Friday 26 June 2015

செய்திகள்-25.06.15

செய்திகள்-25.06.15

------------------------------------------------------------------------------------------------------

1.  அமெரிக்க யூத அமைப்பினருக்கு திருத்தந்தையின் பாராட்டு

2.  பிறரன்பே திருஅவையை நம்பிக்கைக்குரியதாக்கும் - திருத்தந்தை

3.  திருத்தந்தை : குறைவாகப் பேசி, அதிகமாகச் செவிமடுங்கள்

4.  திருத்தந்தை - ஒப்புரவு அருள் அடையாளத்தால், புதியதோர் இதயம்

5.  பிலடெல்பியா அனைத்துலக குடும்ப மாநாட்டின் விவரங்கள்

6.  அருள்சகோதரி நிர்மலாவின் மறைவுக்கு கர்தினால் கிரேசியஸின் இரங்கல் செய்தி

7.  இறைவனடி சேர்ந்த சிலிசியா முதுபெரும் தந்தை

8.  வாயுக்களின் வெளியேற்றத்தை, நெதர்லாந்து குறைக்கவேண்டும்
------------------------------------------------------------------------------------------------------

1.  அமெரிக்க யூத அமைப்பினருக்கு திருத்தந்தையின் பாராட்டு

ஜூன்,25,2015. அண்மைக் காலங்களில் யூத மதத்திற்கும் கத்தோலிக்க மதத்திற்கும் இடையே சரியான புரிதல் இடம்பெறுவதற்கு, B’nai B’rith International எனப்படும் அமெரிக்க யூத அமைப்பு ஆற்றியுள்ள பணிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்த யூத சமுதாயத்திற்கு உதவுவதற்கென்று 1843ம் ஆண்டு துவக்கப்பட்ட இவ்வமைப்பின் அனைத்துலகப் பிரதிநிதிகள் குழுவை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியபோது, திருத்தந்தை பிரான்சிஸ் தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
வாழ்வையும், படைப்பையும் மதித்தல், மனித மாண்பு, நீதி, ஒருமைப்பாடு போன்ற துறைகளில், யூத மற்றும் கத்தோலிக்க மதத்தினர் ஒன்றிணைந்து உழைப்பது, சமூக முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் நாம் ஆற்றும் சேவையாக இருக்கும் என்று திருத்தந்தை கூறினார்.
திருத்தந்தையர், புனித 23ம் யோவான், புனித 2ம் யோவான் பவுல் ஆகியோர் யூதர்களுடன் கொண்டிருந்த நல உறவையும், இரண்டாம் உலகப் போரின்போது, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் பல யூதர்களைக் காப்பாற்றியதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
ஏனைய மறைகளோடு திருஅவைக்கு உள்ள உறவு பற்றிய அறிக்கையான, Nostra Aetate என்ற கிறிஸ்தவ மடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் நினைவுறுத்தினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

2.  பிறரன்பே திருஅவையை நம்பிக்கைக்குரியதாக்கும் - திருத்தந்தை

ஜூன்,25,2015. திருஅவைசார் பாப்பிறை கல்விக் கழகத்தில் பயில்வோரை இவ்வியாழனன்று சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருபீடத்தின் வெளியுறவுத் துறை உட்பட பல்வேறு திருஅவைசார் பணிகளில் ஈடுபட பயிற்சிபெறும் அருள் பணியாளர்களுக்கு உரை வழங்கியத் திருத்தந்தை, உரோமைத் தலைமையகத்தின் உண்மை அதிகாரம் என்பது அதன் பிறரன்பே என்று கூறினார்.
இந்தப் பிறரன்பே திருஅவையை மக்களிடையே நம்பிக்கைக்குரியதாக மாற்ற உதவியாய் உள்ளது என்றும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, எந்த ஒரு பகுதியில் செயலாற்றினாலும், அப்பகுதியின் கலாச்சார அளவுகோல்களையும், சமுதாயத் தேவைகளையும் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.
பயிரிடுவதற்குத் தயாராக இருக்கும் ஒரு நிலத்திற்காகக் காத்திராமல், ஒவ்வொரு நிலத்தையும் பயிர் வழங்கும் நிலமாக மாற்ற, நாமே களத்தில் இறங்கி உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும், அங்குள்ள தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும் என்றுரைத்தத் திருத்தந்தை, ஒவ்வொரு கண்டத்தின் இன்றைய அடிப்படை தேவைகள் என்ன என்பதையும் விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

3.  திருத்தந்தை : குறைவாகப் பேசி, அதிகமாகச் செவிமடுங்கள்

ஜூன் 25,2015. மேய்ப்புப் பணியில் ஈடுபடுவோர் குறைவாகப் பேசி நிறைவாகச் செவிமடுப்பவர்களாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எடுத்துரைத்தல், செயல்படுதல், செவிமடுத்தல்' என்ற மூன்று வார்த்தைகளை மையமாக வைத்து கருத்துக்களை வழங்கினார்.
'ஆண்டவரே, ஆண்டவரே என்று தன்னை அழைப்பவர் எல்லாரும் இறையரசில் நுழைய முடியாதுஎன இயேசு கூறிய வார்த்தைகளை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலர் எடுத்துரைக்கின்றனர், செயல்படுகின்றனர், ஆனால், இறைவார்த்தைக்கு செவிமடுக்காததாக அவர்களின் செயல்பாடுகள் உள்ளன என்றார்.
என் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் பாறை நிலத்தின்மீது வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவர் என இயேசு கூறியதையும் மேற்கோள்காட்டி, செவிமடுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், திருத்தந்தை.
நாம் எவ்வளவுதான் சிறந்த செயல்களை ஆற்றினாலும், செவிமடுப்பதற்குரிய திறந்த மனதைக் கொண்டிராவிடில், அதனால் பயனில்லை எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வார்த்தைக்குச் செவிமடுத்து, அதை பாறையாகக்கொண்டு அதன்மீது நம் வீட்டைக் கட்டுவோம் என்றார்.
இறைவார்த்தைக்கு செவிமடுத்து அதன்வழி செயலாற்றிய அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டையும் தன் மறையுரையில் முன்வைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4.  திருத்தந்தை - ஒப்புரவு அருள் அடையாளத்தால், புதியதோர் இதயம்

ஜூன்,25,2015. ஒப்புரவு அருள் அடையாளத்தில், இயேசு நம்மை வரவேற்று, நமக்கு புதியதோர் இதயத்தை வழங்குகிறார் என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிட்டார்.
"நம் பாவங்கள் அனைத்தோடும் நம்மை ஒப்புரவு அருள் அடையாளத்தில் வரவேற்று சந்திக்கும் இயேசு, அவர் அன்பு கூர்வதுபோல நாமும் அன்பு கூரவல்ல ஒரு புதிய இதயத்தை நமக்குத் தருகிறார்என்ற வார்த்தைகளை, தன் டுவிட்டர் செய்தியாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஒன்பது மொழிகளில் ஒவ்வொருநாளும் டுவிட்டர் செய்திகளை வழங்கிவரும் திருத்தந்தையின் @pontifex என்ற இணையதளத்தில், இதுவரை 628 டுவிட்டர் செய்திகள் பதிவாகியுள்ளன; மற்றும், இச்செய்திகளை தொடர்வோர் எண்ணிக்கை 64,09,371 பேர் என்று இந்த இணையத்தளம் கூறுகிறது.
மேலும், இவ்வியாழன் காலையில், கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பான Knights of Maltaவின் தலைவர், Matthew Festing, திருப்பீட பொருளாதாரத் துறையின் செயலர், கர்தினால் ஜார்ஜ் பெல், பெரு நாட்டு ஆயர் பேரவையின் 4 ஆயர்கள் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

5.  பிலடெல்பியா அனைத்துலக குடும்ப மாநாட்டின் விவரங்கள்

ஜூன்,25,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள அனைத்துலக குடும்ப மாநாட்டின் தயாரிப்பாக, இவ்வியாழனன்று திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், திருஅவை அதிகாரிகளுடன், ஒரு முதிய தம்பதியரும் உரையாற்றினர்.
செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல், 27ம் தேதி முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியாவில் இடம்பெற உள்ள அனைத்துலகக் குடும்ப மாநாட்டையொட்டி, திருப்பீட குடும்பப்பணி அவையின் தலைவர், பேராயர் Vincenzo Paglia, பிலடெல்பியா மறைமாவட்டத்தின் பேராயர், Charles Joseph Chaput, துணை ஆயர், John McIntyre, அம்மறைமாவட்டத்தில் 50 ஆண்டு திருமண வாழ்வைச் சிறப்பித்துள்ள Jerry மற்றும் Lucille Francesco தம்பதியர் ஆகியோர் இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
திருஅவை மற்றும் சமூகத்தின் மையமாக விளங்கும் குடும்பங்களின் சாட்சிய உரைகள், பிலடெல்பியா கருத்தரங்கில் இடம்பெறும் என்றும், இறுதி நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித லூக்காவின் நற்செய்தியை, ஓர் அடையாளமாக, ஐந்து கண்டங்களில் இருந்து வரும் ஐந்து தம்பதியருக்கு வழங்குவார் என்றும் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 11,821 பேர், பிலடெல்பியா அனைத்துலகக் குடும்ப மாநாட்டில் பங்கேற்கப்போவதாக பதிவு செய்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

6.  அருள்சகோதரி நிர்மலாவின் மறைவுக்கு கர்தினால் கிரேசியஸின் இரங்கல் செய்தி

ஜூன் 25,2015. அன்னை தெரேசாவின் பிறரன்புச் சகோதரிகள் சபைத் தலைவியாகப் பணியாற்றி, அண்மையில் இறைபதம் சேர்ந்த அருள்சகோதரி நிர்மலா ஜோஷி அவர்களின் அடக்கச் சடங்கு இப்புதனன்று மாலை இடம்பெற்றது.
அன்னை தெரேசாவுக்குப்பின் 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை அச்சபையை தலைமையேற்று வழிநடத்திய அருள்சகோதரி நிர்மலா அவர்களின் மறைவு குறித்து தன் இரங்கல் செய்தியை வெளியிட்ட மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ் அவர்கள், அருள்சகோதரி நிர்மலா அவர்களின் தினசரி செபங்கள் தனிப்பட்ட முறையில் தனக்கும், இந்திய மற்றும் ஆசிய திரு அவைக்கும் பெருமளவில் உதவியுள்ளன என்றார்.
சகோதரி நிர்மலா அவர்கள் தனக்களித்த பெரிய கொடையாக,  அவரின் தினசரி செபம் இருந்தது என்ற கர்தினால், தன் புனித வாழ்வின் மூலம் திருவைக்கு அருள்சகோதரி நிர்மலா உதவியுள்ளார் என்றார்.
1934ம் ஆண்டு இந்து குடும்பத்தில் பிறந்த அருள்சகோதரி நிர்மலா அவர்கள்,  அன்னை தெரேசாவின் பணிகளால் கவரப்பட்டு, கத்தோலிக்க மறையைத் தழுவினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7.  இறைவனடி சேர்ந்த சிலிசியா முதுபெரும் தந்தை

ஜூன்,25,2015. ஆர்மேனிய கத்தோலிக்க வழிபாட்டு முறையின் சிலிசியா முதுபெரும் தந்தை, 19ம் நெர்செஸ் பெத்ரோஸ் (Nerses Bedros) அவர்கள், இவ்வியாழன் காலை இறைவனடி சேர்ந்தார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், வியாழன் காலை உள்ளூர் நேரம் 8.45 மணிக்கு, மாரடைப்பால் இவர் இறந்தார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
எகிப்து நாட்டின் கெய்ரோவில் 1940ம் ஆண்டு பிறந்த ஆர்மேனிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, 19ம் நெர்செஸ் பெத்ரோஸ் அவர்கள், 1999ம் ஆண்டு, சிலிசியாவின் ஆர்மேனிய கத்தோலிக்க வழிபாட்டு முறைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களிடமிருந்து பேராயருக்குரிய பாலியத்தைப் பெற்றுக்கொண்டவர்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

8.  வாயுக்களின் வெளியேற்றத்தை, நெதர்லாந்து குறைக்கவேண்டும்

ஜூன்,25,2015. புவியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை, நெதர்லாந்து நாடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், குறைந்தது 5 விழுக்காடு குறைக்கவேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் நோக்கத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புவியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றம் குறைக்கப்படாவிடில், இந்த நூற்றாண்டின் இறுதி 50 ஆண்டுகளில், மிகக் கடுமையான காலநிலை பாதிப்புக்கள் ஏற்படும், உணவு மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று இவ்வமைப்பினர் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் வாதாடியிருந்தனர்.
புவியின் வெப்பம் கூடினால், கடல்மட்டம் உயரும் வாய்ப்புக்கள் அதிகமென்றும், நெதர்லாந்து நாடு கடல்மட்ட உயர்வால் அதிக அளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் இவ்வமைப்பினர் முன்வைத்த வாதங்களில் கூறப்பட்டது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment