Tuesday 16 June 2015

செய்திகள்-13.06.15

செய்திகள்-13.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-கத்தோலிக்க இயக்கங்கள் திருஅவைக்கு மூலதனம்

2.  மனித மாண்பையும், உறுதியான சமூகத்தையும் ஊக்கப்படுத்துங்கள்

3. திருத்தந்தை வருகிற நவம்பரில் ஆப்ரிக்காவுக்குத் திருத்தூதுப் பயணம்

4. கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் சிறப்பிக்கப் பரிந்துரை

5. அருள்பணியாளர் கனிவுடன் மேய்ப்புப்பணியாற்ற வலியுறுத்தல்

6. வளர்ந்துவரும் கத்தோலிக்கரின் எண்ணிக்கைக்கேற்ப பங்குகள் இல்லை

7. CONMEBOLலிருந்து நன்கொடைகள் பெறுவது நிறுத்தி வைப்பு

8. முதல் அனைத்துலக ஆல்பினிசம் விழிப்புணர்வு நாள் ஜூன் 13

9. மாபெரும் சுதந்திர அறிக்கை கையெழுத்திடப்பட்டதன் 800ம் ஆண்டு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-கத்தோலிக்க இயக்கங்கள் திருஅவைக்கு மூலதனம்

ஜூன்,13,2015. சாரணர் இயக்கம் போன்ற கத்தோலிக்க இயக்கங்கள் திருஅவைக்கு மூலதனம், எல்லாத் துறைகளையும் எல்லாப் பகுதிகளையும் நற்செய்தி அறிவிக்கத்  தூய ஆவியார் தூண்டுகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமையன்று தான் சந்தித்த இத்தாலிய கத்தோலிக்க சாரணர் இயக்கத்தின் ஏறக்குறைய ஒரு இலட்சம் உறுப்பினர்களிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் இத்தாலியத் திருஅவையில் மதிப்புமிக்க அங்கமாக உள்ளனர் என்று கூறினார்.
பங்குத் தளங்களோடும் மறைமாவட்டங்களோடும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் சாரணர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இச்சந்திப்புக்கு அதிக அளவில் வந்துள்ள அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.
நற்செய்தியைப் புதிய வழியில் அறிவிப்பதற்கும், சமுதாயத்தில் உரையாடலுக்குப் புதிய சக்தியை அளிப்பதற்கும் சாரணர் இயக்கத்தினர் திருஅவைக்கு உதவ முடியும் என்றுரைத்த திருத்தந்தை, பெரிய கிறிஸ்தவ சமூகத்தின் உறுப்பினர்கள் என்பதை சாரணர்கள் எப்போதும் உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இத்தாலியின் வடக்கிலிருந்து 608, மத்திய பகுதியிலிருந்து 403, தெற்கு மற்றும் தீவுப் பகுதிகளிலிருந்து 550 என சாரணர் குழுக்களின் ஏறக்குறைய ஒரு இலட்சம் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2.  மனித மாண்பையும், உறுதியான சமூகத்தையும் ஊக்கப்படுத்துங்கள்

ஜூன்,13,2015. இத்தாலிய நீதித்துறை உயர் அவையின் 200 உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசு அதிகாரிகள், மனிதரின் நலனையும், சமூகத்தின் நிலையான தன்மையையும் ஊக்கப்படுத்துவது இன்றியமையாதது என்று கூறினார்.
உலகத் தாராளமயமாக்கல், குழப்பத்தையும், சிதறிய குறிக்கோளையும் தன்னோடு கொண்டிருந்து, சமூகக் கட்டமைப்புக்குப் புறம்பான கூறுகளையும், விதிமுறைகளையும், பழக்கங்களையும் புகுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு அதிர்ச்சியை அளிக்கும் இத்தகைய சூழலில், மனிதர் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு அவசியமான உறுதியான சமூகத்தை அமைப்பது அரசு அதிகாரிகளின் கடமை என்பதையும் கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சட்டம் மீறப்படும்போது அதில் தலையிட நீதிபதிகள் அழைக்கப்படுகின்றனர் என்றும், நீதி வழங்கும்போது இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதரின் மதிப்பில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட இந்த நீதித்துறை அவையின் உதவித் தலைவர் Vittorio Bachelet அவர்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, கிறிஸ்தவ நீதிபதியான இந்த மனிதரின் சாட்சிய வாழ்வு, நீதித்துறையின் உறுப்பினர்களைத் தொடர்ந்து வழிநடத்தட்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை வருகிற நவம்பரில் ஆப்ரிக்காவுக்குத் திருத்தூதுப் பயணம்

ஜூன்,13,2015. வருகிற நவம்பரில் ஆப்ரிக்காவுக்கு, குறிப்பாக, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, உகாண்டா, முடிந்தால் கென்யா ஆகிய நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இவ்வெள்ளி மாலையில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் ஜான் லாத்தரன் பசிலிக்காவில் நடைபெறும் மூன்றாவது உலக அருள்பணியாளர் தியானத்தில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய ஆயிரம் அருள்பணியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த திருத்தந்தை, ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணம் பற்றிய கேள்விக்குப் பதில் கூறியபோது இவ்வாறு கூறினார்.
இறைவன் விரும்பினால் வருகிற நவம்பரில் ஆப்ரிக்காவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அரசுத்தலைவர் மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் அங்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
உகாண்டாவில் 22 மறைசாட்சிகள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வு முடிந்திருந்தாலும், சற்று தாமதமாக அங்குச் செல்வதாகவும் தெரிவித்த திருத்தந்தை, கென்யா செல்வது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
உகாண்டாவில் 1880களில் 22 பேர் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொலை செய்யப்பட்டனர். இம்மறைசாட்சிகளை 1964ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி புனிதர்கள் என்று அறிவித்தார் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல்.
இஞ்ஞாயிறன்று நிறைவடையும் இந்த மூன்றாவது உலக அருள்பணியாளர் தியானத்தில் 5 கண்டங்களிலிருந்து 90 நாடுகளின் ஏறக்குறைய ஆயிரம் அருள்பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் சிறப்பிக்கப் பரிந்துரை

ஜூன்,13,2015. கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை அனைத்துக் கிறிஸ்தவ சபையினரும் ஒரே நாளில் சிறப்பிக்கும் பரிந்துரையை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 
மூன்றாவது உலக அருள்பணியாளர் தியானத்தில் கலந்துகொள்ளும் அருள்பணியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த திருத்தந்தை, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் சிறப்பிக்க கத்தோலிக்கத் திருஅவை ஆவல் கொண்டுள்ளது என்றும் கூறினார்.
கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பை மனதில் வைத்துப் பேசிய திருத்தந்தை, சுற்றுச்சூழல் குறித்த தனது திருமடலை வெளியிடுவதற்கு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதையும் குறிப்பிட்டார்.
முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு வேறு நிகழ்வு இருப்பதால், பேராயர் Zizoulas அவர்கள் கலந்து கொள்வார், இவ்வாறு இந்தத் திருமடல், முக்கிய ஆர்த்தடாக்ஸ் இறையியலாளர்களில் ஒருவரால் வழங்கப்படும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 
இச்சந்திப்பில் இந்தியப் பெருங்கடலில் குடிபெயர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை, குடிபெயர்வோரைத் திருப்பி அனுப்புவது பாவம் என்று எச்சரித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அருள்பணியாளர் கனிவுடன் மேய்ப்புப்பணியாற்ற வலியுறுத்தல்

ஜூன்,13,2015. உரோம் நகரில் மூன்றாவது உலக அருள்பணியாளர் தியானத்தில் கலந்து கொள்ளும் ஏறக்குறைய ஆயிரம் அருள்பணியாளர்களுக்கு இவ்வெள்ளி மாலை புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் இறைமக்கள் மீது இரக்கம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
விசுவாசிகள் மறையுரைகளை எட்டு நிமிடத்திற்குமேல் கேட்க முடியாது, உங்கள் இதயத்திலிருந்து நீங்கள் பேச வேண்டுமென்று இறைமக்கள் விரும்புகின்றனர், ஒரு கருத்து, ஓர் உருவம், ஓர் உணர்வு இவற்றையே ஒரு மறையுரை கொண்டிருக்க வேண்டும், மறையுரை ஒரு சொற்பொழிவோ அல்லது மறைக்கல்வியில் எடுக்கும் ஒரு பாடமோ அல்ல என்றும் கூறினார் திருத்தந்தை.
அருள்பணியாளர்களாகிய நீங்கள் மறையுரைகளை ஒன்று சேர்ந்து தயார் செய்யுங்கள், இறையாட்சி பற்றி, இயேசுவின் மலைப்பொழிவு போதனை பற்றி, இதயத்தை மாற்றும் அன்பு பற்றி மறையுரையாற்றுங்கள், கொலைசெய்யும் பயங்கரவாதத்தைவிட கடவுளின் அன்பு வல்லமை மிக்கது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவை, இயேசு இல்லாத, இரக்கம் இல்லாத திருஅவையாக இருக்கக் கூடாது, திருஅவை எப்போதும் அன்னையாக இருக்குமாறு செயல்படுங்கள் என்று தயவுடன் கேட்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை, அருள்பணியாளர்கள் இறைவனின் கனிவின் திருப்பணியாளர்களாக இருக்க வேண்டும், கனிவின் திருப்பணி இறையருள் நிறைந்தது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. வளர்ந்துவரும் கத்தோலிக்கரின் எண்ணிக்கைக்கேற்ப பங்குகள் இல்லை

ஜூன்,13,2015. உலகளாவிய கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, அருள்பணியாளர்களும், பங்குத்தளங்களும் இவர்களின் ஆன்மீகக் காரியங்களை நிறைவேற்றும் சவாலை எதிர்கொள்கின்றனர் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகின்றது.
உலகில், குறிப்பாக, ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை வளர்ந்துவருவதற்கேற்ப, அருள்பணியாளர்கள் மற்றும் பங்குத் தளங்களின் எண்ணிக்கை இல்லை என்றும், கத்தோலிக்கர் அருளடையாளங்களைப் பெறுவதற்குக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கின்றன என்றும் அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது
21ம் நூற்றாண்டில் திருஅவை இத்தகைய சவாலை எதிர்நோக்குகின்றது என்று ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்திலுள்ள CARA ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1980ம் ஆண்டிலிருந்து ஆசியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 63 விழுக்காடு உயர்ந்துள்ளது மற்றும் திருப்பலிக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அவ்வளவாகக் குறையவில்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி                    

7. CONMEBOLலிருந்து நன்கொடைகள் பெறுவது நிறுத்தி வைப்பு

ஜூன்,13,2015. இன்று திருஅவை மறைசாட்சிகளின் திருஅவை, இதற்கு எண்ணற்ற வீரத்துவமான சாட்சிகள் உள்ளனர், இந்த மறைசாட்சிகளின் துணிச்சலிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம்என்ற வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. 
மேலும், உலகளாவிய கால்பந்து கூட்டமைப்பில் கடந்த மாதத்தில் எழுந்துள்ள ஊழல் விவகாரத்தால், தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பிலிருந்து நன்கொடைகள் பெறுவதை, அந்த ஊழல் குறித்த விசாரணைகள் முடியும்வரை வத்திக்கான் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இளையோர் பிறரன்பு அமைப்புக்கு, CONMEBOL என்ற தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு நன்கொடைகள் வழங்குவது குறித்து ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி நன்கொடைகள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 11ம் தேதி சிலே நாட்டில் தொடங்கியுள்ள அமெரிக்க கால்பந்து விளையாட்டின்போது போடப்படும் ஒவ்வொரு பந்துக்கும் பத்தாயிரம் டாலரை, Scholas Occurrentes வத்திக்கான் பிறரன்பு அமைப்புக்கு வழங்குவதாக, CONMEBOL கூட்டமைப்பு உறுதியளித்திருந்தது.
FIFA என்ற உலகளாவிய கால்பந்து கூட்டமைப்பின் ஏழு அதிகாரிகளில் ஒருவராகிய வெனெசுவேலா நாட்டின் Rafael Esquivel அவர்கள், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த மே 27ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி

8. முதல் அனைத்துலக ஆல்பினிசம் விழிப்புணர்வு நாள் ஜூன் 13

ஜூன்,13,2015. Albinism நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அவர்களுடன் சேர்ந்து போராடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் இயக்குனர் Zeid Ra'ad Al Hussein
ஜூன், 13 இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட முதல் அனைத்துலக ஆல்பினிசம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு இவ்வாறு அழைப்பு விடுத்த Al Hussein அவர்கள், எல்லாச் சமூகங்களிலும் Albinism நோயால் தாக்கப்பட்டவர்கள் உள்ளனர், இவர்கள் அனுபவிக்க வேண்டிய மனித உரிமைகளை உலகினர் எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பெற்றோரின் ஒருவகை மரபணுவால் வெண்மை நிற வியாதியால் தாக்கப்படும் Albinism நோயாளிகள், கடும் துன்பங்களை, சில நேரங்களில் விஷஊசி போட்டுக் கொல்லப்படும் கொடுமையையும் எதிர்கொள்கின்றனர்.
குறைந்தது 25 ஆப்ரிக்க நாடுகளில் Albinism நோயாளிகள் கொல்லப்படுகின்றனர், உறுப்புகள் அகற்றப்படுகின்றனர் அல்லது தாக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறார்.
21ம் நூற்றாண்டில் இத்தகைய பாகுபாடுகளுக்கோ அல்லது கொடுமைகளுக்கோ இடமில்லை என்று கூறினார் Al Hussein.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

9. மாபெரும் சுதந்திர அறிக்கை கையெழுத்திடப்பட்டதன் 800ம் ஆண்டு

ஜூன்,13,2015. நவீன சனநாயகங்களில் பொறிக்கப்பட்டுள்ள தனிமனிதச் சுதந்திரம் மற்றும் விடுதலைக்கு அடித்தள அறிக்கையாய் உலகெங்கும் போற்றப்படும் மாபெரும் சுதந்திர அறிக்கை கையெழுத்திடப்பட்டதன் 800ம் ஆண்டு நிறைவு ஜூன் 15, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படுகின்றது.
'Magna Carta' எனப்படும் இந்த அறிக்கை கையெழுத்திடப்பட்ட 800ம் ஆண்டு நிறைவு நிகழ்வை, இலண்டனின் தெற்கிலுள்ள Runnymedeல் பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் அவர்கள் தலைமையேற்று நடத்துவார். இந்த அறிக்கை, Runnymedeல் கையெழுத்தானது.
இந்த அறிக்கை கையெழுத்தான இரு மாதங்கள் சென்று திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்கள் இதனை இரத்து செய்து அந்த உடன்பாட்டின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment