Saturday 13 June 2015

செய்திகள்-11.06.15

செய்திகள்-11.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : பிரச்சனைகளைக் கண்டு விலகுவது, மனித இயல்பு
2. லாத்வியா, எஸ்தோனியா நாடுகளின் ஆயர்களுடன் திருத்தந்தை
3. திருத்தந்தை : மீட்புப்பணிகள் அனைத்தும் இலவசமானதே
4. கனடா நாட்டுப் பிரதமர் ஹார்ப்பர், திருத்தந்தையுடன் சந்திப்பு
5. இரஷ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புடின் திருத்தந்தையுடன் சந்திப்பு
6. கிறிஸ்தவர்கள் அற்ற லெபனான், ஈடுசெய்யமுடியாத இழப்பு
7. மிலான் கண்காட்சியில், திருப்பீடத்தின் தேசிய நாள்
8. இன ஒற்றுமை குறித்து அமெரிக்க ஆயர்கள் அறிக்கை
9. திருமண வாழ்வு குறித்து ஆஸ்திரேலிய மதத் தலைவர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : பிரச்சனைகளைக் கண்டு விலகுவது, மனித இயல்பு

ஜூன்,11,2015. சமுதாயத்தின் பிரச்சனைகளைக் காணும்போது, அவற்றை வேறு யாராவது ஒருவர் செய்வார் என்று நமக்குள் சொல்லிக்கொண்டு விலகிச் செல்வது, மனிதராகிய நம் ஆழ்மனதில் ஓடும் எண்ணங்களில் ஒன்று என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூன் 6, கடந்த சனிக்கிழமை முதல், ஜூன் 15, வருகிற திங்கள் முடிய உரோம் நகரில், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAO நடத்திவரும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்றுவரும் 450க்கும் அதிகமான உறுப்பினர்களை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரச்சனைகளைக் கண்டு விலகும் மனித இயல்பு குறித்து தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற FAO கருத்தரங்கில் தான் கலந்துகொண்டதன் நினைவுகளை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அக்கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவுகள், வெறும் ஏட்டளவு முடிவுகளாக இல்லாமல், செயல்வடிவம் பெற்றிருக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
பட்டினியால் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும், உணவு ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்ற நிலையை அடைய இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
உலகினர் பசியைப் போக்குவதுபற்றி சிந்திக்கும் வேளையில், உலகில் வீணாக்கப்படும் உணவைக் குறித்தும், உணவுப் பயிர்களுக்குப் பதிலாக, இலாபம் கொணரும் வர்த்தகப் பயிர்கள் நம் நிலங்களை ஆக்ரமித்துவருவது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
உலகில் உணவுப் பொருள்களின் விலை, 2008ம் ஆண்டு இரட்டிப்பானது என்றும், அதன்பின்னர் விலை உயர்வு ஒரு சமநிலையை அடைந்தாலும், பொதுவாக, உணவுப் பொருள்களின் விலை, வறியோருக்கு எட்டாத உயரத்தில் உள்ளது என்பதும் வேதனையான ஒரு உண்மை என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
தண்ணீரின் பகிர்வும், தகுந்த வகையில் விளைநிலங்களைப் பயன்படுத்துவதும் நாம் சந்தித்துவரும் உச்சநிலை பிரச்சனைகள் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் FAO பன்னாட்டு உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. லாத்வியா, எஸ்தோனியா நாடுகளின் ஆயர்களுடன் திருத்தந்தை

ஜூன்,11,2015. சர்வாதிகார மன்னர்களின் பிடியிலிருந்து தப்பித்துள்ள நாடுகள், இறைநம்பிக்கையின்மை, அனைத்தையும் நிரந்தரமற்றதாய் காணும் நிலை ஆகிய கண்ணோட்டங்களால் உருவாகும் அடக்குமுறைகளில் தற்போது தவித்து வருகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, திருத்தந்தையைச் சந்திக்க உரோம் நகர் வருகை தரும் ஆயர்களின் வரிசையில், லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஆயர்கள், வத்திக்கானில் மேற்கொண்டுள்ள 'அத் லிமினா' சந்திப்பின்போது, அவர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
சர்வாதிகார மன்னரின் ஆதிக்கமாயினும், தவறான கொள்கைகளின் ஆதிக்கமாயினும், அவற்றின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கும் பொறுப்பு ஆயர்களுக்கு உண்டு என்று திருத்தந்தை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
மக்களை விடுவிக்கும் இப்பணியில், ஆயர்கள் மனம் தளராமல் ஈடுபடவும், மனம் தளரும் அருள் பணியாளர்களை தகுந்த வகையில் ஊக்கமூட்டவும் ஆயர்களுக்கு பரிந்துரைகளை வழங்கினார் திருத்தந்தை.
அர்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டைக் கொண்டாடிவரும் இவ்வேளையில், அர்ப்பணிக்கப்பட்டோர் ஆற்றும் பணிகளைவிட, அவர்கள் வாழ்வால் நற்செய்திக்கு சான்று பகரவேண்டும் என்று ஆயர்களுக்கு வழங்கிய உரையில் திருத்தந்தை வலியுறுத்தினார்.
பொருளாதாரச் சரிவினால், வேற்றுநாடுகளுக்கு வேலைத் தேடிச்செல்லும் சூழல் எழுவதால், பல குடும்பங்களில், தாய் அல்லது தந்தை மட்டுமே தங்கியிருக்கும் நிலை உருவாகி உள்ளதென்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்தகையக் குடும்பங்கள், ஆயர்களின் தனிப்பட்ட கவனத்தையும், பராமரிப்பையும் பெறவேண்டுமென்று விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : மீட்புப்பணிகள் அனைத்தும் இலவசமானதே

ஜூன்,11,2015. செல்வத்தின் வழியே மீட்படையலாம் என்ற தப்பெண்ணத்தை வீசியெறிந்தவர்களாய், நன்னெறியில் நடைபயின்று, பிறருக்குப் பணியாற்றி, நற்செய்தியை இலவசமாக வழங்குபவர்களாக கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை அறிவிக்க இயேசு தன் சீடர்களை அனுப்பியது பற்றிய இன்றைய திருப்பலி வாசகத்தை மையப்படுத்தி, உள்மன பயணம் என்பது நற்செய்தியை அறிவிக்க உதவுகின்றது என்று எடுத்துரைத்தார்.
திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் தாங்கள் பெற்றதை பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வரவில்லையெனில், அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாது, மற்றும் தங்களிடமிருக்கும் நல்லதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள மறுப்பவர் ஆகின்றார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வேறு இடங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவிக்க தயாரிக்கும் விதமாக, முதலில் உள்மன பயணம் தேவைப்படுகின்றது, அதற்கு செபமும், தியான வாழ்வும் இன்றியமையாதவை என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, நற்செய்தியை எடுத்துச் செல்பவர், உறுதியுடையவராக இருப்பதற்கு இதுவே உதவுகின்றது என்றார்.
மற்றவர்களுக்குச் சேவை செய்யாத வாழ்வு கிறிஸ்தவ வாழ்வாக இருக்கமுடியாது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்நம் கிறிஸ்தவக் கடமைகளுள், உதவித் தேவைப்படுபவர்களுக்கு ஆற்றும் சேவையும் உள்ளடங்கும் என்றார்.
இலவசமாகப் பெற்றதை இலவசமாகவே வழங்கும்படி இயேசு எதிர்பார்ப்பதை மனதில்கொண்டு, நம் அனைத்து சேவைகளும் இலவசமானதாகவே இருக்கவேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், "எங்கு வேலையில்லையோ, அங்கு மாண்பும் இல்லை" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கனடா நாட்டுப் பிரதமர் ஹார்ப்பர், திருத்தந்தையுடன் சந்திப்பு

ஜூன்,11,2015. ஜூன் 11, இவ்வியாழன் காலை, கனடா நாட்டுப் பிரதமர், Stephen Harper அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருப்பீடத்திற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள் குறித்தும், மதச் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் நிலைநிறுத்த, கனடா அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
மத்தியக் கிழக்குப் பகுதியிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் அமைதியைக் கொணர மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பிற்குப் பின், கனடா பிரதமர், Harper அவர்கள், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்தார்.
மேலும், "எங்கு வேலையில்லையோ, அங்கு மாண்பும் இல்லை" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இரஷ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புடின் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஜூன்,11,2015. ஜூன் 10, இப்புதன் மாலை ஆறுமணியளவில் இரஷ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புடின் அவர்கள், வத்திக்கானுக்கு வருகைதந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.
புதன் மாலை 6.15 மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பு, 50 நிமிடங்கள் நீடித்தது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை, அருள் பணியாளர் பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
உக்ரெயின் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் நிலவிவரும் மோதல்கள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது என்றும், உக்ரெயினில் அமைதியை நிலைநாட்ட உண்மையான உரையாடல்கள் இடம்பெறுவதை தான் விரும்புவதாக திருத்தந்தை கூறினார் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில், குறிப்பாக, சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் அமைதி உருவாகவேண்டியதன் அவசரத்தையும், அங்கு கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் தீரவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை, அரசுத் தலைவர் புடின் அவர்களிடம் எடுத்துரைத்தார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.
இருவருக்கும் இடையே பரிசுப் பொருள்கள் பரிமாறப்பட்டபோது, அமைதியின் வானத் தூதரின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பதக்கத்தை, திருத்தந்தை, அரசுத் தலைவருக்கு அளித்தார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.
இரஷ்ய அரசுத் தலைவர் புடின் அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்த அதேவேளையில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர், பால் ரிச்சர்ட் காலகர் அவர்களும், இரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், செர்கே லாவ்ரோவ் (Sergey Lavrov) அவர்களும் சந்திப்பில் ஈடுபட்டனர் என்று திருப்பீடப் பேச்சாளர், அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கிறிஸ்தவர்கள் அற்ற லெபனான், ஈடுசெய்யமுடியாத இழப்பு

ஜூன்,11,2015. லெபனான் நாட்டில் கிறிஸ்தவர்களின் பிரசன்னம் குறைந்து வருவது, மற்றும் இல்லாமல் போவது, லெபனான் நாட்டிற்கு மட்டுமல்ல, மத்தியக் கிழக்குப் பகுதி முழுமைக்கும் ஈடுசெய்யமுடியாத ஓர் இழப்பு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட உச்சநீதி மன்றத்தின் தலைவராக பணியாற்றும் கர்தினால் தொமினிக் மம்பெர்த்தி அவர்கள், மே மாதம் 29ம் தேதி முதல், ஜூன் 4ம் தேதி முடிய, லெபனான் நாட்டில் மேற்கொண்ட ஒரு பயணத்தைக் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு, இப்புதனன்று அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தலைவர், கர்தினால் பெக்காரா புத்ரோஸ் ராய் அவர்களின் அழைப்பின் பேரில் தான் மேற்கொண்ட இப்பயணத்தில், லெபனான் நாட்டின் ஹரிச்சாவில் அமைந்துள்ள (Harissa) மரியன்னையின் திருத்தலத்தில், மே வணக்க மாதத்தின் நிறைவுத் திருப்பலியாற்றியது ஓர் உன்னத அனுபவமாக இருந்ததென்று கர்தினால் மம்பெர்த்தி அவர்கள் தன்  பேட்டியில் குறிப்பிட்டார்.
லெபனான் நாட்டிலிருந்து கிளம்புவதற்கு முந்திய நாள், கத்தோலிக்கர், கிறிஸ்தவர், ஆர்த்தடாக்ஸ் சபைகள், மற்றும் இஸ்லாமியரின் இரு பிரிவினர் அனைவரோடும் மேற்கொண்ட ஓர் உரையாடல் கூட்டம், தன் பயணத்தின் மற்றோர் உச்சநிலை அனுபவமாக இருந்ததென்று கர்தினால் மம்பெர்த்தி அவர்கள் கூறினார்.
கிறிஸ்தவர்கள் அல்லாத ஒரு மத்தியக் கிழக்குப் பகுதியை நம்மால் எண்ணிப்பார்க்க இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை தன் பேட்டியில் நினைவுகூர்ந்த கர்தினால் மம்பெர்த்தி அவர்கள், லெபனான் நாட்டில் குறைந்து, அழிந்துவரும் கிறிஸ்தவர்களின் பிரசன்னம், மத்தியக் கிழக்குப் பகுதியில் எதிர்மறைத் தாக்கங்களை உருவாக்கும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. மிலான் கண்காட்சியில், திருப்பீடத்தின் தேசிய நாள்

ஜூன்,11,2015. தொழில்துறை, பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், தனிப்பட்டவர்களும், நிறுவனங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை, கத்தோலிக்கத் திருஅவை கூர்ந்து கவனித்து வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மிலான் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கண்காட்சியின் ஒரு நிகழ்வாக, ஜூன் 11, இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் தேசிய நாள் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் அலுவலகத்தின் உயர் அதிகாரி, அருள்பணி Angelo Becciu அவர்கள், பல்வேறு துறைகளில் திருஅவையும், திருப்பீடமும் காட்டிவரும் ஆர்வத்தைச் சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் துறைகளும் இணைந்து, முழு மனித வளர்ச்சிக்குப் பயன்படவேண்டும் என்பதே, திருஅவையின் முக்கியக் குறிக்கோள் என்று அருள்பணி Becciu அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
"பூமிக் கோளத்திற்கு உணவூட்டுதல். வாழ்வுக்குரிய சக்தி" என்ற தலைப்பில் கொண்டாடப்படும் திருப்பீடத்தின் தேசிய நாள் நிகழ்வுகளில், திருப்பீட கலாச்சார அவைத் தலைவர், கர்தினால் Gianfranco Ravasi, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Angelo Bagnasco, மிலான் பேராயர், கர்தினால் Angelo Scola ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. இன ஒற்றுமை குறித்து அமெரிக்க ஆயர்கள் அறிக்கை

ஜூன்,11,2015. மக்களைக் காக்கும் நோக்கத்துடன் காவல் துறையில் பணியாற்றுவோர், அதே மக்களிடமிருந்து மனதளவில் விலகி இருக்கும் நிலை, வருத்தத்திற்குரியது என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
அண்மைய மாதங்களில், காவல் துறையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளால், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சில நகரங்களில் கறுப்பின மக்கள் பெரும் வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர்.
கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே மோதல்களை உருவாக்கியுள்ள இச்செயல்களையும், காவல் துறையினருக்கு எதிராக எழுந்த போராட்டங்கள், வரம்பு மீறிச் சென்றதையும் கண்டனம் செய்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஆயர் பேரவையின் தலைவரும், Louisville பேராயருமான Joseph Kurtz அவர்கள் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், தியாக உள்ளத்துடன் காவல் துறையினர் ஆற்றும் பணிகளை, பாராட்டியுள்ளார்.
கடினமானச் சூழல்களில் பணியாற்றும் காவல் துறையினருக்கு செபிக்கும்படி விண்ணப்பிக்கும் இவ்வறிக்கை, மனிதாபிமான உணர்வுடன் காவல் துறையினர், நேரிய வழிகளில் சட்டத்தைக் காப்பாற்ற முயலவேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளது.
கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே பாகுபாடுகள் மிகுந்திருந்த காலத்திலேயே, 1947ம் ஆண்டு, கர்தினால் ஜோசப் ரிட்டர் அவர்கள், இவ்விரு இனத்தைச் சார்ந்த குழந்தைகள் ஒன்றாகக் கல்வி கற்கவேண்டும் என்ற எண்ணத்தில், St Louisல் இயங்கிவந்த கத்தோலிக்கப் பள்ளிகளில் இன வேறுபாட்டை ஒழித்தார் என்ற வரலாற்று நிகழ்வு, இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அனைத்து மக்களிடையே அமைதி நிலவ செபித்தல், மனித மாண்பை உணரும் வண்ணம், இறைவார்த்தையையும், திருஅவை படிப்பினைகளையும் கற்றறிதல், வேற்றின மனிதரோடு உண்மையான உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ளுதல், கத்தோலிக்கப் பங்குகளும், நிறுவனங்களும் அனைவரையும் வரவேற்கும் மனப்பான்மையில் வளர்தல், காவல் துறையினரைச் சரிவரப் புரிந்துகொண்டு, அவர்கள் ஆற்றும் பணிகளுக்கு நன்றி சொல்லுதல் ஆகிய ஐந்து பரிந்துரைகளை, அமெரிக்க ஆயர்கள்  இறுதியில் முன்வைத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

9. திருமண வாழ்வு குறித்து ஆஸ்திரேலிய மதத் தலைவர்கள்

ஜூன்,11,2015. ஓர் ஆணும், பெண்ணும் சுதந்திரமான சம்மதத்துடன் இணைந்துவரும் வாழ்வே, திருமண வாழ்வு என்று, 1961ம் ஆண்டு, ஆஸ்திரேலியா வகுத்துக்கொண்ட இலக்கணத்தை, ஆஸ்திரேலிய அரசு பின்பற்றவேண்டும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 38 மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய பாராளுமன்றம், திருமண உறவைப் பற்றிய மாற்றுக் கருத்துக்களை விவாதித்துவரும் இவ்வேளையில், கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன், லூத்தரன், ஆர்த்தடாக்ஸ் ஆகிய பல சபையினர் உட்பட, 38 மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அரசிடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்பித்துள்ளனர் என்று ZENIT செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
1961ம் ஆண்டு, காமன்வெல்த் திருமணச் சட்டம், திருமணம் குறித்து வகுத்துள்ள இலக்கணம், நடுநிலையான, உறுதியான இலக்கணம் என்றும், அதை மாற்றவேண்டிய தேவை எதுவும் இல்லையென்றும் மதத் தலைவர்களின் விண்ணப்பம் வலியுறுத்துகிறது.
மனித குலத்தின் ஆரம்பம் முதல், இயற்கையில் உருவான ஆண், பெண் உறவு ஒன்றே, குழந்தைகள் வளர்ப்பிற்கு தகுதியான சூழலாக அமையும் என்றும், மதத் தலைவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித இயல்பிற்கு மாறுபட்ட திருமண உறவுகளை சமுதாயத்தின் மீது திணிக்கும்போது, அது மனசாட்சியுடன் தொடர்பான கட்டாயங்களையும் திணிக்கிறது என்று மதத்தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment