Wednesday 24 June 2015

செய்திகள்-23.06.15

செய்திகள்-23.06.15
 ------------------------------------------------------------------------------------------------------

1.  மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக உழைக்கிறது திருப்பீடம்

2.  திருத்தந்தையுடன் உணவருந்தியதில் இளங்குற்றவாளிகள் பெரும் மகிழ்ச்சி

3.  திருத்தந்தையின் டுவிட்டர் கடவுளின் அன்பு இலவசமானது

4. கத்தோலிக்க, புத்த உரையாடல் கருத்தரங்கில் கர்தினால் Tauran

5. விமான நிலைய அருள் பணியாளரின் கருத்தரங்கு செய்தி

6. கேரளாவில் மரியன்னை கோயில் மீது தாக்குதல்

7. பிறரன்பு சகோதரிகள் சபையின் முன்னாள் தலைவி காலமானார்
------------------------------------------------------------------------------------------------------

1.  மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக உழைக்கிறது திருப்பீடம்

ஜூன்,23,2015. அரசியலின் அதிகாரப் போட்டிகளில் எவ்விதத்திலும் தலையிடாத திருப்பீடம், மக்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை மனதில்கொண்டு ஹெல்சின்கி ஒப்பந்தத்தில் தலையிட்டது எனக் கூறினார் திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் 1975ம் ஆண்டு பின்லாந்தின் ஹெல்சின்கியில் 35 நாடுகளால் கையெழுத்திடப்பட்டதன் 40ம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, இத்தாலிய செனட் அவை ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த திருப்பீடம், இவ்வொப்பந்தத்திற்கு தன் முழு ஆதரவையும் வழங்கியது என்றார்.
தனியார்களின், குழுக்களின் மத விடுதலையை ஹெல்சின்கி ஒப்பந்தம் வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியக் கர்தினால் பரோலின் அவர்கள், சமூக அமைதிக்கு இவைகளும் இன்றியமையாத தேவை என்றார்.
ஐரோப்பியர்களின் உரிமைகளைக் காப்பதிலும், அவர்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதிலும், கடந்த காலங்களில், கிறிஸ்தவம் ஆற்றிவந்துள்ள பணிகளையும் தன் உரையில் குறிப்பிட்டார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2.  திருத்தந்தையுடன் உணவருந்தியதில் இளங்குற்றவாளிகள் பெரும் மகிழ்ச்சி

ஜூன்,23,2015. இளம் குற்றவாளிகளை சந்தித்து உரையாடுவதில் எப்போதும் ஆர்வம் காட்டிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூரின் நகரிலும் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி தருவதாக இருந்தது என அறிவித்தார் சலேசிய சபை அருள்பணியாளர் தொமெனிக்கோ ரிக்கா.
கடந்த 35 ஆண்டுகளாக தூரின் நகரில் அமைந்துள்ள Ferrante Aporti இளங்குற்றவாளிகள் சிறையின் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றிவரும் அருள்பணி ரிக்கா அவர்கள் உரைக்கையில், 17 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்ட 11 இளங்குற்றவாளிகள், திருத்தந்தையுடன் ஞாயிறன்று தூரின் பேராயர் இல்லத்தில் உணவருந்தியது, வாழ்நாளில் தனக்கும் அந்த இளையோருக்கும் மறக்கமுடியாத சம்பவம் என்றார்.
மேலும்தூரின் நகரில் இரு நாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தாத்தா, பாட்டியின் திருமணமும், தன் தந்தையின் திருமுழுக்கும் இடம்பெற்ற கோவிலைச் சென்று தரிசித்தார். இப்பயணத்தின்போது தூரின் பேராயர் இல்லத்தில் தன் உறவினர்கள் ஏறத்தாழ முப்பது பேரையும் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் பூர்வீகம் தூரின் நகருக்கு 45 மைல்கள் தென்கிழக்கேயுள்ள Portocomaro எனும் சிறு நகராகும். இங்கிருந்து, திருத்தந்தையின் தந்தை, தன் இளவயதில் அவரின் பெற்றோருடன், 1929ம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி

3.  திருத்தந்தையின் டுவிட்டர் கடவுளின் அன்பு இலவசமானது

ஜூன்,23,2015. கடவுளின் அன்பு இலவசமானது, அதற்குக் கைமாறாக அவர் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற கருத்தை மையப்பொருளாக வைத்து  தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
'கடவுளின் அன்பு இலவசமானது. அதற்கு கைமாறாக இறைவன் நம்மிடம் எதையும் கேட்பதில்லை. அவர் நம்மிடம் கேட்பதெல்லாம், அவரின் அன்பு நம்மால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதே' என தன் டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கத்தோலிக்க, புத்த உரையாடல் கருத்தரங்கில் கர்தினால் Tauran

ஜூன்,23,2015. நம் வாழ்வு குறித்த மறையுண்மைகளையும், முழு உண்மையையும் கண்டு கொள்ள நாம் மேற்கொள்ளும் தேடலின் ஒரு வெளிப்பாடாக கத்தோலிக்க, புத்த மதங்களுக்கிடையே உரையாடல் இடம்பெறுகின்றது என்று கூறினார் பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean Louis Tauran.
பல்சமய உரையாடல் திருப்பீட அவை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை ஆகியவற்றின் உதவியுடன், Focolare அமைப்பினர் உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய கர்தினால் தவ்ரான் அவர்கள், இக்கருத்தரங்கின் மையக்கருத்தான, 'துன்பம், விடுதலை மற்றும் உடன்பிறந்தோர் நிலை' என்பது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அமெரிக்காவில் வாழும் புத்த மதத்தினர், எவ்வாறு அங்குள்ள கத்தோலிக்கர்களுடன் இணைந்து, சமுதாயத் தீமைகளை அகற்ற உழைக்க முடியும் என்பது கர்தினால் தவ்ரான் அவர்கள் வழங்கிய துவக்க உரையின் மையக் கருத்தாக இருந்தது.
கத்தோலிக்க, புத்த கலந்துரையாடல்கள் ஓர் உள்மனப் பயணம் என்பது குறித்தும், இக்கலந்துரையாடல்களின் நோக்கங்கள் குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் தன் உரையில் குறிப்பிட்டார், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் தவ்ரான்.
கத்தோலிக்க, புத்த உரையாடல் கருத்தரங்கு, ஜூன் 23, இச்செவ்வாய் முதல், 27, வருகிற சனிக்கிழமை முடிய, உரோம் நகருக்கு அருகே அமைந்துள்ள காஸ்தல் கந்தோல்போ என்ற இடத்தில் நடைபெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. விமான நிலைய அருள் பணியாளரின் கருத்தரங்கு செய்தி

ஜூன்,23,2015. பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் கூடிவந்து, பிரியும் இடமாக விளங்கும் விமான நிலையங்கள், சிறப்பு அக்கறைக்கு உரிய இடங்களாக இந்நாட்களில் மாறிவருகின்றன என்று, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பணியாற்றும் திருப்பீட அவை வெளியிட்ட செய்தி கூறுகிறது.
இம்மாதம் 10ம் தேதி முதல், 13ம் தேதி வரை, உரோம் நகரில் இடம்பெற்ற விமான நிலைய அருள் பணியாளரின் 16வது கருத்தரங்கில், வெளியிடப்பட்ட ஓர் ஏட்டில் இச்செய்தியை வழங்கியுள்ள திருப்பீட அவை, பல்வேறு மக்களின் தேவைகளை உணர்ந்தவர்களாக, தங்கள் மேய்ப்புப்பணியின் முக்கியத்துவத்தை அறிந்து, அருள் பணியாளர்கள் செயலாற்ற வேண்டியக் கட்டாயம் உள்ளது என்று கூறுகிறது.
விமானப் பயணிகளுக்கு, திரு அவையை ஒரு கனிவுள்ளத் தாயாகக் காண்பிப்பது, அங்கு பணிபுரியும் அருள் பணியாளர்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்தியுள்ள இந்த ஏடு, நல்மனம் கொண்ட மக்களுடன் இணைந்து, பொது நலனுக்காக உழைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
உலகின் 24 நாடுகளின் 36 அனைத்துலக விமானத் தளங்களில் பணியாற்றிவரும் 94 கத்தோலிக்க அருள் பணியாளர்கள், இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கேரளாவில் மரியன்னை கோயில் மீது தாக்குதல்

ஜூன்,23,2015. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தங்கசேரி எனும் இடத்தில், திருச்சிலுவை கத்தோலிக்க ஆலயத்தின் அருகே அமைந்துள்ள, அன்னைமரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறு கோவில் மீது இச்செவ்வாய்க் கிழமை அதிகாலை சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோயிலுக்குள் எச்சரிக்கைகள் தாங்கிய சில காகிதங்கள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அவற்றில், ஆயர்  ஜெரோம் நகர் வணிக வளாகம் குண்டு வைத்து தகர்க்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இதனையடுத்து, மரியன்னை கோயிலுக்கு முன்னர் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள், கைவிரல் ரேகை பதிவை சேகரித்ததுடன், கொல்லம் மாவட்டம் மேற்கு சரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

ஆதாரம்: Dinamalar/வத்திக்கான வானொலி.

7. பிறரன்பு சகோதரிகள் சபையின் முன்னாள் தலைவி காலமானார்

ஜூன்,23,2015. அன்னை தெரேசாவுக்குப் பின், 1997ம் ஆண்டுமுதல், 12 ஆண்டுகள் பிறரன்பு சகோதரிகள் துறவு சபையை வழிநடத்தி வந்த  அருள்சகோதரி நிர்மலா ஜோஷி அவர்கள், இத்திங்கள் இரவு இறைபதம் சேர்ந்தார்.
அன்னை தெரேசாவின் பிறரன்புப் பணிகளால் கவரப்பட்டு, கிறிஸ்தவராக திருமுழுக்குப் பெற்று, பின்னர் பிறரன்பு சகோதரிகள் சபையிலும் இணைந்த சகோதரி நிர்மலா அவர்கள், தன் 81ம் வயதில் காலமானார்.
1934ம்ஆண்டு ராஞ்சியில் பிறந்த சகோதரி நிர்மலா, சில காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். தேச நலனுக்கு ஆற்றியுள்ள பணிகளுக்கென இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான 'பத்ம விபூஷன் விருதையும், 2009ம் ஆண்டில் பெற்றுள்ளார் சகோதரி நிர்மலா.
சகோதரி நிர்மலாவின் இறுதிச் சடங்கு இப்புதன் மாலை உள்ளூர் நேரம் 4 மணிக்கு பிறரன்பு சகோதரிகளின் கொல்கத்தா தலைமையில்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட, பல தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.
"அன்னை தெரசாவுக்கு பிறகு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அறக்கட்டளையை கவனித்து வந்த சகோதரி நிர்மலா ஜோஷி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. கொல்கத்தாவும், இந்த உலகமும் அவரது இழப்பால் வாடும்" என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மம்தா.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், "சகோதரி நிர்மலா, தனது வாழ்நாளை ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்தவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் சகோதரிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான வானொலி.

No comments:

Post a Comment