் தேவைப்படுகின்றன எனச் சொல்லப்பட்டுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களில் 23, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment